← முகப்பு செய்திகள்

புவியியல் துறைப் பேராசிரியரும், கல்வியியலாளருமான வித்யாநிதி எம்.எஸ். மூக்கையா இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 40 பார்வைகள்
புவியியல் துறைப் பேராசிரியரும், கல்வியியலாளருமான வித்யாநிதி எம்.எஸ். மூக்கையா இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை
பேராசிரியர் வித்யாநிதி எம்.எஸ். மூக்கையா காலமானார்

புவியியல் துறைப் பேராசிரியரும், கல்வியியலாளருமான வித்யாநிதி எம்.எஸ். மூக்கையா இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இலங்கை மற்றும் சர்வதேச கல்விப்புலத்தில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த பேராசிரியர் மூக்கையா, புவியியல் துறை மற்றும் உயர்கல்வித்துறையில் ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியவை.

தனது நீண்டகால கல்விப்பணியில் பல்வேறு உயர்மட்டப் பதவிகளை அவர் வகித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், களனி பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தன பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பொருளாதார புவியியல் மற்றும் பிரதேச புவியியல் ஆகிய துறைகளுக்கு வருகை பேராசிரியராகவும், மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் நகரத் திட்டமிடல் துறையில் (Town Planning) கல்வி கற்ற மாணவர்களுக்கு வருகை பேராசிரியராகவும், பேராதனை பல்கலைக்கழகத்தில் புவியியல் துறை பேராசிரியராகவும், வவுனியாவில் இருந்த வடமாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியின் தலைவராகவும் கிழக்குப் இலங்கை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.

பேராதனை பல்கலைகக்கழகத்திலேயே புவியியல் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிய சம காலத்தில் இலங்கை அரச சேவைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறாக 1969 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டின் இறுதிவரையில் ஏறத்தாழ 40 வருடங்கள் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு ஏற்பாடுகளின் கீழ் உயர்கல்வி துறையில் கற்பித்தும் நிர்வாக பொறுப்புக்களை மேற்கொண்டும் பணியாற்றியுள்ளார்.

பல்கலைக்கழக் கல்வி சார்ந்த சில நூல்களையும், அதே சம காலத்தில் நவீன நிலவரங்கள் குறித்த பொது வாசகர்களுக்கு பயன்படும் வகையிலான நூல்களையும் அதே சமயம் வெகுஜன ஊடக வாசகர்களின் பயன் குறித்து பல (500+) கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

புவியியல் துறை சார்ந்த பல ஆய்வுக் கட்டுரைகளைச் சர்வதேச அளவில் சமர்ப்பித்துள்ள இவர், இலங்கை தேசிய சமாதானக் பேரவையின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இதன் மூலம் இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் மூக்கையாவின் மறைவு கல்விச் சமூகம், அவரது மாணவர்கள் மற்றும் சக ஊழியர்களுக்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அன்னாரது இறுதிச் சடங்குகள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net