பாகிஸ்தானில் குழந்தைத் தொழிலாளர்களுக்கான இரவுப் பள்ளி

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான், குழந்தைத் தொழிலாளர்களுக்கான ஒரு இரவுப் பள்ளியை நடத்தி வருகிறார் முகமது.

பாகிஸ்தானில் குழந்தைத் தொழிலாளர்களுக்கான இரவுப் பள்ளி

பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில், குழந்தைத் தொழிலாளர்களுக்கான ஒரு இரவுப் பள்ளியை தனது சொந்த செலவில் நடத்தி வருகிறார் முகமது ரோஹைல் வரிந்த்.

இந்தக் குழந்தைகளில் பலர் பகலில் வேலைக்கு செல்வதால், இரவில் மட்டுமே அவர்களுக்கு படிக்க நேரம் கிடைக்கிறது.

பாகிஸ்தானில் 30 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் வேலைக்கு செல்வதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) அறிக்கை கூறுகிறது.

“இந்தக் குழந்தைகள் பகல் முழுவதும் வீடுகளில் உதவியாளராக, பணிப்பெண்ணாக வேலை செய்கிறார்கள். இரவில் மட்டுமே படிக்க நேரம் கிடைக்கிறது. அவர்களுக்கு கற்பிக்கவும், கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது ஒன்றே வழி” என்கிறார் பள்ளி நிறுவனர் முகமது ரோஹைல் வரிந்த்.

இந்தப் பள்ளியை சோலார் லைட் அண்டர் மூன், (Solar Light Under Moon- SLUM) SLUM பள்ளி என்று அழைக்கிறார் முகமது. இந்தப் பள்ளியின் ஒரே ஆசிரியரும் இவர் தான்.

சோலார் பேனல்கள் விற்பனை செய்யும் முகமது, அதைக் கொண்டே பள்ளிக்கு தேவையான மின்சாரத்தைப் பெறுகிறார். கணிதம், அறிவியல், ஆங்கிலம், உருது மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களை அவர் கற்பிக்கிறார்.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான் மாலை வேளைகளில் வகுப்புகள் நடக்கின்றன. ஆனால் இந்தப் பிள்ளைகளின் சில கனவுகள் நிறைவேற இந்தப் பள்ளி உதவுமென முகமது நம்புகிறார்.

குழந்தைத் தொழிலாளர்களுக்கான இரவுப் பள்ளி.
படக்குறிப்பு, இந்தப் பள்ளியின் ஒரே ஆசிரியரும் முகமது தான்.