← முகப்பு செய்திகள்

’40 கிலோ தங்கம் உள்ளது. எனக்காக கணவர் ஆண்டுக்கு 3 கிலோ தங்கம் வாங்குகிறார்’ – யார் இந்த ‘தங்க ராணி’?

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 6 பார்வைகள்
’40 கிலோ தங்கம் உள்ளது. எனக்காக கணவர் ஆண்டுக்கு 3 கிலோ தங்கம் வாங்குகிறார்’ – யார் இந்த ‘தங்க ராணி’?

பட மூலாதாரம், Netflix

"என் கணவர் சதீஷுடன் வாழத் தொடங்கியதிலிருந்து, தினமும் காலையில் அவரது பாதங்களை மசாஜ் செய்துவிடுகிறேன். அவர் இளவரசரைப் போல உறக்கத்திலிருந்து விழித்தெழுவார். இந்து மத நம்பிக்கைகளின்படி, ஒரு மனைவி தினமும் காலையில் கணவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினால், வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பார் என்று அவர் நம்புகிறார்," என்று கூறுகிறார் தபிண்டா.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள 'தேசி பிளிங்' (Desi Bling) என்ற புதிய ரியாலிட்டி ஷோவின் தொடக்கத்திலேயே இந்த காட்சி இடம்பெறுகிறது. இதில், துபாயில் வசிக்கும் இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் சதீஷ் சன்பால், தனது மனைவி தபிண்டாவிடம் காலை வேளையில் பாத மசாஜ் செய்து கொள்ளும் காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

துபாயில் வசிக்கும் வசதி படைத்த இந்தியர்களின் ஆடம்பர வாழ்க்கை, அவர்களின் உறவுகள், வணிகம், சமூக விருந்துகள், அரசியல் மற்றும் அதில் உள்ள சிக்கல்களைச் சித்தரிக்கும் ஒரு ரியாலிட்டி ஷோவே இந்த 'தேசி பிளிங்'. இதில் தொலைக்காட்சி நட்சத்திரங்களான தேஜஸ்வி பிரகாஷ், கரண் குந்த்ரா ஆகியோருடன், ஜபல்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சன்பால் மற்றும் அவரது மனைவி தபிண்டா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானிய-பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த தபிண்டா, பல முகங்களைக் கொண்டவர். சிலர் அவரை வெறும் தொழிலதிபரின் மனைவியாக மட்டுமே பார்க்கின்றனர், மற்றவர்கள் அவரை ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் என்று போற்றுகின்றனர். சமூக வலைதளங்களில் அவர் ஒரு பிரபலமான சமூக ஆர்வலராகவும் வலம் வருகிறார். அதேசமயம், இந்த ஷோவில் அவர் கூறிய கருத்துகள் ஆணாதிக்கத்தனமானவை என்று பல தரப்பிலிருந்து விமர்சனங்களும் எழுந்துள்ளன.

ஷோவில், தபிண்டாவின் கணவர் பல பெண்களுடன் நேரத்தைச் செலவிடுவதாக அவரது தோழிகள் குறிப்பிடும்போது, தபிண்டா மிகுந்த அமைதியுடன் பதிலளிக்கிறார். "சதீஷுக்குப் பெண்களுடன் நேரத்தைச் செலவிடப் பிடிக்கும். அது எனக்கு சில நேரங்களில் பொறாமையைத் தந்தாலும், அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அவர் ஒவ்வொரு பார்ட்டியிலும் வெவ்வேறு பெண்களுடன் இருந்தால் எனக்குப் பிரச்னையில்லை. ஆனால், ஒரே பெண்ணுடன் மீண்டும் மீண்டும் பழகினால் மட்டுமே எனக்குப் பிரச்னை. ஏனெனில், ஒரே நபரைத் தொடர்ந்து சந்திக்கும்போது காதல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது," என்று அவர் கூறுகிறார்.

