ஐபிஎல்: கருணையில்லாமல் பந்தாடப்பட்ட கடைசி ஓவர் – எப்படிப் போட்டாலும் அடித்த ரிஷப் பந்த்

குஜராத் - டெல்லி

பட மூலாதாரம், SPORTZPICS

நடப்பு ஐபிஎல் சீசனில் முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோராக மாறிவிட்டது. அந்த ரன்களுக்குள் எதிரணியை முடக்குவதற்கும் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது.

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 40-வது லீக் ஆட்டமும் இப்படித்தான் இருந்தது. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது. 225 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வி, என 8 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் டெல்லி கேபிடல்ஸ் நிகர ரன்ரேட் இன்னும் மைனசிலிருந்து மீளவில்லை, மைனஸ் 0.386 என்ற அளவில்தான் இருக்கிறது.

அதேநேரம், குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த 7 நாட்களில் சந்திக்கும் 2-ஆவது தோல்வி இதுவாகும். 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்துக்குச் சரிந்துள்ளது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.974 என்று இருக்கிறது.

குஜராத் - டெல்லி

பட மூலாதாரம், Getty Images

பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இன்னும் தலா 5 லீக் ஆட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது கடந்த முறை இருந்ததைவிட மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 10 புள்ளிகளுடன் 3 அணிகளும், 8 புள்ளிகளுடன் 3 அணிகளும் இருப்பதால், அடுத்தடுத்து எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் செல்லும் என்பதை கணிக்க முடியாததாகவும், கடும்போட்டியாகவும் இருக்கும்.

இந்த நிலையில் குஜராத் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் அடுத்துவரும் 5 லீக் ஆட்டங்களில் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வென்றால்தான் பாதுகாப்பாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அடுத்து வரும் 5 ஆட்டங்களும் கடும் சவாலானவை.

குஜராத் அணி 4 ஆட்டங்களில் வென்றால் 16 புள்ளிகளைப் பெறலாம். இந்த இதில் ஆர்சிபி அணியுடனான இரு போட்டிகளும் அடக்கம். மற்ற 3 ஆட்டங்களில் சிஎஸ்கே, கொல்கத்தா, லக்னெள அணிகளுடன் குஜராத் மோத வேண்டியிருக்கிறது.

ஒருவேளை இரு அணிகளும் அடுத்துவரும் 3 போட்டிகளில் வென்று 14 புள்ளிகள் பாதுகாப்பானது என்று கூறப்பட்டாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகளும் இன்னும் மைனசிலிருந்து மீளாதநிலையில் 14 புள்ளிகள் பெறும்போது நிகர ரன்ரேட்டையில் வாய்ப்புகளை இழக்க நேரிடும். ஆதலால், அடுத்து வரும் 5 லீக் ஆட்டங்களில் 4 ஆட்டங்களிலும் வெல்வது கட்டாயம்.

குஜராத் - டெல்லி

பட மூலாதாரம், Getty Images

குஜராத் – டெல்லி போட்டியில் என்ன நடந்தது?

நேற்றைய போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் கேப்டன் ரிஷப் பந்த், அக்ஸர் படேல் இருவரின் ஆகச்சிறந்த பேட்டிங் என்று கூறலாம். அதிலும் கேப்டன் ரிஷப் பந்த் கடைசி ஓவரில் மதம் பிடித்தயானை போன்று ஷாட்களை அடித்து, மோகித் சர்மாவை மோசமான சாதனைக்குள் தள்ளிவிட்டார். கடைசி ஓவரில் மட்டும் ரிஷப் பந்த் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 31 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் 43 பந்துகளில் 88 ரன்களுடன்(8சிக்ஸர்,5பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து விக்கெட் கீப்பிங்கிலும் இரு கேட்சுகளைப் பிடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

ரிஷப் பந்த்துக்கு துணையாக ஆடிய அக்ஸர் படேல் ஆட்ட வரிசையில் உயர்வு பெற்று 3வது வீரராகக் களமிறங்கி தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சிறப்பாகச் செய்தார். நேர்த்தியாக பேட் செய்த அக்ஸர் படேல் ஐபிஎல் தொடரில் 2வது அரைசதத்தை நிறைவு செய்து, 43பந்துகளில் 66ரன்கள்(4சிக்ஸர், 5பவுண்டரி) சேர்த்தார்.

ரிஷப் பந்த்-அக்ஸர் படேல் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். டெல்லி கேபிடல்ஸ் சேர்த்த ஸ்கோரில் பெரும்பகுதி இருவரும் சேர்த்த ஸ்கோர்தான். மற்ற வகையில் பிரித்வி ஷா(11), ஜேக் பிரேசர் மெக்ருக்(23), சாய் ஹோப்(5) என விரைவாக ஆட்டமிழந்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கடைசி நேரத்தில் சிறந்த கேமியோ ஆடி 7 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி 3 ஓவர்களில் மட்டும் 67 ரன்கள் சேர்த்தது. இதில் ரிஷப் பந்த் மட்டும் கடைசி ஓவரில் 31 ரன்கள் சேர்த்தார். இந்த 3 ஓவர்களில் டெல்லி அணி சேர்த்த ரன்கள்தான் மிகப்பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது.

குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர் மோகித் சர்மா இந்த சீசனில் சிறந்த டெத் ஓவர் பந்துவீச்சாளர் என்று பெயரெடுத்து வந்தார். அவரை டெத் ஓவரில் மட்டுமே பெரும்பாலும் கேப்டன் கில் பயன்படுத்தி வந்தார். அதேபோல நேற்றும் மோகித் சர்மாவை பந்துவீசப்பயன்படுத்த, ரிஷப் பந்த் அவரின் பந்துவீச்சை துவம்சம் செய்து விட்டார்.

இறுதியில் மோகித் சர்மா 4 ஓவர்கள் வீசி 73 ரன்கள் கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகமான ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்கள் என மோசமான சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார்.

குஜராத் - டெல்லி

பட மூலாதாரம், Getty Images

ரிஷப் பந்த் என்ன சொன்னார்?

டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில் “ டி20 போட்டியில் எதுவுமே உறுதியில்லாமல், எதிர்பார்க்காத முடிவுகள்தான் கிடைக்கிறது. 15-ஆவது ஓவருக்கு மேல் பேட்டிற்கு பந்துகள் நன்றாக வந்தன. 44 ரன்களுக்கு 3விக்கெட்டுகளை இழந்திருந்தோம், அதன்பின் அக்ஸரும் நானும் பேசி சிறப்பாக ஆட முடிவு செய்தோம், சுழற்பந்துவீச்சாளர்களை மட்டும் குறிவைக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இந்த வெற்றி எங்களை உற்சாகப்படுத்துகிறது, 100 சதவீத உழைப்பை வழங்கி இருக்கிறேன். களத்தில் இருக்கும் ஒவ்வொரு மணிநேரத்தையும் நேசிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

குஜராத் அணியைப் பொருத்தவரை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்டது. பந்துவீச்சில் அனைத்து பந்துவீச்சாளர்களும் இரட்டை இலக்க ரன் ரேட்டில்தான் ரன்களை வாரி வழங்கினர். இதில் சந்தீப் வாரியர் மட்டும் 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மற்ற வகையில் ரஷித் கான், நூர் அகமது இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 71 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். சுழற்பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவு இல்லை. தமிழகவீரர் சாய்கிஷோர் ஒரு ஓவர் வீசியநிலையில் 22 ரன்கள் விளாசப்பட்டதால் அத்தோடு நிறுத்தப்பட்டது.

டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர் மோகித் சர்மா என்று பெயரெடுத்த நிலையில் கடைசி ஒரு ஓவரில் அனைத்தும் மாறிவிட்டது.

தொடக்கத்தில் சந்தீப் வாரியர் 4வது ஓவரில் மெக்ருக், பிரித்வி ஷா விக்கெட்டை வீழ்த்தி நெருக்கடி அளித்தார். அதன்பின் 6-ஆவது ஓவரில் ஹோப்பை வீழ்த்தி குஜராத் அணிக்கு உதவினார். சந்தீப் வாரியர் அமைத்துக் கொடுத்த தளத்தை அடுத்துவந்த பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தவில்லை. தொடர்ந்து நெருக்கடி கொடுத்திருந்தால், டெல்லி பேட்டர்கள் விக்கெட்டை இழந்திருப்பார்கள்.

ஆனால், ரிஷப் பந்த்-அக்ஸர் படேல் பார்ட்னர்ஷிப்பை அமைக்கவிட்டது, குஜராத் பந்துவீச்சாளர்கள் செய்த பெரிய தவறாகும். இருவரையும் தொடக்கத்திலேயே பிரிக்காமல், கடைசி நேரத்தில் முயன்றது எந்தபயனும் அளிக்கவில்லை.

குஜராத் - டெல்லி

பட மூலாதாரம், Getty Images

நம்பிக்கையளித்த தமிழக வீரர்

பேட்டிங்கிலும் கேப்டன் கில் 6 ரன்னில் நார்க்கியா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 2ஆவது விக்கெட்டுக்கு விருதிமான் சஹா, சுதர்சன் கூட்டணி ஓரளவுக்கு ஸ்கோரை குறையவிடாமல் கொண்டு சென்று பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் என ஓவருக்கு 10 ரன்ரேட்டில் சென்றது.

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் யாதவ் பிரித்தார். சாஹா 39 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த ஓமர்சாய் நிலைக்கவில்லை.

தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானமாக ஆடி அரைசதம் அடித்து 39 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ராகுல் திவேட்டியா, ஷாருக்கான் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

ஆனால் மனம் தளராமல் ஆடிய மில்லர் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். நார்க்கியா வீசிய 17-வது ஓவரில் 3 சிக்ஸர், ஒருபவுண்டரி என 24 ரன்கள் சேர்த்து ஆட்டத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்தினார். மில்லர் இருந்தவரை குஜராத் அணியின் வெற்றி மீது பசுமை காணப்பட்டது.

