கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (04) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘அண்மையில் இணைய மோசடியில் ஈடுபட்ட 120 வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது குறுகிய மட்டத்தில் மாத்திரம் இடம்பெறும் சம்பவமல்ல. கடந்த நான்கு மாதங்களில் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாட்டில் கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தையும் விட அதிகமாகும். இதற்கிடையில், சீனர்கள், இந்தியர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், மலேஷியர்கள், மியன்மார் நாட்டவர்களும் இருக்கிறார்கள். உண்மையில் தேசிய இணைய மோசடிக்காரர்கள் இலங்கையில் வியாபித்துள்ளதன் பிரதிபலனாக நாட்டில் இணைய மோசடி அதிகரித்துள்ளது.
பொலிஸ் அறிக்கைகளுக்கமைய, 2024 ஆம் ஆண்டு இணைய மோசடி தொடர்பில் 7,210 பொலிஸ் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் 2025ஆம் ஆண்டில் 12, 650 முறைப்பாடுகள் வரை அதிகரித்துள்ளன. வரலாற்று ரீதியாக இணைய மோசடிக்காரர்களின் தேசமாக கம்போடியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் இருந்தன. இருந்தபோதும் துரதிர்ஷ்டவசமாக கடந்த வருடங்களில் முறையாக இலங்கையும் இணைய மோசடிக்காரர்களின் தேசமாக மாறி வருகிறது.
சிலவேளை, இணைய மோசடிக்காரர்கள் அல்லது ஹெக்கர்களின் அரசாங்கம் ஆட்சியிலிருப்பதால் எம் நாட்டவர்கள் இலங்கையில் ஆட்சியை கைப்பற்றி அவர்களது வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சிறந்த இடமாக இலங்கையை மாற்றிக்கொண்டிருக்கலாம்.
கடந்த காலங்களில் அரசாங்கத்துக்குள் பெரும் எண்ணிக்கையிலான இணைய நிதி மோசடிகள் பதிவாகியிருந்தன. என்.டி.பி. வங்கியில் 1,320 கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது. திறைசேரியில் இடம்பெற்ற மோசடி 80 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும். தபால் திணைக்களத்தில் 20 கோடி ரூபா மோசடியும் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் 05 கோடி ரூபா மோசடியும் இடம்பெற்றுள்ளது.
தனியார் துறையிலும் இதுபோன்று பெரும் தொகை நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இணைய மோசடிக்காரர்களின் ஆதிக்கத்தின் சூடுபிடிப்பு முழு நாடும் உணரக்கூடியதாகவுள்ளது.
தொடர்ந்து வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டமையானது தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. உலகிலுள்ள ஹெக்கர்களின் தேசமாக இலங்கை மாறியுள்ளது என்ற விடயம், இலங்கையில் முதலீடு செய்துள்ள, முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ள முதலீட்டாளர்களுக்கே அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக அவர்கள் தமது முதலீடுகளை மீளப்பெற்று வேறு நாடுகளுக்கு நகர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. வரவிருக்கும் முதலீடுகளும் இலங்கைக்கு பதிலாக வேறு நாடுகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அதனால், இணைய மோசடிக்காரர்களின் தேசமாக இலங்கை முழுமையாக மாறுவதை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் முதலீட்டுச் சபை எவ்வளவு நிதி செலவளித்தாலும், எத்தனை அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாலும் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வரமாட்டார்கள்.
அதேபோன்று, இலங்கையில் ஹெக்கர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கான சூழல் இருப்பதாலேயே இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றன. எந்தவொரு நபரும் இலங்கைக்குள் நுழைய முடியும். இணையத்தினூடாக விசாவையும் பெற்றுக்கொள்ள முடியும். 09 மாதங்கள் வரை இடைக்கிடை விசாவை நீடித்துக்கொள்ள முடியும்.
சிங்கப்பூரை போன்று இலங்கையில் இணைய பாதுகாப்பு இலங்கையில் இல்லை. அவ்வாறு எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் யாராக இருந்தாலும் நாட்டுக்கு வர அனுமதிப்பதானது இணைய மோசடிக்காரர்கள் மாத்திரமல்ல எந்தவொரு குற்றவாளிகளும் நாட்டுக்குள் வரக்கூடியதாக இருக்கும்.
இதனை தடுக்க வேண்டுமெனில் இராணுவத்தினரை முடக்கும் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு புலனாய்வு துறையை பலப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் விசா வழங்கும் செயல்முறை பழைய நடைமுறையை அமுல்படுத்த வேண்டும். இவற்றில் ஒன்றை உடனடியாக செய்யாவிட்டால் இணைய மோசடிக்காரர்களின் தேசமாக மாறி, இலங்கை இன்னுமொரு சிக்காக்கோவாக மாறலாம்’’ என்றார்.