மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , அது தொடர்பிலான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டிற்கு அமைய காவல்துறையினர் வழக்கினை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ள நிலையில் , குறித்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது, அதன் போது, ஊர்காவற்துறை காவல்துறையினரினால் , குறித்த வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆளணி வசதிகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை என மன்றில் தெரிவித்தமையை அடுத்து , வழக்கு விசாரணைகளை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் பாரப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து நவம்பர் 12ஆம் திகதி விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் , அன்றைய தினத்திற்கு வழக்கினை திகதியிட்டார். பின்னணி 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன. எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மண்டைதீவு புதைகுழி வழக்கு விசாரணை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் – Global Tamil News
4