அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமடல பகுதியில், கடந்த ஆண்டு இடம்பெற்ற மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் திங்கட்கிழமை (11) இரவு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய வன்முறைக் கும்பல், அவரது தலையைத் துண்டித்து மாமடல சந்தியில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் இரவு 8.30 மணியளவில் மாமடல பகுதியில் உள்ள உயிரிழந்தவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதன்போது, வீட்டிற்குள் இருந்த உயிரிழந்தவரின் மாமனார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த அவர் தற்போது அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
2025 ஆம் ஆண்டு இதே மாமடல பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து மூவரைப் படுகொலை செய்த வழக்கின் பிரதான சந்தேகநபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர், கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியே பிணையில் விடுதலையாகி வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.