ஆணாதிக்கப் பார்வை

Tabinda, Netflix, Gold, Desi Bling

பட மூலாதாரம், Netflix

நிறுவன உளவியலாளர் மற்றும் மணவாழ்வு ஆலோசகரான நிஷா கன்னா, இந்த ரியாலிட்டி ஷோவின் போட்டியாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இது குறித்து அவர் கூறுகையில், "தபிண்டாவுக்குத் தன் மீது போதிய நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அவர் ஆணாதிக்க மனப்பான்மையையும், அதன் உண்மைகளையும் முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்டார். ஒருவேளை தபிண்டா இதுபோல பார்ட்டிகளுக்குச் சென்று வெவ்வேறு ஆண்களைச் சந்தித்தால், அதை அவருடைய கணவர் ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வியை ஷோவில் அவரிடம் எழுப்பியிருக்க வேண்டுமல்லவா?" என்று கேள்வி எழுப்புகிறார்.

இந்த ஷோ குறித்துத் திரைப்படத் தயாரிப்பாளர் லட்சுமி ஐயர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், "கணவர் தன்னை ஏமாற்றுகிறார் என்பதில் ஒரு மனைவிக்குத் துளியும் கவலையில்லை என்பதையும், ஒவ்வொரு முறையும் அவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதுதான் அவருக்குத் திருப்தி அளிக்கிறது என்பதையும் ஒரு ரியாலிட்டி ஷோவில் பார்த்தேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "இத்தகைய அபத்தமான கருத்துகளை இயல்பானதாகக் காட்ட வேண்டாம். நம்பிக்கையும் நேர்மையும் இன்றும் மிக முக்கியமான நற்பண்புகளே. ஓடிடி தளங்களில் இத்தகைய கருத்துகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகக் காட்டப்படுவது, நமது சமூகத்தின் தரம் எந்த அளவுக்குச் சரிந்துவிட்டது என்பதையே காட்டுகிறது," என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

'தேசி பிளிங்' ஷோவுக்கு விமர்சகர்கள் இருப்பது போலவே, அதைப் ரசிப்பவர்களும் இருக்கிறார்கள்.

துபாயில் வசிக்கும் அனீலி பிரிஜலால், தனது முகநூல் பக்கத்தில், "இந்த ஷோவைப் பார்த்து நான் ரசித்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதில் நிறைய நாடகங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் மற்றவர் முதுகுக்குப் பின்னால் குத்திக் கொள்கிறார்கள். அடுத்த சீசனுக்காகக் காத்திருக்கிறேன்," என்று எழுதியுள்ளார்.

பொழுதுபோக்குத் துறை வலைப்பதிவரான மரியா மோட்ஸ், இந்த ஷோவைப் பார்க்கத் தொடங்கினால் இறுதிவரை பார்க்காமல் இருக்க முடியாது என்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

ஷோவைப் பார்த்த பிறகு நிஷா கன்னா குறிப்பிடும்போது, "தேசி பிளிங் ஒரு ஆணாதிக்கப் போக்கையும், குடும்ப அரசியலையும், பணம் மற்றும் சுயநலத்திற்காக மட்டுமே கட்டமைக்கப்பட்ட உறவுகளையும் வெளிப்படையாகக் காட்டுகிறது," என்றார்.

"இருப்பினும், இந்த ஷோ பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டுள்ளது. இவ்வளவு வசதி படைத்தவர்கள் எப்படி வாழ்கிறார்கள், என்ன அணிகிறார்கள், அவர்களின் பார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். அதனால், மக்கள் இதைத் தொடர்ந்து பார்ப்பார்கள்," என்று அவர் முடிக்கிறார்.

'தங்க ராணி'யா அல்லது 'தங்க வேட்டை'யா?

Tabinda, Netflix, Gold, Desi Bling

பட மூலாதாரம், Netflix

'தேசி பிளிங்' நிகழ்ச்சியில் பெண் கதாபாத்திரங்கள் அதிகம் விவாதிக்கப்பட்டாலும், ஆண் கதாபாத்திரங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

உதாரணத்திற்கு, 'உங்களுக்கு தேஜஸ்வி சரியான வாழ்க்கைத்துணை அல்ல' என்று கரண் குந்த்ராவிடம் தபிண்டா அறிவுரை கூறும்போது, கரண் அவர் இல்லாத நேரத்தில், "வாழ்க்கையில் எதையாவது சாதித்தவர்களிடம்தான் நான் அறிவுரை கேட்பேன். தபிண்டா பாபி என்பவருக்கு சதீஷின் மனைவி என்ற அடையாளத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது?" என்று குறிப்பிடுகிறார்.