முகேஷ் குமார் வீசிய 18வது ஓவரில், மில்லர் 55 ரன்களில் விக்கெட்டை இழந்தவுடன் ஆட்டம் பரபரப்பாகியது, டெல்லி அணியின் கரங்கள் வலுக்கத் தொடங்கியது.

குஜராத் - டெல்லி

பட மூலாதாரம், Getty Images

திக் திக் கடைசி 2 ஓவர்கள்

களத்தில் சாய் கிஷோர், ரஷித் கான் இருந்தனர். கடைசி இரு ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. அறிமுக வீரர் ரசிக் சலாம் வீசிய 19-வது ஓவரில் ரஷித் கான் ஒரு பவுண்டரியும், சாய் கிஷோர் இரு சிக்ஸர்களையும் விளாசினார், ஆனால் கடைசிப்பந்தில் சாய் கிஷோர் க்ளீன் போல்டாகி 13 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் கான், மோகித் சர்மா களத்தில் இருந்தனர். முகேஷ் குமார் கடைசி ஓவரை வீச, ஸ்ட்ரைக்கில் ரஷித்கான் இருந்தார்.

முகேஷ் ஓவரில் முதல் இரு பந்துகளிலும் ரஷித் கான் இரு பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அடுத்த 2 பந்துகள் டாட் பந்துகளாக மாறவே 5வது பந்தில் ரஷித் கான் சிக்ஸர் விளாச ஆட்டம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது. கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை, பவுண்டரி அடித்தால் சூப்பர் ஓவர் என்ற நிலை இருந்தது. ஆனால் முகேஷ் குமார் பவுன்ஸராக வீசவே அதில் ரஷித் கான் ரன்அடிக்காமல் போக 4 ரன்னில் குஜராத் அணி தோற்றது.

“போராடினோம் வெற்றி கிடைக்கவில்லை”

குஜராத் கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “ நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம் என நினைக்கிறேன். கடைசியில் கிடைத்த தோல்வி வேதனையாக இருக்கிறது, ஆனால், போராட்டத்தை வெளிப்படுத்தினோம். 224 ரன்கள் சேஸிங் எளிதானது அல்ல. முதல்பந்திலிருந்தே அடித்து ஆட வேண்டும். இம்பாக்ட் ப்ளேயர் பங்கு பெரியஸ்கோருக்கு வழிவகுக்கிறது. 200 ரன்களுக்குள் சுருட்ட நினைத்தோம் ஆனால் முடியவில்லை. கடைசி 2 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுவிட்டோம். சிறிய மைதானம் என்பதால் பவுண்டரி, சிக்ஸர் எளிதாக இருந்தது.” எனத் தெரிவித்தார்

குஜராத் - டெல்லி

பட மூலாதாரம், Getty Images

அசத்திய அக்ஸர் படேல்

டெல்லி அணியின் ஆல்ரவுண்டர் எனக் கூறப்பட்ட அக்ஸர் படேல் அதை நேற்று நிரூபித்துவிட்டார். டேவிட் வார்னர் காயத்திலிருந்து குணமாகாத நிலையில் 3வது வீரராக அக்ஸர் படேல் களமிறக்கப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்த அக்ஸர் படேல் 30 ரன்களைக் கடக்கும் வரை ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து, பெரும்பாலும் ஒரு ரன், 2 ரன்களாக மெதுவாகவே ஆடினார். ஒரு கட்டத்துக்குப்பின்புதான் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி 2வது ஐபிஎல் அரைசதத்தை நிறைவு செய்து 66 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்துக்கு துணையாக பேட் செய்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் அக்ஸர் சிறப்பான பங்களிப்பு செய்தார். கேப்டன் கில் விக்கெட்டை வீழ்த்துவதில் அக்ஸர் படேல் பிடித்த கேட்ச் பெரிய திருப்புமுனையாகவும், பெரியவிக்கெட்டாகவும் அமைந்தது. அதேபோல குல்தீப் ஓவரில் சாஹா அடித்த ஷாட்டை ஒற்றைக் கையில் அக்ஸர் கேட்ச் பிடித்து பாட்ர்னர்ஷிப்பை உடைத்தார். பவர்ப்ளேயில் ரசிக் சலாம் முதல் ஓவர் முதல்பந்தில் சுதர்சன் அடித்த கேட்சை அக்ஸர் தவறவிட்டாலும், அடுத்தமுறை லாங்ஆன் திசையில் கேட்ச் பிடித்து சுதர்சனை வெளியேற்றினார்.

அக்ஸர் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டார். 3 ஓவர்கள் வீசிய அக்ஸர் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர்28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 11வது ஓவரில் ஓமர்சாயை விக்கெட்டை வீழ்த்தி குஜராத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தினார் அக்ஸர் படேல்.