அனர்த்தத்தில் அரசியல் செய்வதை தவிருங்கள் – தேசிய மக்கள் சக்திக்கு வலி. தென்மேற்கு தவிசாளர் சாட்டை

by ilankai

அப்பாவி மக்களை தூண்டி அவர்களின் சிந்தனையை மாற்றி அனர்த்தத்தில் அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியிடம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசிதன் கோரிக்கை விடுத்தார்.வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே தவிசாளர் இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்எமது பிரதேசத்தில் இருக்கக்கூடிய கல்லுண்டாய் குடியிருப்பு பகுதி மக்கள் கடந்த ஐந்தாம் திகதி குறித்த பகுதிக்கு தண்ணீர் கொடுக்க சென்ற வாகனத்தை இடைமறித்து போராட்டத்தை நடத்தி இருந்தனர்.பிரதேச சபை நீண்ட காலமாக முழுமையாக தண்ணீர் வழங்குவதில்லை எனவும் அதனால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.2019 ஆம் ஆண்டு தற்போது இருக்கக்கூடிய ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக இருந்த காலத்தில் தான் அந்த குடியிருப்பு கல்லுண்டாயில் அமைக்கப்பட்டது. அந்த நாள் முதல் அந்த குடியிருப்புக்கான தண்ணீர் சேவையை பிரதேச செயலகம் வழங்கியிருந்தது. ஆனால் பிரதேச செயலகம் அதனை தொடர்ச்சியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டதனால் எம்மிடம் கேட்டதற்கமைய ஐந்து வருடங்களாக இதனை நாம் செய்கிறோம்.தண்ணீர் இல்லாமல் அந்த குடியிருப்பில் யாரும் மரணித்ததாகவோ ஏதும் நடந்ததாகவோ இதுவரை எந்த தகவலும் பதிவில் இல்லை. பிரதேச சபை தன்னுடைய கடமையை மிகச் சரியாக செய்து வருகிறது. பிரதேச சபையின் வளங்களை பொறுத்தவரையில் சில தடங்கலும் இடையூறுகளும் ஏற்படும் நேரங்களில் தண்ணீர் போகின்ற நேரங்கள் தவறினாலும் அந்த தண்ணீர் ஏதோவொரு விதத்தில் சென்றடையும்.கல்லுண்டாயில் மழை அதிகம் பெய்யும் நேரத்தில் பெரிய பவுசர்களை அங்கு கொண்டு செல்ல முடியாது. அது புதைந்து விடும். பிறகு அதனை வெளியில் கொண்டுவர முடியாது. அந்த காலங்களில் சிறிய பவுசர்களை பயன்படுத்துகிறோம்.வெள்ளம் அதிகரித்தால் எந்த பவுசரையும் அதற்குள் கொண்டு செல்ல முடியாது. இந்த நிலைமையை கருத்திற் கொண்டு தொடர்ச்சியாக தண்ணீரை வழங்கி வந்தோம்.ஆனால் தற்போது பேரிடர் ஏற்பட்ட பின்னர் கடந்த ஐந்தாம் திகதி ஒரு போராட்டத்தை செய்திருக்கிறார்கள்.கடந்த 24ஆம் திகதியே கடைசியாக தண்ணீர் வந்தது என்றும் இதுவரைக்கும் தண்ணீர் வரவில்லை என்றும் பிரதேச சபையின் மீது குற்றஞ்ச்சாட்டி  இருந்தார்கள்.நாங்கள் தண்ணீர் அடிக்கும் போது பிரதேச சபையினால் ஒரு பதிவேடு பயன்படுத்தப்படுவது வழமை. அதன் மூலம் தண்ணீர் அடிக்கப்படுவது குறிக்கப்படும். அந்த ஏட்டினுடைய பதிவின்படி 27ஆம் திகதி எங்கள் பிரதேச சபை பவுசர் அந்த குடியிருப்புக்கு தண்ணீர் கொண்டு போய் வழங்கி இருக்கிறது.28ஆம் திகதி மழை மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளது. 29 ஆம் திகதி அந்த குடியிருப்பில் இருந்த மக்கள் அதற்கு அருகில் இருந்த வைஎம்சிஏ  கட்டிடடம் நலன்புரி நிலையமாக மாற்றப்பட்டு அதில் குடியமர்த்தப்பட்டார்கள் என்றபிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த வைம்சிஏ கட்டிடத் தொகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்தோம்.வழமைக்கு மாறாக அனர்த்த காலத்தில் கட்டுடை, ஆனைக்கோட்டை, சுதுமலை வடக்கு, சாவல்கட்டு, உயரப்புலம், சில்லாலை போன்ற பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட நலன்புரி நிலையங்களுக்கு தண்ணீர் தாங்கிகள் வைக்கப்பட்டு புதிதாக நீர்விநியோகம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.