இவ்வளவு பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்குத் தன் கணவருக்குத் துணையாக இருந்ததும், சொந்தமாக நிறுவனத்தை நடத்துவதும், வீட்டை நிர்வகிப்பதும், மகளைக் கவனித்துக்கொள்வதும் அவரது சாதனைகள் இல்லையா என்ற கேள்வியை கரணின் இந்தக் கருத்து எழுப்புகிறது. இருப்பினும், சக போட்டியாளர்கள் தேஜஸ்விக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், கரண் இறுதியாகத் தேஜஸ்விக்கு ஆதரவாகவே நிற்கிறார்.

நிகழ்ச்சியில் 'பிந்தா' என்று அனைவராலும் அழைக்கப்படும் தபிண்டா, ஒருவேளை இந்தத் தொடரின் மிக முக்கியமான கதாபாத்திரமாக மாறியிருக்கலாம். 'ஃபேபுலஸ் லைவ்ஸ் வெர்சஸ் பாலிவுட் வைவ்ஸ்' தொடருக்குப் பிறகு ஷாலினி பாஸி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது போல, தபிண்டாவும் கவனம் பெற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தபிண்டா பெரும்பாலும் பெரும் தொழிலதிபரின் மனைவியாகவே காட்டப்படுகிறார்; அவர் பார்ட்டிகளுக்குச் செல்வதும், தனது செல்வத்தை எந்த ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாகக் காட்டுவதுமாகவே அவரது காட்சிகள் அமைந்துள்ளன.

தேஜஸ்வி பிரகாஷுடனான முதல் சந்திப்பிலேயே தபிண்டா, "என்னிடம் 40 கிலோ தங்கம் இருக்கிறது என்பது உன்னால் நம்பவே முடியாது. என் மகள் பிறப்பதற்கு முன்பே, அவளுக்காகத் தங்கத்திலான உணவுப் பாத்திரங்களைச் செய்யச் சொன்னார் என் கணவர். அவளிடம் தங்கத்தட்டு, தங்கக்கரண்டி மற்றும் தங்க டம்ளர் என அனைத்தும் உண்டு" என்று கூறுகிறார்.

தொடர்ந்து, "அவள் துபாயிலேயே மிகவும் வசதியான குழந்தை. அவளது முதல் பிறந்தநாளில் 24 கேரட் தங்கத்திலான உடையை அணிவித்தோம். சதீஷ் ஒவ்வோர் ஆண்டும் எனக்காக மூன்று கிலோ தங்கம் வாங்குகிறார்," என்றும் அவர் பெருமையுடன் கூறுகிறார்.

அவருடைய கணவர் தபிண்டாவை 'தங்க ராணி' என்று அழைக்க, சமூக வலைதளங்களில் சிலர் அவரை 'கோல்ட் டிக்கர்' (Gold Digger – பணத்திற்காகத் திருமணம் செய்துகொள்பவர்) என்று விமர்சிக்கின்றனர்.

தபிண்டா யார்?

தபிண்டாவின் சமூக வலைதளப் பக்கங்களைப் பார்த்தால், அங்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு தபிண்டாவைக் காண முடிகிறது.

லிங்க்ட்இன் தளத்தில், 'ஆனெக்ஸ் கேபிடல் ஃபைனான்சியல் மார்க்கெட்ஸ்' (ANAX Capital Financial Markets) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநராகத் தபிண்டா குறிப்பிடப்பட்டுள்ளார். இவரது நிறுவனம் 2025-ஆம் ஆண்டு, நிதிச் சந்தையில் 'வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம்' என்ற விருதைப் பெற்றுள்ளது. அங்கு அவர் வணிகத் தலைமைத்துவம் மற்றும் பெண் தொழில்முனைவோர் குறித்துப் பேசுகிறார்.

இன்ஸ்டாகிராமில் அவர் தன்னை ஒரு 'மம்ப்ரெனர்' (Mompreneur – தாய் மற்றும் தொழில்முனைவோர்) மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

'தேசி பிளிங்' நிகழ்ச்சியில் நாடகம், மோதல்கள், வதந்திகள், கவர்ச்சி மற்றும் சதித்திட்டங்கள் என அனைத்தும் உள்ளன. மற்ற நிகழ்ச்சிகளைக் காட்டிலும் இதில் ஆடம்பரத்தின் அளவு பத்து மடங்கு அதிகம் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், 'தேசி பிளிங்' நிகழ்ச்சி பல சங்கடமான கேள்விகளையும் நமக்குள் விட்டுச் செல்கிறது.

