மன்னார் மாவட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்!  – Global Tamil News

by ilankai

மன்னார் மாவட்டத்தில் டித்வா புயலால் உருவாகியுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று இன்று (02.) காலை மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் நிலையில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள், பொதுமக்கள் பாதுகாப்பு, மற்றும் பல துறைகளின் ஒருங்கிணைப்பு தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன் போது நலன்புரி மையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அவசர மருத்துவ சேவைகள் வழங்கல்,தண்ணீர் மாசுபாடு தடுப்பு மற்றும் நுளம்பு பெருக்கம் கட்டுப்பாடு,குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் ஆகியோருக்கான சிறப்பு சுகாதார பராமரிப்பு,இடருக்குப் பிந்தைய தொற்றுநோய் அபாயங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள்,புயலால் சேதமடைந்த பயிர்களுக்கான ஆரம்பிக மதிப்பீடுகள்,கால்நடை வளர்ப்பில் ஏற்பட்ட சேதங்களுக்கு ஆதரவுத் திட்டங்கள்,சேதமடைந்த விவசாய உட்கட்டமைப்புகளின் மறுசீரமைப்பு,நீரேற்று வாய்க்கால்கள், அணைகள் மற்றும் தடுப்பணைகளின் பாதுகாப்பு நிலை ஆய்வு,வெள்ளநீர் வெளியேற்றத்திற்கான அவசர நடவடிக்கைகள்,நீர் பாசனத் திட்டங்களில் நீர் மேலாண்மை கட்டுப்பாடுகள்,தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் அடிப்படை வசதிகள்,உணவு, குடிநீர், சுகாதாரம், சத்துணவு—உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டறிந்ததுடன், தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதையும் வலியுறுத்தினார்.அனர்த்த சூழ்நிலையில் முப்படையினர்,  காவல்துறையினா் , கடற்படை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்கள் வழங்கும் அர்ப்பணிப்பு மிக்க சேவைகள் பாராட்டப்பட்டன. மேலும், சீரற்ற வானிலை தொடர்பான அவசர நிலைகளை எதிர்கொள்ள பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.இக்கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த திணைக்களத் தலைவர்கள், முப்படையினர், காவல்துறை  அதிகாரிகள், ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts