யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவிற்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு இடமொன்றினை ஒதுக்குவது தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பில் தவிசாளர் சபையில் தெரிவிக்கையில்., போலிகள் மலிந்து விட்ட இன்றைய தேசத்தில் போலியின்றி வாழ்ந்து தேசப்பற்றோடும் மக்கள் மனித நேயத்தோடும் தமிழ் மண்ணுக்கு மக்களுக்கும் அவர் ஆற்றிய மகத்தான தன்னலமற்று பணியாற்றியவர். அவரது அறிவியல், பண்பியல், வாழ்வியல் என்பன இந்த மண்ணின் ஒரு வரலாறு அடையாளம். அவ்வாறனவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள் என்பதனை எமது அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டியதும் இப்படியானவர்களை எமது இளைய தலைமுறையினர் தங்களது வாழ்வியலுக்கான வழிகாட்டியாக பின்பற்றவேண்டும் என்பதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபை இவ் உயரிய பணியினை மேற்கொள்ளுகின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காரணத்தினால் யாழ்.பல்கலைக்கழக சூழலில் அவருடைய சிலையினை நிறுவுவதற்கான இடத்தினை ஒதுக்க வேண்மென்பதன் அடிப்படையில் ஒரு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்யவேண்டும். அந்த வகையில் திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அல்லது யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு முன்னால் உள்ள நடைபாதைக்கு அருகில் இச் சிலையினை நிறுவுவதற்கான இடமாக தெரிவு செய்யலாம் என தெரிவித்தார். அதன் போது, திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மாமனிதர் துரைராஜா அவர்களின் சிலையினை நிறுவுவதற்கான பொருத்தமான இடமென சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது
மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை – Global Tamil News
4