Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கும்மிடிப்பூண்டி சிறுமி வழக்கு: சிசிடிவி காட்சி வெளியான பிறகும் குற்றவாளியை பிடிக்க முடியாதது ஏன்?
படக்குறிப்பு, சாலையில் சிறுமி நடந்து சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து ஒரு நபர் வந்துள்ளார். இதனால் சிறுமி தயங்கியபடியே செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், குற்றத்தில் ஈடுபட்ட நபரைக் காவல்துறை கைது செய்யாததைக் கண்டித்து சனிக்கிழமையன்று (ஜூலை 19) அ.தி.மு.க போராட்டம் நடத்தியுள்ளது.
‘ஊடகங்களில் செய்தி வெளியான பிறகே காவல்துறையின் நடவடிக்கைகள் வேகம் எடுத்தன. குற்றத்தில் ஈடுபட்ட நபரின் அடையாளம் தெரிந்தாலும், கண்டறிவதில் தாமதம் செய்கின்றனர்’ என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனை மறுக்கும் கும்மிடிப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ, “விரைவில் குற்றத்தில் ஈடுபட்ட நபரைக் கைது செய்துவிடுவோம்” என்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி, கடந்த 12 ஆம் தேதியன்று பள்ளிக்குச் சென்றுள்ளார். அன்று சனிக்கிழமை என்பதால் சுமார் 12.45 மணியளவில் வகுப்பு முடிந்து வீட்டுக்குக் கிளம்பியுள்ளார்.
அப்பகுதியில் உள்ள ரயில் நிலையத்தின் ஓரத்தில் சிறுமி நடந்து சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இதனால் சிறுமி தயங்கியபடியே செல்வது ரயில் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சில ஊடகங்களில் வெளியானது. யார் இந்த காட்சிகளை வெளியிட்டது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
‘எட்டு நாட்கள் கடந்தும் நடவடிக்கை இல்லை’
“ரயில் நிலையம் அருகே உள்ள மாந்தோப்பில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. அவர் அழுதபடியே நடந்து சென்றபோது அருகில் இருந்தவர்கள் சிறுமியின் பாட்டி வீட்டுக்கு கூட்டிச் சென்றுள்ளனர்” எனக் கூறுகிறார், இ.கம்யூ கட்சியின் திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலாளர் அருள்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தாலும் சிறுமியை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களோ, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்” என்கிறார்.
தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
“சம்பவம் நடந்த அன்று மதியம் சிறுமியின் பெற்றோர் ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டனர். ஆனால், எட்டு நாட்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனக் கூறுகிறார் அருள்.
சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் தொடர்பாக ஏழு நாட்களுக்குப் பிறகே ஊடகங்கள் மூலமாக வெளியுலகின் கவனத்துக்குச் சென்றதாகக் கூறும் அருள், “இதன்பிறகே காவல்துறையின் நடவடிக்கைகள் வேகம் எடுத்தன. அதுவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தற்போது நடக்கும் விசாரணை முறையிலும் எங்களுக்குத் திருப்தியில்லை” எனத் தெரிவித்தார்.
சிறுமியின் பெற்றோர் அதே பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூன்று பேரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
சிறுமியின் தாய் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடூரத்துக்கு தற்போது வரை நீதி கிடைக்கவில்லை எனக் கூறுகிறார், சிறுமியின் தாய்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒருவர், என் மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்கிறார்.
“காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டால், ‘தேடிக் கொண்டிருக்கிறோம்’ என்கின்றனர். இதுவரை குற்றம் செய்த நபரைக் கைது செய்யவில்லை. என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.
“இப்படியொரு செயலில் ஈடுபட்ட நபர் வடமாநில தொழிலாளியாக இருக்கலாம் எனக் காவல்துறை கூறுகிறது. அப்படியானால், ஏதோ ஒரு வேலைக்காக அவர் இந்தப் பகுதிக்கு வந்திருக்க வேண்டும்” எனக் கூறுகிறார், இ.கம்யூ கட்சியின் திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலாளர் அருள்.
“சந்தேகத்துக்கு உரிய அந்த நபர், மீண்டும் ரயிலில் ஏறியதாகக் கூறுகின்றனர். அந்த நபர் ஆந்திர மாநில எல்லையான சூலூர்பேட்டைக்கோ, சென்னைக்கோ கிளம்பியிருக்க வேண்டும். காவல்துறையின் விசாரணை போதுமானதாக இல்லை என பாதிக்கப்பட்டவர் கருதுகின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
காவல்துறையைக் கண்டித்து போராட்டம்
இந்தநிலையில், சனிக்கிழமையன்று (ஜூலை 19) காவல்துறையைக் கண்டித்து ஆரம்பாக்கம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அ.தி.மு.க போராட்டம் நடத்தியுள்ளது.
தனது எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘பத்து வயது சிறுமியால் சாலையில் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியவில்லையே என்ற வேதனை, முதலமைச்சருக்கு இருக்கிறதா?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
‘சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபரை உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் அடையாளங்கள் தெரிந்தும் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரு மாநில எல்லைகளில் தேடுதல் பணி
அதேநேரம், இந்த வழக்கில் குற்றத்தில் ஈடுபட்ட நபரைக் கண்டறிய தொடக்கத்தில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.
தற்போது வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் இணையக் குற்றப் பிரிவு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை, ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீசிட்டி ஆகிய பகுதிகளில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
“சம்பவம் நடந்தபோது மர்ம நபருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த நபர் இந்தியில் பேசியதாக சிறுமி கூறியுள்ளார். அப்போது அங்குள்ள டவரில் பதிவான செல்போன் எண்களை வைத்து மர்ம நபரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன” என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத காவலர் ஒருவர்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி கூறுவது என்ன?
ஆரம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் ஜவஹர் குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது. “அலுவல் கூட்டத்தில் இருப்பதால் தற்போது பேச இயலாது” என்று மட்டும் பதில் அளித்தார்.
“வழக்கில் எந்தவித சிரமங்களும் இல்லை. குற்றம் செய்த நபரை விரைவில் கைது செய்துவிடுவோம். அதைப் பற்றி ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்” என்கிறார் கும்மிடிப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு