தேர்தல் அறிவிப்பாக வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலய வீதி விடுவிப்பு மற்றும் காணி விடுவிப்பினை அரசு ஒருபுறம் முன்னெடுத்தவாறே மறுபுறம் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு அடையாளப்படுத்திய காணிகளை எதிர்வரும் முன்று மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால் அவை அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழ் மொழியின்றி ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் மட்டும் காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் வர்த்தமானி அறிவிப்பு பிரசுரமாகியுள்ளது.
இதனிடையே யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
காணி விடுவிக்கும் நிகழ்வு இன்றையதினம் (01) முற்பகல்; யாழ் மாவட்ட செயலகத்தில் மூடப்பட்ட அறையினுள் இடம்பெற்றுள்ளது.
யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத்தவினால் யாழ் மாவட்ட செயலாளர் பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.ஆயினும் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட பொதுமக்களிற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
வலி வடக்கு வயாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும் மாங்கொல்லை பகுதியில் 15 ஏக்கரும் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் 5 ஏக்கர் காணி நிலமுமாக சுமார் 40 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
எனினும் கற்கோவளம் காணிகளை விடுவிக்ககோரி காணி உரிமையாளரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினையடுத்து நீதிமன்று அங்கிருந்த கடற்படையினரை வெளியேற உத்தரவிட்டுள்ளது.