அகமதாபாத்: 2026 ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த சோகத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்களுக்கு, போட்டி முடிந்த சில மணி நேரங்களிலேயே மற்றொரு மோசமான சம்பவம் காத்திருந்தது. அவர்கள் பயணம் செய்த பேருந்து திடீரெனத் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அகமதாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஞாயிற்றுக்கிழமை இரவு நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி முடிந்த பிறகு, குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் மைதானத்தில் இருந்து ஹோட்டலுக்குப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. பேருந்தில் இருந்து புகை வருவதைக் கவனித்ததும், உடனடியாகப் பேருந்து நிறுத்தப்பட்டு வீரர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. வீரர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை குஜராத் அணி வீரர்கள் சுமார் 1 மணி நேரம் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையைத் தவறவிட்ட சோகத்தில் இருந்த குஜராத் வீரர்களுக்கு, இந்தச் சம்பவம் மேலும் அதிர்ச்சியை அளித்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளரான முகமது சிராஜ் தனது சமூக வலைதள பதிவில் குஜராத் டைட்டன்ஸ் வீரர்களுடன் சாலையில் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சோகத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
கடந்த ஆறு நாட்களில் குஜராத் அணி தர்மசாலாவில் இருந்து சண்டிகர், பின்னர் அங்கிருந்து அகமதாபாத் எனத் தொடர்ந்து பயணம் செய்து இரண்டு பிளே ஆஃப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடியது. சண்டிகரில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாகச் சனிக்கிழமை இரவு தாமதமாகவே அவர்கள் அகமதாபாத் வந்தடைந்தனர். இதனால் ஏற்பட்ட பயணக் களைப்புதான் இறுதிப்போட்டியில் அவர்களின் தோல்விக்குக் காரணமா என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்துப் பேசிய குஜராத் அணியின் கிரிக்கெட் இயக்குனர் விக்ரம் சோலங்கி, "தொடர் பயணங்கள் மற்றும் களைப்பைக் காரணம் காட்டி, பெங்களூரு அணியின் வெற்றியை நாங்கள் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. இறுதிப்போட்டியில் நாங்கள் 155 ரன்கள் மட்டுமே எடுத்தது குறைவான ஸ்கோர் தான். இருப்பினும் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் போராடினர். தவறு எங்கு நடந்தது என்பதைப் பகுப்பாய்வு செய்வோம். அதே சமயம் எதிரணியினர் சிறப்பாக விளையாடினர் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்" என்றார்.
IPL 2026: “180 ரன்கள் எடுத்திருந்தால்..” – தோல்விக்கு பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் உருக்கம்
பயணக் களைப்பு மற்றும் தீ விபத்து என அடுத்தடுத்த சோதனைகளைச் சந்தித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு, இந்த இறுதிப்போட்டி இரவு ஒரு கசப்பான அனுபவமாகவே முடிந்தது. வீரர்கள் அனைவரும் எவ்வித காயமும் இன்றி பத்திரமாக ஹோட்டல் அறைக்குச் சென்றடைந்ததை அடுத்து அணி நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது.