அமெரிக்கா – சீனா வர்த்தக யுத்தத்தில் குளிர் காயும் மெக்சிகோ – எப்படி தெரியுமா?

அமெரிக்கா vs சீனா

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், வில் கிராண்ட்
  • பதவி, பிபிசி மெக்சிகோ செய்தியாளர், மோன்டெர்ரே

மெக்ஸிகோவின் மாண்டேரியில் உள்ள மான் வாஹ் ஃபர்னிச்சர் தொழிற்சாலையில் உற்பத்திசெய்யப்படும் சாய்வு நாற்காலிகள் மற்றும் சொகுசு தோல் சோஃபாக்கள் 100% “மெக்சிகோவில் தயாரிக்கப்பட்டவை.”

இவை காஸ்ட்கோ மற்றும் வால்மார்ட் போன்ற அமெரிக்காவில் உள்ள பெரிய சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்டவை. ஆனால் இந்த நிறுவனம் சீன நாட்டைச் சேர்ந்தவை. அதன் மெக்ஸிகன் உற்பத்தி ஆலை சீன மூலதனத்துடன் கட்டப்பட்டது.

மெக்ஸிகன் வணிகத்தில் உள்ள ’நியர் ஷோரிங்’ என்ற வார்த்தையின் பின்னால் அமெரிக்கா, சீனா மற்றும் மெக்ஸிகோ இடையேயான முக்கோண உறவு உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் மெக்ஸிகோவின் வடக்கு பகுதியில் உள்ள தொழில்துறை பூங்காக்களுக்கு இடம்பெயர்ந்து தங்கள் உற்பத்தியை அமெரிக்க சந்தைக்கு நெருக்கமாக கொண்டு வரும் பல சீன நிறுவனங்களில் மான் வாஹ் ஒன்றாகும். போக்குவரத்து செலவு சேமிக்கப்படுவதுடன் அவர்களின் இறுதி தயாரிப்பு முற்றிலும் மெக்ஸிகன் என்று கருதப்படுகிறது. அதாவது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில் சீன நிறுவனங்கள் இதன்மூலம் அமெரிக்கக் கட்டணங்கள் மற்றும் சீனப் பொருட்களின் மீதான கட்டுப்பாடுகளைத் தவிர்க்க முடிகிறது.

மெக்ஸிகோவிற்கு இடம் பெயர்ந்தது பொருளாதார ரீதியாகவும், பொருட்களை எளிதில் கொண்டு சேர்க்கும் திசையிலும் சிறப்பாக அமைந்ததாக நிறுவனத்தை சுற்றிக்காட்டிய நிறுவனத்தின் பொது மேலாளர் யூ கென் வெய் கூறுகிறார்.

சீனா-அமெரிக்கா வணிக யுத்தத்தால் பயனடையும் மெக்சிகோ - எப்படி?
படக்குறிப்பு, மெக்சிகோவில் உற்பத்தி சீன நிறுவனமான மேன் வாவை கடந்த அமெரிக்க கட்டணங்களைப் பெற அனுமதிக்கிறது

“வர்த்தக போர் குறைவதற்கான அறிகுறி இல்லை”

“இங்கே உற்பத்தியை மும்மடங்காக அல்லது நான்கு மடங்காக உயர்த்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,”என்று அவர் சரளமான ஸ்பானிஷ் மொழியில் கூறுகிறார். “வியட்நாமில் உள்ள எங்கள் செயல்பாடுகளின் அளவிற்கு மெக்ஸிகோவிலும் உற்பத்தியைக் கொண்டு வருவதே எங்கள் நோக்கம்,” என்றார் அவர்.

இந்த நிறுவனம் மாண்டேரி நகருக்கு 2022 இல் தான் வந்தது, ஆனால் ஏற்கனவே மெக்ஸிகோவில் 450 பேர் பணிபுரிகின்றனர். வரும் ஆண்டுகளில் ஆலையில் பல புதிய உற்பத்திப் பிரிவுகள் இயங்கத் தொடங்கும் போது ஊழியர்கள் எண்ணிக்கை 1,200 க்கும்அதிகமாக உயரும் என்று தான் எதிர்பார்ப்பதாக யூ கென் வெய் கூறுகிறார்.

“மெக்ஸிகோவில் உள்ள மக்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் மற்றும் வேகமாக கற்பவர்கள்,” என்று யூ கூறுகிறார். “எங்களுக்கு நல்ல ஆபரேட்டர்கள் கிடைத்துள்ளனர். அவர்களின் உற்பத்தித் திறன் அதிகமாக உள்ளது. எனவே தொழிலாளர்களை பொருத்தவரையில் மெக்ஸிகோ மிகச்சிறப்பாக உள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் சொன்னார்.

மெக்ஸிகோவின் பொருளாதாரத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க ஏற்றத்தை ’நியர் ஷோரிங்’ அளித்திருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி மெக்ஸிகோவின் மொத்த ஏற்றுமதி முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 5.8% உயர்ந்து 52.9 பில்லியன் டாலர்களாக (42.4 பில்லியன் பவுண்டுகள்) இருந்தது.

சீனா-அமெரிக்கா வணிக யுத்தத்தால் பயனடையும் மெக்சிகோ - எப்படி?
படக்குறிப்பு, பொது மேலாளர் யூ கென் வெய் மெக்சிகோவில் உற்பத்தியை குறைந்தது மூன்று மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளார்.

இந்தப் போக்கு குறைவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மெக்ஸிகோவில் செய்யப்பட்டுள்ள மூலதன முதலீட்டு அறிவிப்புகள், 2020 இன் வருடாந்திர மொத்த அளவில் கிட்டத்தட்ட பாதியை எட்டிவிட்டது.

மான் வாஹ் ஃபர்னீச்சர் தொழிற்சாலை, சீன-மெக்ஸிகன் தொழில் பூங்காவான ஹோஃபுசானுக்கு உள்ளே அமைந்துள்ளது. இங்குள்ள காலி இடங்களுக்கு மிக அதிக கிராக்கி உள்ளது. கிடைக்கப் பெறும் எல்லா இடங்களும் விற்றுப்போய்விட்டன.

2027 க்குள் நாட்டில் கட்டப்பட உள்ள தொழிற்சாலைகளுக்கான எல்லா நிலமும் ஏற்கனவே வாங்கப்பட்டுவிட்டதாக மெக்ஸிகோவின் தொழில் பூங்கா சங்கம் கூறுகிறது. மெக்ஸிகோ மீதான சீனாவின் ஆர்வம் குறுகிய காலத்திற்கானது அல்ல என்று பல மெக்ஸிகன் பொருளாதார வல்லுநர்கள் கூறுவதில் ஆச்சரியமில்லை.

“மெக்ஸிகோவிற்குள் மூலதனத்தை கொண்டு வருவதற்கான கட்டமைப்பு காரணங்கள் நீடிக்கும்,” என்று மெக்ஸிகோவின் முன்னாள் வெளிநாட்டு வர்த்தக துணை அமைச்சர் ஜுவான் கார்லோஸ் பேக்கர் பினெடா கூறுகிறார்.

“சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக போர் விரைவில் குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை,” என்றார் அவர்.

புவிசார் அரசியல் மோதல்

சீனா-அமெரிக்கா வணிக யுத்தத்தால் பயனடையும் மெக்சிகோ - எப்படி?
படக்குறிப்பு, மான் வாஹ்-வில் உள்ள முதலாளிகள் மெக்சிகன் தொழிலாளர்களின் திறமைகளைப் பாராட்டுகிறார்கள்.

புதிய வட அமெரிக்க கட்டுப்பாடற்ற வர்த்தக ஒப்பந்தம் USMCA க்கான மெக்ஸிகோவின் பேச்சுவார்த்தைக் குழுவின் ஒரு அங்கமாக பேக்கர் பினெடா இருந்தார்.

“மெக்ஸிகோவுக்கு வரும் சீன மூலதனம் சில நாடுகளின் கொள்கைகளுக்கு அசெளகர்யமாக இருந்தாலும், சர்வதேச வர்த்தக சட்டத்தின்படி, அந்த தயாரிப்புகள் எல்லாமே மெக்ஸிகன்” என்று அவர் கூறுகிறார்.

இரண்டு வல்லரசுகளுக்கு இடையே ஒரு தெளிவான செயல் உத்தி இருப்பை மெக்ஸிகோ பெற்றுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளி என்ற அந்தஸ்தை சீனாவிடமிருந்து மெக்ஸிகோ பறித்துள்ளது. இது ஒரு முக்கியமான மற்றும் அடையாள மாற்றமாகும்.

அமெரிக்காவுடனான மெக்ஸிகோவின் அதிகரித்த வர்த்தகம், அந்த நாட்டிற்கு அருகாமையில் உள்ள காரணத்தாலும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்களும் மெக்ஸிகோவில் பிரிவுகளை அமைக்கின்றன. சில சமயங்களில் ஆசியாவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தியை மாற்றுவதும் இதில் அடங்கும்.

மாண்டேரிக்கு வெளியே ஒரு புதிய டெஸ்லா ஜிகாஃபாக்டரிக்கான திட்டத்தை கடந்த ஆண்டு ஈலோன் மஸ்க் அறிவித்தார். இருப்பினும் இந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனம் 10 பில்லியன் டாலர் ஆலைக்கான பணிகளை இன்னும் தொடங்கவில்லை.

