இலங்கைக்கு ஜப்பான் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி !

by admin

on Friday, April 26, 2024

இலங்கையின் கடற்றொழிலை வலுப்படுத்தவும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஜப்பான் வழங்கியுள்ளது.

கடற்றொழில் அமைச்சுடன் இணைந்து உள்நாட்டு கடற்றொழில் துறையை வலுப்படுத்தவும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஜப்பான் அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை வழங்கியுள்ளது.

இந்த 3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உணவு மற்றும் போஷாக்கு பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் மீன் இனப்பெருக்க நிலையங்களை ஸ்தாபித்து, மீன் வளர்ப்பு அபிவிருத்தி நிலையங்களை மேம்படுத்தி இனவிருத்தி மற்றும் வளர்ப்புத் திறனை அதிகரிக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்ட, நீர்த்தேக்கங்களில் மீன் வளர்ப்பை அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தீவு நாடுகளான ஜப்பானும் இலங்கையும் தமது பொருளாதாரங்கள் மற்றும் கலாசாரங்களில் மீன் வளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படுவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு மீன்பிடித்துறை, வரலாற்று ரீதியாக அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கி வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்