அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி கோப்பை வென்று சாதனை படைத்துள்ள நிலையில், கடந்த ஆண்டு கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த 11 ரசிகர்களை விராட் கோலி மற்றும் கேப்டன் ரஜத் படிதார் ஆகியோர் நினைவு கூறாதது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி, ஆர்சிபி அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியதைக் கொண்டாட சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட பயங்கர கூட்டநெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆர்சிபி வரலாற்றிலேயே கசப்பான இந்தச் சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்டு இறுதிப்போட்டி அரங்கேறியது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில் விராட் கோலி அபாரமாக ஆடி அரைசதம் அடித்து பெங்களூரு அணிக்கு இரண்டாவது கோப்பையை பெற்றுத் தந்தார். ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலியிடம் தொகுப்பாளர் பேசியபோது, அவர் ரசிகர்களுக்குப் பொதுவாக நன்றி தெரிவித்தார்.
கோலி பேசுகையில், "எங்களுக்கு 7 ஹோம் கிரவுண்ட் போட்டிகள் இல்லை, 14 போட்டிகள் உள்ளன. ஏனெனில் நாங்கள் எங்குச் சென்றாலும் எங்களை ஆதரிக்க ரசிகர்கள் உள்ளனர். அவர்களைப் பெருமைப்படுத்தவே நாங்கள் விளையாடுகிறோம்" என்றார். இந்த சீசன் தொடக்க ஆட்டத்தில் ஆர்சிபி அணி உயிரிழந்த ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தாலும், சாம்பியன் பட்டத்தை வென்ற இந்த வரலாற்றுத் தருணத்தில் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாதது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விராட் கோலி அல்லது கேப்டன் ரஜத் படிதார், இந்த வெற்றியை உயிரிழந்த அந்த 11 ரசிகர்களுக்கு அர்ப்பணித்திருக்கலாம் எனச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. "உங்களுக்காக உயிரை விட்ட ரசிகர்களைக் கொண்டாட்டங்களின் போது மறக்கலாமா?" என ஆர்சிபி ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த இறுதிப்போட்டியின் போது பெங்களூரு நகரில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க மாநகர போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். 2025-ல் நடந்த விபத்தை மனதில் வைத்து, பொது இடங்களில் திரையிடல், பட்டாசு வெடித்தல், பைக் பேரணிகள் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அகமதாபாத்தில் ஆர்சிபி வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, பெங்களூரு நகரம் அமைதியாகக் காணப்பட்டது.
வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த ஜாக்பாட்.. பணத்துடன் ஒரு டாடா சியரா கார்.. பரிசுத் தொகையின் முழு விவரம்
ரசிகர்களின் ஆதரவிலேயே விளையாட்டுத் துறை உயிர்ப்புடன் இருக்கிறது. ஆர்சிபி போன்ற ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணி, தங்களுக்காக உயிரை இழந்த ரசிகர்களை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நினைவுகூரத் தவறியது ரசிகர்களிடையே ஒரு கசப்பான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.