இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம், கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் ‘இலங்கையைக் கட்டியெழுப்பு வோம்’ என்ற மகுடத்தின் கீழ் மிக விமரிசையாகக் கொண்டா டப்பட
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, புதிய அரசியல் கலாசாரத்தின் தொடக்கமாகவும், பொருளாதார மலர்ச்சி யின் அடையாளமாகவும் தென்னிலங்கையில் பார்க்கப் பட்டது. ஆனால், அதேவேளையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கறுப்புக் கொடிகளாலும், நீதிக்கான கோஷங் களாலும் ‘கரிநாளாக’ உருமாறியிருந்தன.
ஜனாதிபதியின் உரையில் தென்பட்ட சமரசப் போக்குகளும், தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் குறித்த மௌனமும் மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தையே பரிசாகத் தந்துள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது சுதந்திர தின உரையில், ‘இனவாதம்’ மற்றும் ‘தீவிரவாதம்’ ஆகியவற்றை நாட்டின் பலத்தை அழிக்கும் ஆயுதங்கள் என்று சாடினார்.
மொழி, மதம் மற்றும் கலாசார வேறுபாடுகளைக் கடந்து ‘இலங்கையர்’ என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார். குறிப்பாக, கடந்த காலங்களில் தனது தரப்பி னராலேயே விமர்சிக்கப்பட்ட ‘75 ஆண்டு கால சாபம்’ என்ற கருத்தை அவர் பகிரங்கமாக நிராகரித்தார். கடந்த 78 ஆண்டுகளில் நிகழ்ந்த நல்ல விடயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற அவரது கூற்று, ஒரு முற்போக்கான தலைவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் முயற்சியாகவே அமைந்தது.
இருப்பினும், அந்த உரையில் தமிழ் மக்களின் அடிநாதமான அரசியல் அபிலாஷைகள் குறித்து எந்தவொரு தெளிவான கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை.
133 ஆண்டுகால காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கடந்த மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அதிகாரப் பகிர்வு அல்லது இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு பற்றி நேரடியான வாக்குறுதிகள் எதையும் வழங்கவில்லை.
‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற பொதுவான கூற்று, கட்டமைப்பு ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக் கும் தமிழ் மக்களுக்கு எவ்வித நம்பிக்கையையும் அளிக்க வில்லை. அநுரவின் உரையானது தமிழ் மக்களின் ஆழ் மனதில் தேங்கிக்கிடக்கும் வலிகளைத் துடைப்பதற்குப் பதிலாக, அவற்றை முற்றாக நிராகரிக்குமொரு போக்கையே வெளிப்படுத்தியது.
‘இலங்கையர்’ என்ற ஒற்றை அடையாளத்தைப் பற்றிப் பேசும் ஜனாதிபதி, அந்த அடையாளத்திற்குள் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இன அடையாளமும் தன்னாட்சி உரிமையும் எவ்வாறு அங்கீகரிக்கப்படும் என் பதைத் திட்டமிட்டுத் தவிர்த்துவிட்டார். இதுவொரு புதிய இலங்கையைப் பற்றிய கனவல்ல, மாறாகப் பழைய ஒற்றையாட்சிச் சிந்தனையின் நவீன வடிவமே என்பதை அவரது மௌனம் பறைசாற்றுகிறது.
கடந்த காலக்கொடுமைகளுக்குப் பரிகார நீதி வழங்காமல், ‘ஒன்றாகச் செல்வோம்’ என்று அழைப்பதானது பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களில் உப்பினைத் தடவு வதற்கு ஒப்பானது.
ஜனாதிபதியின் சொல்லாடல்களில் தென்படும் ‘நல்லிணக்கம்’ என்பது அதிகாரப்பகிர்வை உள்ளடக்கியதாக இல்லாமல், வெறும் பொருளாதார மேம்பாட்டோடு சுருங்கி விட்டது தமிழ் மக்களிடையே ஆழமான விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதியின் தேசிய மையவாத உரை ஒருபு றமிருக்க, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பல்கலைக்கழக மாணவர் கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து சுதந்திர தினத்தைப் புறக்கணித்துக் கறுப்புத் தினமாகப் பிரகடனப் படுத்தினர்.
இவர்களின் 10 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய பிரகடனம், வெறும் உணர்ச்சிக் கோஷங்கள் அல்ல. அவை ஏழு தசாப்த கால அடக்குமுறையின் விளைவால் எழுந்த நீதிக்கான ஆவணமாகும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், வடக்கு-கிழக்கில் இராணுவ மயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வருதல், தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதை நிறுத்துதல் போன்ற கோரிக்கைகள் அநுரவின் ஆட்சியில் மாற்றம் காணும் என்று எதிர்பார்த்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.
குறிப்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் களுக்கான உண்மை வெளிப்பட வேண்டும் என்பதும், சர்வதேச மேற்பார்வையில் மனித புதைகுழிகள் அகழப்பட வேண்டும் என்பதும் இந்தப் பிரகடனத்தின் உணர்வுரீதியான நியாயமான கோரிக்கைகளாகும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற போராட்டக்காரர்களின் அழுத்தம், உள்நாட்டுப் பொறிமுறை கள் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையீனத்தையே மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
‘சுதந்திரம் எங்களுக்குக் கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே’ என்று வவுனி யாவில் போராடும் தாய்மார்கள் வெளிப்படுத்திய ஆதங்கம், 78 ஆண்டுகால சுதந்திரம் தமிழ் மக்களுக்கு வெறும் காகித அளவிலேயே இருப்பதை உறுதிப்படுத்தியது.
ஜனாதிபதி தனது உரையில் ‘நேர்மையானவர்கள் சட்டத்திற்கு அஞ்சத் தேவையில்லை’ என்று குறிப்பிட்ட போதிலும், மட்டக்களப்பிலும் கிளிநொச்சியிலும் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட முட்டுக்கட்டைகள் மற்றும் தள்ளுமுள்ளுகள் புதிய ஆட்சியிலும் அடக்குமுறை இயந்திரம் மாறவில்லை என்பதைக் காட்டுகிறது.
‘கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் கூட இல்லாத நெருக்கடிகள் இன்றைய அநுர ஆட்சியிலும் ஏற்படுத்தப் பட்டுள்ளது’ என்ற போராட்டக்காரர்களின் கருத்து, ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் மீதான அணு குமுறையில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை என்ற கவலையைத் தோற்றுவித்துள்ளது.
பொருளாதாரத் தரவுகள் சாதகமாக இருப்பதாகவும், அதன் பலன்கள் கிராமங்களுக்குச் சென்றடைய வேண் டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டாலும், வடக்கு-கிழக்கு மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கப்படாத வரை எந்தவொரு பொருளாதார வளர்ச்சியும் அவர்களுக்கு முழுமையான சுதந்திரத்தைத் தரப்போவதில்லை.
போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள ‘சர்வ தேச கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்பு’ மற்றும் ‘இடைக்கால நிர்வாகப் பொறிமுறை’ போன்ற கோரிக்கைகள், தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஜனநாயக வழிகளாகும்.
இவற்றைத் தவிர்த்துவிட்டு வெறும் ‘பொருளாதாரச் சீர்திருத்தம்’ பற்றி மட்டும் பேசுவது, காயங்களுக்கு மருந்து போடாமல் வலி நிவாரணி தருவதற்கு ஒப்பானதாக இருக்கின்றது, இதனையே கடந்த கால ஆட்சியாளர்களும் மேற்கொண்டனர்.
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் மீண்டும் ஒருமுறை நாட்டை இருவேறு துருவங்களாகப் பிரித்துக் காட்டியுள்ளது. தென்னிலங்கை ‘ஒற்றுமை’ பற்றிப் பேசும் அதேவேளையில், வடக்கு-கிழக்கு ‘நீதி’ மற்றும் ‘அரசியல் தன்னாட்சி’ பற்றிப் பேசுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உரை யில் இனவாதத்திற்கு இடமில்லை என்ற முழக்கம் இருந்த போதிலும், தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை அவர் கையாளும் விதம் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
‘வெகுதூரம் பயணிக்க வேண்டுமானால் அனை வரும் ஒன்றாகச் செல்ல வேண்டும்’ என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக வேண்டுமானால், தமிழ் மக்களின் 10 அம்சப் பிரகடனத்தில் உள்ள நியாயங்களுக்கு செவிசாய்த்து, சர்வதேசத்தின் மேற்பார்வையில் உண்மையான நீதியை நிலைநாட்ட வேண்டும். அதுவரை, இலங்கையின் சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு ‘கரிநாளாகவே’ நீளும்.

COMMENTS