ஜெய்சங்கரின் சீன பயணம் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜூலை 13 அன்று சீனாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.20 ஜூலை 2025, 04:53 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்பட உயர்மட்ட அதிகாரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், இருநாட்டு உறவுகளை மீண்டும் வலுப்படுத்த முயற்சிக்கும் காலகட்டத்தில் ஜெய்சங்கரின் சீன பயணம் அமைந்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வரும் வேளையில், ஜெய்சங்கரின் பயணம் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது பாகிஸ்தானை சீனா வெளிப்படையாக ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கியதாக தகவல்கள் வெளியாயின. இந்த சூழலில், இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு ஜெய்சங்கர் சீனா சென்றது எந்தளவுக்கு சரியானது?

சீனாவுடன் நெருக்கமாவதன் மூலம் அமெரிக்காவுடனான உறவில் சமநிலையை பராமரிக்க இந்தியா விரும்புகிறதா? தெற்காசியா மற்றும் மற்ற வளர்ந்து வரும் நாடுகளில் சீனாவின் செல்வாக்கு இந்தியாவை விட பெரிதா?

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பிபிசி ஹிந்தியின் ‘தி லென்ஸ்’ எனும் வாராந்திர நிகழ்ச்சியில் கலெக்டிவ் நியூஸ்ரூமின் இயக்குநர் (இதழியல்) இந்த விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

ராஜிய விவகாரங்கள் நிபுணர் ஷ்ருதி பண்டாலே, சர்வதேச அரசியல் பேராசிரியர் புஷ்ப் அதிகாரி மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய ஆய்வுகள் துறையின் துணை பேராசிரியர் முனைவர் ராஜிவ் ரஞ்சன் ஆகியோர் இந்த விவாதத்தில் கலந்துகொண்டனர்.

புதிய அத்தியாயத்தின் தொடக்கமா? அல்லது ஒரு அடையாள பயணமா?

கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி இருவரும் சந்தித்துக்கொண்டனர். 2020ம் ஆண்டு எழுந்த பதற்றத்துக்குப் பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டது அதுவே முதல் முறையாகும்.

அதன்பின், சீனாவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கடந்த ஜூலை மாதம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் பீஜிங் சென்றனர். அங்கு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

பட மூலாதாரம், Getty Images

தற்போது ஜெய்சங்கர் சீனா சென்ற நிலையில் இருநாட்டு உறவுகளை மீட்டமைப்பதற்கான நடவடிக்கை இது என சிலர் கூறுகின்றனர். அதேசமயம், இது வெறும் அடையாள பயணம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான நேர்மையான முயற்சியாக இந்த பயணத்தை பார்க்க வேண்டும் என ஷ்ருதி பண்டாலே நம்புகிறார்.

ஷ்ருதி பண்டாலே கூறுகையில், “அமெரிக்க அதிபர் எடுக்கும் முடிவுகளால் உலகம் முழுவதும் ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இப்போது உருவாகி வரும் உறவுகளில் நாடுகடந்த தேசியவாதம் பங்காற்றுகிறது என்பதை இந்தியா புரிந்துகொண்டுள்ளது. முன்பு, பிரச்னைகளை தீர்க்க சில நாடுகள் ஒன்றாக இணைந்துள்ளன. முன்பு, சீனாவை சமாளிப்பது ஒரு பிரச்னையாக இருந்தது. ரஷ்யாவை சமாளிப்பது பெரிய பிரச்னையாக இருந்தது. இப்போது, டிரம்பின் முடிவுகளை சமாளிப்பது பிரச்னையாக உள்ளது. எனவே, ஜெய்சங்கரின் பயணத்தை இந்த பார்வையுடனும் அணுக வேண்டும்.” என்றார்.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே சுமார் 3,000 கி.மீ நீள எல்லை உள்ளது. அப்பகுதியில் ஆறுகள், ஏரிகள் மற்றும் பனி சூழ்ந்த பகுதிகள் இருப்பதால் எல்லைக் கோடு தெளிவாக இல்லை. இதனால். இருநாட்டு படையினருக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மற்றும் சீனா மீது இறக்குமதி வரிகளை அறிவித்தார். சீனா அதை வெளிப்படையாக எதிர்த்தது, ஆனால் இந்தியா பேச்சுவார்த்தையை தேர்ந்தெடுத்தது.

இந்தியாவின் முன்னுரிமைகள் என்ன?

சர்வதேச அரசியல் பேராசிரியர் புஷ்ப் அதிகாரி இந்த கேள்விக்கு பதிலளிக்கையில், “எல்லைப் பிரச்னை தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் டொனால்ட் டிரம்ப். அமெரிக்க அதிகாரிகளின் கொள்கைகள், இந்தியா-சீனாவை ஒன்றாக இணைத்துள்ளன.” என்றார்.

“இரு நாடுகளுக்கு இடையே உள்ள நம்பிக்கை எந்தளவுக்கு செல்லும் என்பதை பார்க்க வேண்டும். அமெரிக்கா இந்தியாவை இருதரப்பு வர்த்தகத்துக்கு அழைத்து, ரஷ்யா மற்றும் சீனா உட்பட பிரிக்ஸ் (BRICS) நாடுகளிடமிருந்து விலகி இருக்குமாறு கூறுவதற்கான சாத்தியம் உள்ளது. டிரம்பின் வார்த்தைகளை இந்தியா ஏற்றுக்கொண்டால், சீனாவுடனான உறவு வெகுதூரம் செல்லாது என நினைக்கிறேன். ஜெய்சங்கரின் முயற்சிகள் சிறப்பானவை, ஆனால் அதன் முடிவு வெகுவிரைவில் ஏற்படாது.”

