துபாய் வெள்ளம்: செயற்கை மழை திட்டத்தால் ஏற்பட்ட விளைவா? – எச்சரிக்கும் வல்லுநர்கள்

துபாய், ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகள், காலநிலை மாற்றம், மழை, வெள்ளம்

பட மூலாதாரம், Reuters

  • எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா
  • பதவி, பிபிசி செய்திகள்

வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன.

துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார்.

ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது.

புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும்.

மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா?

துபாய், ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகள், காலநிலை மாற்றம், மழை, வெள்ளம்

பட மூலாதாரம், Anne Wing

படக்குறிப்பு, துபாயிலிருந்து உலகின் பல பகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமான சேவைகள் முடங்கின

ஆம் என்கிறார்கள் நிபுணர்கள்.

துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது.

துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது.

ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது.

“வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு,” என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம்.

துபாய், ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகள், காலநிலை மாற்றம், மழை, வெள்ளம்

பட மூலாதாரம், Reuters/Zaheer Kunnath

படக்குறிப்பு, வெள்ளக்காடான துபாய் விமான நிலையம்

துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா?

இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம்.

ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது.

எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும்.

“இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்,” என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார்.

உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

“நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்,” என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.

துபாய், ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகள், காலநிலை மாற்றம், மழை, வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை

செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா?

செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும்.

விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும்.

இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது.

வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர்.

‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை.

செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள்.

துபாய் மழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துபாய் மழை

“மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்,” என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார்.

மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.

“இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை,” என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ்.

பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். “இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை,” என்று அவர் கூறினார்.

“மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது,” என்றார்.

அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology – NCM) நடத்தப்படுகிறது.

துபாய், ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகள், காலநிலை மாற்றம், மழை, வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன’

தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா?

கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது.

துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை.

“அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை,” என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார்.

“உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்,” என்றார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது.