அகமதாபாத்: 2026 ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடிய நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி மைதானத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தார். அவர் இந்த இறுதிப்போட்டியில் விளையாடவில்லை என்றாலும், மைதானத்தில் விஐபி பாக்ஸில் அமர்ந்து ஆட்டத்தைக் கண்டுகளித்தார். அவர் அருகில் யார் அமர்ந்து இருந்தார் என்பது தான் முக்கியமாக பார்க்கப்பட்டது.
மைதானத்தின் விஐபி அறையில் ஐசிசி தலைவரும், முன்னாள் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா அருகில் வைபவ் சூர்யவன்ஷி அமர்ந்திருந்தார். இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்து 'ஆரஞ்சு தொப்பி' வென்றுள்ள வைபவ், போட்டி முடிந்த பிறகு நடைபெறும் விருது வழங்கும் விழாவில் தமக்கான விருதைப் பெறுவதற்காக மைதானத்திற்கு வந்துள்ளார். ஆனால், அவர் ஜெய் ஷா அருகில் அமர்ந்திருந்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

கிரிக்கெட் உலகின் மிக சக்திவாய்ந்த நபராகக் கருதப்படும் ஜெய் ஷா அருகிலேயே வைபவ் சூர்யவன்ஷி அமர்ந்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள், "இனி வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது உறுதி" எனப் பதிவிட்டு வருகின்றனர். பிசிசிஐ அவரை மிக விரைவில் சர்வதேசப் போட்டிகளில் விளையாட வைக்கும் என்றும், அவரது அசாத்திய திறமைக்கு இந்த அங்கீகாரம் தகுதியானது என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
இந்த இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, பெங்களூரு அணியின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்தது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே பொறுப்புடன் விளையாடி 37 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அணியை ஓரளவுக்குக் கௌரவமான ஸ்கோருக்குக் கொண்டு சென்றார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
RCB vs GT: வாஷிங்டன் சுந்தர் அவுட் இல்லையா? விராட் கோலி ஆவேசம்.. நடுவரின் முடிவால் சர்ச்சை
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்கள் விக்கெட்டை இழக்காமல் ரன்களைக் குவித்ததால், பெங்களூரு அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது.