← முகப்பு செய்திகள்

ஹர்ஷன சூரியப்பெருமவின் வீட்டுக்கு முன்னாள் இடம்பெற்ற அமைதி வழிப் போராட்டத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மில

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 48 பார்வைகள்
ஹர்ஷன சூரியப்பெருமவின் வீட்டுக்கு முன்னாள் இடம்பெற்ற அமைதி வழிப் போராட்டத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மில
தனிநபர் அடக்குமுறைக்கும் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும் எதிராக ஜெனீவா செல்வோம்!

ஹர்ஷன சூரியப்பெருமவின் வீட்டுக்கு முன்னாள் இடம்பெற்ற அமைதி வழிப் போராட்டத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மற்றும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக சர்வதேசத்தின் தலையீட்டை எதிர்பார்ப்பதாக தெரிவித்து புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தில் திங்கட்கிழமை (11) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தில் முறைப்பாடளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இன்று இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்னர், நாட்டின் திறைசேரியைச் சூறையாடியவர்களுக்கு எதிராக நாம் முன்னெடுத்த அமைதியான போராட்டத்தின் மீது ஆயுதமேந்திய குண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். பகிரங்கமாக ஆயுதங்களைக் காட்டி எமது உறுப்பினர்களை அச்சுறுத்தினார்கள்.

இது தொடர்பில் தலங்கம காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை எந்தவொரு விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை. காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது மௌனம் காப்பது வேதனையளிக்கிறது.

இன்று பெலவத்தை பகுதியிலிருந்தே காவல் துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 14ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம், அமைதியாகக் கூடும் சுதந்திரம் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம் என்பன இந்த மாலிமா அரசாங்கத்தினால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு இன்று சிதைக்கப்பட்டுள்ளது. எமது கட்சி உறுப்பினர்கள் மீதோ அல்லது ஆதரவாளர்கள் மீதோ ஏதேனும் உயிராபத்து ஏற்பட்டால் அதற்கு காவல் துறை மா அதிபரே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

அரசாங்கம் தான் வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகக் கூறிவிட்டு, இன்று 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளார்கள். நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வசந்த சமரசிங்க போன்றவர்கள் இன்று மக்கள் முன் வர அஞ்சி ஒளிந்து கொள்கிறார்கள்.

நாட்டைத் தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்துவோம், விவசாயத்தை நவீனப்படுத்துவோம் என்று கூறிய அனைத்தும் இன்று தோல்வியில் முடிந்துள்ளன. இந்தத் தோல்விகளை மறைக்கவே, அரசாங்கம் தமக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை நசுக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது.

கடுவல மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் ஆட்சியாளர்களுக்குச் சொந்தமான பிரம்மாண்டமான மாளிகைகள் பற்றிய தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. மக்கள் பணத்தைச் சூறையாடி கட்டப்பட்ட இவ்வாறான சொத்துக்கள் குறித்து நாம் விரைவில் அம்பலப்படுத்துவோம்.

180 அலகுகளுக்கு மேல் மின்சாரப் பாவனையுள்ளவர்களுக்கு மட்டுமே பாதிப்பு என்று கூறுவது அப்பட்டமான பொய். இது நாட்டின் சாதாரண நடுத்தர வர்க்கத்தினர் அனைவரையும் பாதித்துள்ளது. மக்கள் மீண்டும் விளக்குகளைப் பயன்படுத்தும் இருண்ட யுகத்திற்கே இந்த அரசாங்கம் நாட்டைக் கொண்டு சென்றுள்ளது.

தொடர்ச்சியாக எமது உறுப்பினர்களுக்குத் தொலைபேசி வாயிலாகவும் ஏனைய வழிகளிலும் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. இந்த நாட்டில் இன்று ஒரு மௌனக் கொலைக் கலாச்சாரம் நிலவுகிறது. சாட்சியங்களை அழிப்பதும், அச்சுறுத்துவதும் அரசாங்கத்தின் அன்றாடச் செயற்பாடாக மாறியுள்ளது.

நாம் இவற்றுக்கு அஞ்சப்போவதில்லை. இலங்கையில் ஜனநாயகம் நிலைநாட்டப்படும் வரை, ஊழல்வாதிகள் தண்டிக்கப்படும் வரை எமது போராட்டம் தொடரும். ஐக்கிய நாடுகள் சபையிடம் நாம் கையளித்துள்ள இந்த மகஜர் ஒரு ஆரம்பம் மாத்திரமே. சர்வதேச ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று, இந்த ஜனநாயக விரோதப் போக்கினை மாற்றியமைக்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net