டெஸ்லா நிறுவனம் இந்தத் திட்டத்தில் உறுதியாக இருக்கும் அதே வேளையில், உலகப் பொருளாதாரம் பற்றிய கவலை மற்றும் கார் தயாரிப்பு நிறுவனத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பணியாளர் குறைப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் தனது திட்டங்களை அது மெதுவாக்கியுள்ளது.

ஆனால் சீன முதலீட்டைப் பொருத்தவரை, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பரந்த புவிசார் அரசியல் மோதலில் மெக்ஸிசிகோ இழுக்கப்படக் கூடும் என்று சிலர் எச்சரிக்கின்றனர்.

“பழைய பணக்காரர் அமெரிக்காவுக்கு புதிய பணக்காரரான சீனாவுடன் பிரச்னைகள் உள்ளக,” என்கிறார் மெக்ஸிகோவில் உள்ள நேஷனல் அட்டானமஸ் பல்கலைக்கழகத்தில் சீனா-மெஸ்சிகோ ஆய்வு மையத்தின் என்ரிக் டஸ்ஸல்.

“மெக்ஸிகோவிடம் இந்தப் புதிய முக்கோண உறவுக்கான செயல் உத்தி இல்லை,”என்று அவர் மேலும் கூறினார்.

சீனா-அமெரிக்கா வணிக யுத்தத்தால் பயனடையும் மெக்சிகோ - எப்படி?
படக்குறிப்பு, மெக்சிகோவில் புதிதாக கட்டும் தொழிற்சாலை இடத்தை வாங்க சீன நிறுவனங்கள் போட்டியிட்டன.

மெக்சிகோவுக்கு சாதகமானது எப்படி?

அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையின் இருபுறமும் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் புதிய அரசியல் நிலைமைகள் உருவாகலாம். ஆனால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அமெரிக்க அதிபர் மாளிகையில் டொனால்ட் டிரம்ப் வந்தாலும், ஜோ பைடன் தொடர்ந்து இருந்தாலும் அமெரிக்க-சீன உறவுகளில் முன்னேற்றம் இருக்காது என்று கருதப்படுகிறது.

“நியர் ஷோரிங்” என்பதை பாதுகாப்பு ஷோரிங் என்று சிறப்பாக வரையறுக்கலாம் என்று டஸ்ஸல் கருதுகிறார். சீனாவுடனான அதன் உறவில் மற்ற எல்லா காரணிகளுக்கும் மேலாக தேசிய பாதுகாப்பு கவலைகளை வாஷிங்டன் வைத்துள்ளது என்று அவர் கூறினார். மெக்ஸிகோ நடுவில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

“மெக்ஸிகோ சீனாவிற்கு ‘மெக்சிகோவிற்கு வரவேற்கிறோம்!’ என்ற சமிக்ஞையை அளிக்கிறது. அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் இது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

சிலர் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர். “என் மனதில் இந்த போக்கு தொடருமா என்ற கேள்வி இல்லை. மாறாக இந்த போக்கை நாம் எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற கேள்வியே உள்ளது,” என்று பேக்கர் பினெடா கூறுகிறார்.

“கொலம்பியாவில், வியட்நாமில், கோஸ்டாரிகாவில் இதுபோன்ற பேச்சு நடந்து கொண்டிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே மெக்ஸிகோவில் தானாகவே சீரமைக்கப்பட்ட இந்த நிலைமைகள், கார்ப்பரேட் மற்றும் அரசு முடிவுகளுடன் கைகோர்த்துச் செல்வதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் நீண்ட காலத்திற்கு இந்தப் போக்கைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

மாண்டேரியில் மான் வாஹ் ஃபர்னிச்சர் ஆலையில் திறமையான மெக்ஸிகன் தையல் கலைஞர்கள் மற்றொரு சோபாவுக்கு இறுதி அலங்கரிப்பை செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஒரு அமெரிக்க குடும்பம் தங்களுக்கு அருகிலுள்ள வால்மார்ட் கடையில் அதை வாங்கும். ஆனால் அதன் உற்பத்திக்கு அடித்தளமாக இருக்கும் சிக்கலான புவிசார் அரசியலைப் பற்றி ஒருவேளை அந்த குடும்பத்தினர் அறிந்திருக்க மாட்டார்கள்.

ஆனால் நியர் ஷோரிங் என்பது அமெரிக்காவிற்கு ஒரு புத்திசாலித்தனமான பின் கதவு வழியாக இருந்தாலும் சரி அல்லது வல்லரசுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரின் ஒரு பகுதியாக இருந்தாலும் சரி, உலக வர்த்தகத்தின் தற்போதைய கொந்தளிப்பான சூழலில் இது மெக்ஸிகோவுக்கு சாதகமாக உள்ளது.