← முகப்பு செய்திகள்

Vinesh Phogat Bows Out of Asian Games Trials after losing in Semifinal

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 6 பார்வைகள்
Vinesh Phogat Bows Out of Asian Games Trials after losing in Semifinal

டெல்லி: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மல்யுத்த தகுதிச் சுற்றில், நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதியோடு வெளியேறி ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தினார். தோல்விக்குப் பிறகு மைதானத்தை விட்டு வெளியேறும்போது, “நான் மீண்டும் வருவேன்” என அவர் ஆவேசமாகக் கூறிச் சென்றது மல்யுத்த வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை எடை அதிகரிப்பால் இழந்த வினேஷ் போகத் அப்போது மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். அதன் பின் குழந்தைப் பேறு அடைந்த அவர் குழந்தை பிறந்த பின் மீண்டும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்தார்.

Vinesh Phogat Bows Out of Asian Games Trials after losing in Semifinal to Meenakshi Goyat

அதற்காக 2026 ஆசிய மல்யுத்த விளையாட்டு தகுதிச் சுற்றில் பங்கேற்க விண்ணப்பித்தார். ஆனால், இந்திய மல்யுத்த சம்மேளனம் அவர் இந்த தகுதிச் சுற்றில் விளையாடவே தகுதி இல்லை என பல காரணங்களை கூறி அவரை வெளியேற்றியது. அதன் பின் நீதிமன்றத்தை நாடிய வினேஷ் போகத் அதன் முடிவில் தான் தகுதிச் சுற்றில் பங்கேற்றார். இந்த நீண்ட நெடிய போராட்டத்துக்கு பின் தகுதிச் சுற்றில் அவர் அரையிறுதியுடன் வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

புதுடெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 53 கிலோ எடைப்பிரிவு தகுதிச் சுற்றில், அரையிறுதி வரை முன்னேறிய வினேஷ் போகத், அங்கு மீனாக்ஷி கோயட்டை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மீனாக்ஷி தொடக்கம் முதலே வினேஷுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தார். இறுதியில் 4-6 என்ற புள்ளிக் கணக்கில் வினேஷ் போகத் தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்தார்.

முன்னதாக நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஹரியானாவின் நிஷுவை 7-6 என்ற கணக்கில் வினேஷ் போராடி வென்றார். அந்தப் போட்டியில் நடுவர்களின் தீர்ப்பால் பெரும் ரகளை வெடித்தது. வினேஷின் கணவர் சோம்வீர் ராத்தி மைதானத்திற்குள் புகுந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். மேலும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் சஞ்சய் சிங் மற்றும் வினேஷ் தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீடியோ மறுஆய்வு செய்வதில் சிக்கல் நீடித்தது. இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் வென்ற வினேஷ், அரையிறுதியில் மீனாக்ஷியிடம் வீழ்ந்தார்.

இந்த தகுதிச் சுற்று தொடங்குவதற்கு முன்பே வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த சம்மேளனம் இடையே மோதல் ஏற்பட்டது பற்றி பார்க்கலாம். வினேஷ் கடந்த பாரிஸ் ஒலிம்பிக் உட்படப் பல போட்டிகளில் 50 கிலோ பிரிவில் ஆடியதால், அவர் அதே பிரிவில் தான் ஆட வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர். ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வினேஷ், தன்னை 53 கிலோ பிரிவில் அனுமதிக்க வேண்டும் எனப் போராடினார். சஞ்சய் சிங் தலையிட்ட பிறகே அவர் 53 கிலோ பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்க வாய்ப்பைத் தவறவிட்ட பிறகு, மீண்டும் மல்யுத்த களத்திற்குத் திரும்பிய வினேஷுக்கு இந்தத் தோல்வி ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், தோல்விக்குப் பிறகு அவர் சோர்ந்துவிடவில்லை. மைதானத்தை விட்டு வெளியேறும்போது ரசிகர்களைப் பார்த்து, "நான் மீண்டும் வருவேன்" என முழக்கமிட்டார்.

“கிளவுஸில் பசை தடவிக் கொண்டு ஆடுங்க”.. சாய் சுதர்சனை வறுத்து எடுத்த சேவாக்.. 2 முறை அதே தவறு

அவரது இந்தத் தன்னம்பிக்கை ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினேஷை வீழ்த்திய மீனாக்ஷி கோயட் இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தனது வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் உள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net