← முகப்பு செய்திகள்

IPL 2026 Final: Former Indian spinner and 2011 World Cup winner Piyush

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 6 பார்வைகள்
IPL 2026 Final: Former Indian spinner and 2011 World Cup winner Piyush

அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரின் கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி மே 31, ஞாயிற்றுக்கிழமை அன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த முக்கியமான போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

சண்டிகரில் நடந்த இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 215 ரன்கள் என்ற கடினமான இலக்கை குஜராத் அணி மிக எளிதாக விரட்டிப் பிடித்தது. கேப்டன் சுப்மன் கில் 53 பந்துகளில் 104 ரன்கள் குவித்து மிரட்டினார். இளம் வீரர் சாய் சுதர்சன் 58 ரன்கள் எடுத்து கில்லுக்குத் தோள் கொடுத்தார். ஐபிஎல் பிளே-ஆப் வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய 'சேஸிங்' சாதனையாகும். இதன் மூலம் குஜராத் அணி, தான் பங்கேற்ற 5 ஆண்டுகளில் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

IPL 2026 Final RCB vs GT Gujarat Titans has upper hand over Royal Challengers Bengaluru says Piyush Chawla

மறுபுறம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் குஜராத் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் பெங்களூரு அணி 254 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தது. 18 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு 2025-ல் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு, இந்த முறையும் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது.

இந்த இறுதிப்போட்டி குறித்து பியூஷ் சாவ்லா கூறுகையில், "பெங்களூரு அணி தற்போது அபாரமான ஃபார்மில் உள்ளது. அவர்களது பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் திட்டமிட்டபடி சிறப்பாகச் செயல்படுகின்றனர். ஆனால், இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடப்பதுதான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். இந்த சீசனில் நரேந்திர மோடி மைதானத்தை குஜராத் அணி தனது கோட்டையாக மாற்றியுள்ளது. அங்கு விளையாடிய 7 போட்டிகளில் 5-ல் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சொந்த மண்ணில் விளையாடுவது, ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிந்திருப்பது மற்றும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு ஆகியவை ஒரு பெரிய போட்டியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, வெற்றி வாய்ப்பு 60-40 என்ற விகிதத்தில் குஜராத் பக்கமே உள்ளது. பெங்களூரு அணியிடம் அதிரடி வீரர்கள் இருந்தாலும், குஜராத் அணிக்குச் சொந்த மண் சாதகமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்த WWE ஜாம்பவான் ட்ரூ மெக்இன்டைர்

இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றும். குஜராத் அணி தனது அறிமுக சீசனிலேயே (2022) சாம்பியன் பட்டம் வென்றது. பெங்களூரு அணி 2025-ல் மகுடம் சூடியது. குஜராத் அணியைப் பொறுத்தவரை இது ஒரு பழிவாங்கும் ஆட்டமாகும். முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் தங்களை வீழ்த்திய பெங்களூரு அணிக்கு, தங்களது சொந்த மண்ணில் பதிலடி கொடுத்து மீண்டும் சாம்பியன் ஆக குஜராத் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த இறுதிப் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net