நிஷா கன்னா இதுகுறித்துக் கூறும்போது, "பல இடங்களில் தபிண்டா ஆணாதிக்கச் சிந்தனைகளை ஊக்குவிக்கிறார்; அதேநேரத்தில் அவரும் அந்தச் சிந்தனையின் ஒரு பலியாடாகவே இருக்கிறார்," என்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் தபிண்டா, தான் 8 ஆண்டுகளாகத் தாயாக முடியாமல் இருந்தபோது சந்தித்த போராட்டங்கள் குறித்துப் பேசுகிறார். "குழந்தை இல்லாமல் இருப்பது மிகவும் கடினம். இந்தியக் குடும்பங்களில் இது எப்படிப்பட்ட சூழலை உருவாக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்தானே?" என்று அவர் கேட்கிறார்.

தபிண்டா தனது கருமுட்டைகளை லண்டனில் பாதுகாத்து வைத்துள்ளார். ஐவிஎஃப் சிகிச்சை மூலம் அவர் மீண்டும் தாயாக விரும்புகிறார்.

Tabinda, Netflix, Gold, Desi Bling

பட மூலாதாரம், Prodip Guha/Getty Images

தபிண்டாவைப் பொறுத்தவரை மீண்டும் தாயாவது என்பது, தனது கணவரை மீண்டும் தன்வசப்படுத்த அவர் மேற்கொள்ளும் கடைசி முயற்சியாக இருக்குமா?

அடிக்கடி அவர் குறிப்பிடுவதைப் போல, "இன்னொரு குழந்தை நம் வாழ்க்கைக்குள் வந்தால், சதீஷ் பார்ட்டிகளுக்குச் செல்வதைக் குறைத்துக் கொள்வார்; எங்கள் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்" என்று அவர் நம்புகிறார்.

முழு நிகழ்ச்சியையும் பார்த்தால், மலைக்க வைக்கும் செல்வம், விலையுயர்ந்த சொகுசு கார்கள், பிரமாண்டமான வீடுகள், கவர்ச்சி மற்றும் துபாயின் பார்ட்டிகள் என 'தேசி பிளிங்' நிகழ்ச்சியின் பிரமாண்டம் பார்வையாளர்களை ஒரு நிமிடம் திகைக்க வைத்து விடும்.

விலையுயர்ந்த பிராண்டுகள் அனைத்தும், நம் வீடுகளில் வெங்காயம், உருளைக்கிழங்கு கிடைப்பதைப் போல மிக சாதாரணமாக வந்து செல்கின்றன. 'பிளிங்' என்றால் மின்னும், விலையுயர்ந்த, ஆடம்பரமான பொருட்கள் என்று பொருள்.

'தேசி பிளிங்' என்பது வெறும் பகட்டான மின்னும் பொருட்கள் பற்றிய நிகழ்ச்சி மட்டுமல்ல; இது தனிமை, வெறுமை மற்றும் அரைகுறைத்தனத்தின் வெளிப்பாடு. இவை விலையுயர்ந்த பொருட்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்களால் மறைக்கப்படுகின்றன.

இது பொழுதுபோக்கிற்கான நிகழ்ச்சி மட்டுமல்ல, விருப்பப்பட்டால் இதிலிருந்து ஒரு பாடத்தையும் கற்றுக்கொள்ளலாம். 'தேசி பிளிங்'கில் எது பகட்டானது, எது உண்மையானது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை பார்வையாளர்களின் பார்வையிலேயே உள்ளது.

சதீஷ் சன்பால் கூறுவது போல, "எனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாததால் நான் பெரும்பாலும் இந்தியிலேயே பேசுகிறேன், ஆனால் எனது பணம் பேசுகிறது."

ஆம், இந்த இடைப்பட்ட நேரத்தில் தபிண்டா சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
செய்திகள்
Ban vs Aus 1st odi- Bangladesh Clinches Historic ODI Win Against Australia
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
Ind a vs SL A- Ruturaj century Powers India A Edge Sri
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
India T20I Squad For Ireland And England Tour- Mohammed Siraj Rested Prasidh
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
விஜய் தொடங்கிய ‘சிங்கப்பெண்’ படை பற்றி காவலர்கள் கூறுவது என்ன? எதிர்க்கட்சிகள் முன்வைத்த 3 விமர்சனங்கள்
4 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net