பட மூலாதாரம், X/DR S JAISHANKAR

படக்குறிப்பு, கல்வான் மோதலுக்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெய்சங்கர் முதல் முறையாக சீனாவுக்கு பயணம் செய்தார்.பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யாவுக்கு இந்தியா சொல்லும் சேதி என்ன?

இந்தியாவின் சர்வதேச அரசியல் குறித்த விவாதத்தையும் இந்த பயணம் எழுப்பியுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் சீனாவுக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என, எதிர்க்கட்சியான் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லி பல்கலைக் கழகத்தின் கிழக்காசிய ஆய்வுகள் துறையின் இணை பேராசிரியர் முனைவர் ராஜிவ் ரஞ்சன் கூறுகையில், “வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு சென்றிருக்காவிட்டால், இந்தியாவின் விருப்பங்கள் வேறு எங்காவது பாதிக்கப்பட்டிருக்கலாம். எஸ்.சி.ஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக வெளியுறவு அமைச்சர் குரல் எழுப்பியிருந்தார். அவர் அங்கு சென்றிருக்காவிட்டால், இத்தகைய கருத்தை எழுப்பியிருக்க முடியாது. இந்தியா அதில் பங்கேற்காமல் இருந்திருந்தால், அந்த தளத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியிருக்கக் கூடும். 2026-ம் ஆண்டில் பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. நீங்கள் (இந்தியா) மறுத்தால், சீன தலைமையும் இந்தியாவுக்கு வருவதற்கு மறுக்கலாம்.” என கூறினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் உச்சகட்டத்தில் இருந்தபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருநாட்டுக்கும் இடையே அமைதியை ஏற்பத்தியதாக சமூக ஊடகத்தில் அறிவித்தார். பாகிஸ்தான் அதற்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்தாலும், மோதல் நிறுத்தத்தில் டிரம்பின் பங்கு இருப்பதாக கூறியதை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என, டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

ஷ்ருதி பண்டாலே கூறுகையில், “இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை இருநாட்டு விவகாரம் என, அமெரிக்காவிடம் இந்தியா தொடர்ந்து கூறிவந்தது. அதேபோன்று, சீனாவுடனான உறவையும் இருநாட்டு உறவாக தொடர இந்தியா விரும்பியது. எந்தவொரு மூன்றாவது தரப்பும் இருநாட்டு உறவை பாதிக்க முடியாது என வெளியுறவு அமைச்சர் தெளிவாக கூறினார். இங்கு, மூன்றாவது தரப்பு பாகிஸ்தானுடன் தொடர்புடையது. டிரம்பின் கொள்கைகளால் இந்தியா தன்னுடைய கொள்கைகளை மாற்ற வேண்டியுள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா இடையே சமநிலையை பேணுவது இந்தியாவின் நலனுக்கானதாகும்.” என தெரிவித்தார்.

இந்தியா ஒரு பன்முக உலகம் பற்றிப் பேசுகிறது. இந்த சூழலில், ஜெய்சங்கரின் சீன பயணத்தை மற்ற நாடுகள் எப்படி பார்க்கின்றன?

பேராசிரியர் புஷ்ப் அதிகாரி கூறுகையில், “ரஷ்யா-சீனா-இந்தியா என முத்தரப்பு கூட்டணியை செயல்படுத்த வேண்டும் என விரும்புவதாக ரஷ்யாவிலிருந்து செய்தி வெளியானது. இப்போது இந்தியா இதற்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டும், ஏனெனில் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமாக செல்கிறது. தங்கள் கூட்டாளியை தேர்ந்தெடுப்பதில் இப்போது இந்தியா சவாலை எதிர்கொள்ள வேண்டும். இதுகுறித்து அமெரிக்காவிடமிருந்து நிச்சயம் அறிக்கை வரலாம். இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அறிய நாம் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.” என்றார்.

இந்தியா முன்னுள்ள சவால்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு அக்டோபரில், பிரதமர் நரேந்திர மோதியும் அதிபர் ஷி ஜின்பிங்கும் ரஷ்யாவின் கஸானில் சந்தித்தனர்.ராஜீய ரீதியில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவுகள் இயல்பானதாக இருப்பதாக தோன்றினாலும், களத்தில் இருநாடுகளுக்கிடையே அடிப்படையான மற்றும் நிரந்தரமான சவால்கள் பல உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இருநாட்டு உறவில் பதற்றம் அதிகரித்தது, அது தற்போது வரை முழுமையாக தீர்க்கப்படவில்லை.

பாகிஸ்தானுடனான சீனாவின் நெருக்கம் மற்றும் பெல்ட் அண்ட் ரோட் போன்ற திட்டங்கள் இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளை அதிகரித்துள்ளன. அதேநேரம், அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு மற்றும் குவாட் (Quad) அமைப்பில் அங்கம் வகிப்பது போன்ற காரணிகள் சீனாவை அசