பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், இவ்வுதவிகள் பயனாளிகளைச் சரியான முறையில் சென்றடைவதையும், மோசடிகள் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்த, அந்தந்த மாவட்டச் செயலர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’ தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஐ.நா. முகவர் அமைப்புக்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுடனான அவசர கலந்துரையாடல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது: பல தரப்பினரும் உதவிகளை வழங்கத் தயாராக உள்ளனர். இருப்பினும், அனைவரும் ஒரே வகையான உதவிகளை வழங்குவது மக்களின் முழுமையான தேவையைப் பூர்த்தி செய்யாது. மாவட்டச் செயலகங்கள் ஊடாகத் தேவைகள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சில இடைத்தரகர்கள் அல்லது குழுக்கள், உதவிகளை வழங்குவதாகக் கூறி வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் நிதியைப் பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்குப் பெயரளவில் மட்டும் சிறிய உதவிகளை வழங்கிவிட்டுப் ஒளிப்படங்களை அனுப்புவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்வாறான மோசடிகளைத் தடுக்க, நன்கொடையாளர்கள் மாவட்டச் செயலகத்தின் ‘தேவைப் பட்டியலை’ பெற்றுக்கொண்டு உதவிகளை வழங்குவதே சிறந்தது. அரசாங்கம் அத்தியாவசிய நிதியையும் நிவாரணங்களையும் வழங்கி வருகிறது. எனவே, அரசால் வழங்கப்படும் நிவாரணங்களுக்கு அப்பால், மக்களுக்குத் தேவைப்படும் ஏனைய உதவிகளை அரச சார்பற்ற நிறுவனங்களும், நன்கொடையாளர்களும் வழங்குவது பொருத்தமாக இருக்கும். மக்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், அவர்களின் தேவைகள் மாறுபடும். வாழ்வாதார உதவிகள் மற்றும் மீள்குடியேற்றத் தேவைகளை அறிந்து உதவுவது அவசியம். அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண நிதியத்துக்கும் புலம்பெயர் உறவுகள் நம்பிக்கையுடன் நிதியுதவிகளை வழங்கி வருவதாக ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார். இக்கலந்துரையாடலில் ஐ.நா. முகவர் அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், தமது நிவாரணப் பணிகளை மாவட்டச் செயலகங்களின் ஒருங்கிணைப்புடனேயே முன்னெடுப்பதாக உறுதியளித்தனர்.அத்துடன் தொடர்புகளுக்கு – இடர் முகாமைத்துவக் குழுவின் மாவட்ட ரீதியான இணைப்பாளர்களானயாழ்ப்பாணம்: சுரேந்திரநாதன் – 077 484 0199 கிளிநொச்சி: அஜித்தா – 077 565 0671 மன்னார்: பிரதீப் – 071 990 5324 வவுனியா: கமலதாசன் – 077 613 8369 முல்லைத்தீவு: ரஜினிகாந்த் – 077 370 7720கோகுலராஜ் – 077 395 7886 ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு ஆளுநர் அறிவித்துள்ளார்.
நிவாரண மோசடிகளை தவிர்க்க 'இடர் முகாமைத்துவக் குழுக்களை' தொடர்பு கொள்ளவும் – Global Tamil News
4