தமிழ் கட்சிகளின் பிளவினால் அரசியல் தீர்வின் முக்கியம் இழக்கப்படுகிறது என கூறுகிறார் சிங்கள அரசியல் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய. தமிழ் அரசியல்வாதிகளின் தன்னகம்பாவம் நீளும்வரை தமிழ் தேசிய அரசியலுக்கு எதிர்காலம் இல்லை என்கிறார் உளவியல் மருத்துவர் சி.சிவதாஸ். இவைகளை கேட்டும் கேட்காதுபோல் நடிப்பவர்களுக்கு என்ன வைத்தியம் செய்யலாம்?ஒரு காலத்தில் வளர்பிறையாகவிருந்த தமிழர் அரசியல் இன்று தேய்பிறையாகிவிட்டது என்பதற்கு இரு வேறு துறைசார் பிரமுகர்கள் அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்த கருத்துகள் சான்றாக அமைந்துள்ளது. இவர்கள தெரிவித்த அபிப்பிராயங்கள் நேரடியாக தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைமைத்துவத்துக்குமானவை. வெட்கி நாணப்பட வேண்டிய அளவுக்கு இவர்களின் கருத்துகள் இன்று தமிழ் கட்சிகளை தாங்கிப் பிடித்திருப்பவர்களை சாடுவதாக உள்ளது. தமிழ்க் கட்சிகள் பிளவுண்டு நிற்பதால் தமிழர்களுக்கான அரசியல் தீர்வின் முக்கியத்துவம் மூடி மறைக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார் இலங்கை சோசலிஸ கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜெயசூரிய. பொதுவேலைத்திட்டம் ஒன்றின் கீழ் வடக்கிலிருந்து ஒருமித்த குரல் வரவேண்டியது அவசியம் என்றும் இவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். சிறிதுங்க ஜெயசூரிய இலங்கையின் அரசியல்வாதிகளில் மூத்த ஒருவர். தொழிற்சங்கவாதியும்கூட. ஆரம்பத்தில் இலங்கை சமசமாஜ கட்சியிலும் பின்னர் நவசமாஜ கட்சியிலும் சேர்ந்து இயங்கியவர். சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவராயினும் பொதுவுடமை கொள்கை ஊடாக தமிழர் பிரச்சனையை நன்கறிந்தவர். 2005, 2024 ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டவர். தமிழரசு கட்சி தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுடன் தேநிலவு கொண்ட நல்லாட்சிக் காலத்தில் தமிழருக்கு அரசியல் பிரச்சனை இல்லை என்ற தோற்றம் உருவாக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள இவர், அநுர அரசிலும் தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்களில் முக்கியத்துவம் மழுங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தமிழர் அரசியல் தரப்பு தங்களுக்குள் பிளவுபட்டிருப்பதே இதற்கெல்லாம் காரணம் என்பது இவர் முன்வைக்கும் வாதம். சிறிதுங்க ஜெயசூரிய கூற்று நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு 1965 – 1970ம் ஆண்டுக்காலத்தை திரும்பிப் பார்க்க வேண்டும். இலங்கையின் முதலாவது தேசிய அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியின் டட்லி சேனநாயக்கவின் தலைமையில் உருவானது. இதில் தமிழரசு கட்சி சார்பில் முருகேசு திருச்செல்வம் (நீலன் திருச்செல்வத்தின் தந்தை) அமைச்சராகவும், தமிழ் காங்கிரஸ் சார்பில் உடுப்பிட்டி எம்.பி. மு.சிவசிதம்பரம் உபசபாநாயகராகவும் இருந்தனர். தமிழர்களுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைக்க டட்லி அரசின் ஐந்து வரவு செலவுத் திட்டத்திலும் நிதி ஒதுக்கப்பட்டது. திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் வேண்டுமென தமிழரசு கட்சி கேட்க, யாழ்ப்பாணத்தில் இந்து பல்கலைக்கழகம் வேண்டுமென தமிழ் காங்கிரஸ் கட்சி கோர – இவர்களின் இழுபறியால் தமிழ் பல்கலைக்கழகமே கிடைக்காது போனது. ஒரே அரசில் இரண்டு தமிழ் கட்சிகளும் அங்கம் வகித்து பதவிகள் பெற்ற போதிலும் பொதுவிடயத்தில் பிளவுபட்டு நின்றதால் அன்று கிடைத்திருக்க வேண்டிய தமிழருக்கான பல்கலைக்கழகம் அம்போவானது. தமிழ் கட்சிகளின் பிளவும் அரசியல்வாதிகளின் இணக்கமின்மையும் அரசியல் தீர்வை மூடிமறைக்கிறது என்று சிறிதுங்க ஜெயசூரிய சொன்னதை மேற்சொன்ன பல்கலைக்கழக விவகாரம் நிரூபித்து நிற்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை இவ்வாறான பிளவுகளால் சாக்கு மூட்டையிலிருந்து சிதறிய நெல்லிக்கனிகள் போல தமிழ்த் தேசிய அரசியல் சுயநல பதவி மோகத்தால் சிதைந்து போயுள்ளது. சிங்கள அரசியல்வாதி ஒருவர் தமிழரின் ஒற்றுமையின்மையை சுட்டிக்காட்ட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமடைந்திருப்பது முழுத் தமிழ்ச் சமூகத்துக்கும் அவமானமானது. சிறிதுங்க ஜெயசூரிய தெரிவித்த அதே கருத்தை ஒத்ததாக, சற்று அழுத்திக் கூறும் வகையில் இன்னொருவர் யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற பகிரங்க நிகழ்வொன்றில் கூறியுள்ளார். ‘தமிழ் அரசியல்வாதிகளின் தன்னகம்பாவம் (நான் என்ற அகம்பாவம்) நீங்கும்வரை தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிர்காலம் இல்லை” என்று உளவியல் மருத்துவர் சி.சிவதாஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ”தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலம்” என்ற பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் நூல் வெளியீட்டின்போதே இக்கருத்தை இவர் முன்வைத்தார். தமிழ் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று மோதியவாறு, தமிழர்களின் எதிர்கால அரசியலை கருவறுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்கள் முன்னால் நின்று தமது கருத்தை துணிச்சலுடன் எடுத்துக் கூறுவதற்கு உளவியல் மருத்துவரே மிகப்பொருத்தமானவர். தங்களுக்குள் அடிபட்டு பிளவை வளர்த்துக் கொண்டிருக்கும் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம். பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் அநுர அரசின் பிரதிநிதிகளான அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் இளங்குமரன் எம்.பி. ஆகியோர் ஒன்றாக அமர்ந்திருந்த அவையில் தமிழ் அரசியல்வாதிகளின் தன்னகம்பாவத்தைப் பற்றி நெற்றிக்கு நேராக குற்றம் சுமத்திக் கூறுவதற்கு அசாதாரண துணிச்சல் வேண்டும். காலம் நேரம் இடம் அறிந்து இதனை வெகு கச்சிதமாகச் செய்துள்ளார் உளவியல் மருத்துவர் சிவதாஸ். முப்பது வருட அறப்போராட்ட அரசியலும், முப்பது வருட ஆயுதப் போராட்ட அரசியலும் கண்ட ஈழுத்தமிழர்களை தமிழ் அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் தங்கள் சுயநலத்துக்காக பலியிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்ற ஆதங்கமும் மருத்துவரின் கருத்தில் உள்ளடங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒன்றிணைக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சிதறிப்போய் தமிழர்கள் மத்தியில் கூத்தமைப்பாக காட்சியளிக்கிறது. இதன் தலைமைக் கட்சியென தம்மை அடையாளப்படுத்தும் தமிழரசுக் கட்சி தனக்குள் பிளவுபட்டு சந்தி சிரிக்க முட்டி மோதிக் கொண்டு மாட்டு வால் போல் கீழ் நோக்கிச் செல்கிறது. இதனையே சிங்கள தலைவர் சிறிதுங்க ஜெயசூர்யவும் தமிழ் உளவியல் மருத்துவர் சி.