சண்டிகர்: 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறத் தவறினாலும், அந்த அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் அவர் காட்டிய அதிரடி ஆட்டம், கிரிக்கெட் வட்டாரத்தைத் தாண்டி மல்யுத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
WWE மல்யுத்த நிறுவனத்தின் முன்னணி நட்சத்திரமான ட்ரூ மெக்இன்டைர் (Drew Mcintyre), வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டி சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், வைபவ்வின் பெயர் பொறிக்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் சீருடையை ஏந்தியபடி அவர் பேசியதாவது: "ஹல்லா போல் சூர்யவன்ஷி! அந்த தனிப்பட்ட சாதனைகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கடந்த போட்டியில் 97 ரன்கள், இன்று 96 ரன்கள் எனச் சதத்தை நூலிழையில் தவறவிட்டாலும் உங்களது ஆட்டம் அபாரம். 15 வயதில் நீங்கள் செய்திருப்பது எந்த விளையாட்டிலும், எந்தக் காலத்திலும் கேள்விப்படாத ஒன்று. இது உண்மையிலேயே நம்ப முடியாதது."

மேலும், மெக்இன்டைர் நகைச்சுவையாகப் பேசுகையில், "ராஜஸ்தான் அணிக்கு நான் தான் அதிர்ஷ்ட தேவதை என்று நினைக்கிறேன்" என்றும் குறிப்பிட்டார். பிளே-ஆப் சுற்றுக்கு முன்பாகவே ராஜஸ்தான் அணிக்கு அவர் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் அணி வெளியேறிய பிறகு வைபவ் மைதானத்தில் கண்ணீர் விட்டது ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. அதே சமயம், இந்த சீசனில் அவர் படைத்த சாதனைகள் மலைக்க வைக்கின்றன. மொத்தம் 16 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 48.50 சராசரியுடன் 776 ரன்களைக் குவித்துள்ளார். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 237.31 என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரஞ்சு தொப்பியைத் தன்வசம் வைத்துள்ள இவர், இந்த சீசனின் ஆகச்சிறந்த இளம் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
வைபவ்வின் முதிர்ச்சியான ஆட்டம், நெருக்கடியான நேரங்களில் அவர் காட்டிய துணிச்சல் ஆகியவை அவரை இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை நட்சத்திரமாக மாற்றியுள்ளது. அவரது புகழ் கிரிக்கெட் எல்லைகளைத் தாண்டி உலகளாவிய விளையாட்டு ரசிகர்களைச் சென்றடைந்துள்ளது.
வினேஷ் போகத் போட்டியில் வீசப்பட்ட பாட்டில்.. நடுவர்கள், சஞ்சய் சிங்குடன் கடும் மோதல்..அழுத நிஷு
ஐபிஎல் தொடர் முடிவடைந்தாலும், வைபவ் ஓய்வெடுக்கப் போவதில்லை. வரும் ஜூன் 9-ம் தேதி முதல் இலங்கையில் நடைபெறவுள்ள மூன்று நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரில் அவர் இந்தியா ஏ அணிக்காகக் களமிறங்கவுள்ளார். 15 வயதிலேயே உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்துள்ள இவர், விரைவில் இந்திய தேசிய அணியிலும் இடம்பிடிப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.