அதையும் தாண்டி பல நன்னீர் குடியிருப்பு கிணறுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் அந்த இடத்தில் வாழும் மக்களுக்கும் தண்ணீர் தாங்கிகளை வைத்து தண்ணீர் வழங்கியிருந்தோம். கிட்டத்தட்ட பத்து தண்ணீர் தாங்கிகளை அனர்த்தத்துக்காக புதிதாக வைத்து சேவையில் ஈடுபட்டோம்.அனர்த்த காலத்தில் இவ்வாறான நெருக்கடி நிலையால் 27-ம் திகதிக்குப் பிறகு கல்லுண்டாய் பகுதிக்கு உள்ளே சென்று தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை. ஏனென்று சொன்னால் அங்குள்ள மக்கள் அருகில் உள்ள நலன்புரி நிலையமாக மாற்றப்பட்ட வைம்சிஏ கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டதால் அங்கு சென்றா விநியோகிக்கவில்லை.கல்லுண்டாய் மக்கள் குடியிருப்பில் இருந்தாலும் அங்கு வாகனங்களை கொண்டு சென்று விநியோகிக்க முடியாது. ஏனென்று சொன்னால் வாகனங்கள் புதைக்கப்பட்டால் வேறு எங்குமே தண்ணீர் விநியோகம் செய்ய முடியாது.தற்பொழுது அந்த மக்கள் இவ்வாறு குற்றச்சாட்டை செய்கிறார்கள். எங்களைப் பொருத்தவரை அவர்களாக இவ்வாறு போராட்டத்தை தொடங்கி செய்யவில்லை. யாரோ ஒரு அரசியல் சார்ந்தவர்கள் இதனை செய்திருக்கிறார்கள் என்றே எண்ணுகிறோம்.ஏனென்றால் அன்றையப் போராட்டத்திற்கு நாங்கள் போனபோது அங்கிருந்த மக்களை விட தற்போது இருக்கக்கூடிய அரசாங்கக் கட்சியினுடைய அமைப்பாளரும் அவர்கள் சார்ந்த தொண்டர்களுமே அதிகமாக இருந்தார்கள். அவர்களே அங்கு காணொளிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.நான் அங்கு சென்று எமது நிலைப்பாட்டை கூறி வழமையைப் போல தண்ணீர் வரும் என தெரிவித்திருந்தோம். நாம் சொன்ன காரணத்தை கூட கேட்காமல் அரசியல் காரணத்திற்காக எம்முடன் முரண்பட்டார்கள்.அதே அரசாங்கக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரின் முகநூலிலும் அரசாங்க கட்சி அமைப்பாளர்களின் முகநூலிலும் ஆதரவாளர்களின் முகநூலிலும் தான் இந்த தகவல் பரப்பபட்டது.அப்பாவி மக்களை தூண்டி அவர்களின் சிந்தனையை மாற்றி அனர்த்தத்தில் அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.கல்லுண்டாய் குடியிருப்பில் எட்டாம் மாதத்தில் இருந்து இன்று வரைக்கும் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் தண்ணீக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனாலும் குடிநீர் அத்தியாவசியமான ஒன்று என்ற வகையில் அவர்களது வறுமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிறுத்தாமல் குடிநீரை வழங்கிக் கொண்டு வருகிறோம்.அதனை நிறுத்தினால் அது மனிதாபிமானமற்ற செயல். அதற்காக காசு கட்டினார்களோ கட்ட வில்லையோ நாங்கள் குடிநீரை வழங்கி வருகிறோம்.அன்றைய போராட்டம் முடிவடைந்த பின்னர் குறித்த அரச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அந்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அது நமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் நாளாந்தம் பிரச்சனையை கொண்டுள்ள மக்களை தொடர்ச்சியாக கவனிக்கப் போவது எங்கள் பிரதேச சபை தான். அதனை நாம் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.ஆளுநரிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறோம்.அந்த குடியிருப்புக்கு பக்கத்தில் தான் நீர் வழங்கல் சபை உள்ளது.அதன் மூலமாக கல்லுண்டாய் பகுதிக்கு குடிநீரை வழங்கினால் இந்தப் பிரச்சினை விரைவில் தீர்ந்து விடும் – என்றார்.

Related Posts