சிவதாசும் வெவ்வேறு அரங்குகளில் அவரவருக்குப் புரியும் வகையில் எடுத்துக் கூறியுள்ளனர். ஆனாலும், இதனை எவராவது தலைக்குள் வாங்கிக் கொள்வார்களோ என்பது தெரியாது. தமிழரசுக் கட்சிக்கு இப்போது முக்கியமாகத் தெரிவது மாகாண சபைத் தேர்தல். ஆனால், அநுர அரசு அக்கறை காட்டவில்லை. தமிழர் பிரச்சனை பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டு அநுரவுக்கு தமிழரசு கட்சி எழுதிய கடிதத்துக்கு இதுவரை பதிலும் இல்லை. ஆனாலும் மாகாண சபையை முன்வைத்தே தங்களது அரசியலை நகர்த்த வேண்டிய நிலைமைக்கு தமிழரசு கட்சி இறங்கியுள்ளது. கட்சியின் தலைமை நீதிமன்றத்துக்கு அப்பால் யாரிடம் உள்ளது என்பதுகூட புரியாத நிலை காணப்படுகிறது. மக்களால் தெரிவான சிவஞானம் சிறீதரனுக்கும், மக்களால் நிராகரிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் பட்டவர்த்தனமாகத் தெரியும் போராட்டம் தொடர்கிறது. பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் பக்கம் சார்ந்து செயற்படுவதாக குற்றச்சாட்டும் தொடர்கிறது. மருத்துவர் சிவதாஸ் குறிப்பிட்ட தன்னகம்பாவமே தமிழரசு கட்சியை மட்டுமன்றி அனைத்துத் தமிழ் கட்சிகளையும் மக்களிடமிருந்து பிரிந்து செல்ல வைக்கிறது. இவர்களுக்குள் இணக்கம் ஏற்பட முடியாதவாறு சில தீயசக்திகள் கட்சிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்றுக்கு சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்த கருத்த தமிழரசுக் கட்;சியின் இன்றைய நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஒரு சிலர் மீதான தனிப்பட்ட கோபமே தமிழரசு கட்சி மீது மக்கள் கோபம் கொண்டதற்கான காரணம் என சுட்டியுள்ள இவர் அந்தக் கோபத்தின் வெளிப்பாட்டை மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெரியப்படுத்தியிருந்தனர் என்று அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் தெரிவித்துள்ளார். அந்த ஒரு சிலர் யாரென்பதை அனைவரும் புரிந்திருப்பர். அவர்களில் முக்கியமானவர் மாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர் என்பது வெளிப்படை. கட்சிக்குள் சுமந்திரன்-சிறீதரன் ஆகியோருக்கிடையே பகிரங்கமாக இடம்பெற்று வரும் போட்டியும் இழுபறியும் தெற்கிலும்கூட இன்று பேசப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்புகள் கிடைத்தாலும் இவர்களுக்கிடையிலான பிரச்சனைக்கு தீர்வு காண முடியாதென்று கட்சி உறுப்பினர்களே பேசுகின்றனர். இதற்குள் இன்னொரு பிரச்சனை இப்போது முளைத்துள்ளது. மாகாண சபைத் தேர்தலில் தமிழரசு கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை நிறுத்துவதற்கு ஒரு தரப்பினர் முயன்று வருகின்றனர். இது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. ஆனால், கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அண்மையில் இது தொடர்பாக தெரிவித்த கருத்து அவரது நிலைப்பாட்டை ஓரளவுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.மாகாண சபைத் தேர்தல் நடக்குமோ இல்லையோ, மாகாண சபை விவகாரம் தமிழரசு கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தும். ஜனாதிபதி அநுர குமர திஸ்ஸநாயக்கவை தமிழரசு கட்சியினர் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கும் மாகாண சபைத் தேர்தலுக்கே இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்களே தவிர அரசியல் தீர்வுக்கு இல்லை என்பதும் தெரிகிறது.அங்குமிங்குமாக வெளிவரும் கருத்துகளை கூட்டிக் கழித்து பார்க்கையில் சிறிதுங்க ஜெயசூரிய, மருத்துவர் சிவதாஸ் ஆகியோர் தெரிவித்ததுபோல தமிழர் அரசியலின் எதிர்காலம் இருள்பாதையாகவே தெரிகிறது. இதற்கும் மேலாக இனி வேறு யாரெல்லாம் இவர்களுக்கு புத்தி சொல்ல வேண்டும்?
ஒரு சிங்கள அரசியல் தலைவரும் ஒரு தமிழ் உளவியல் மருத்துவரும் தமிழரின் அரசியல் எதிர்காலமும்! பனங்காட்டான்
5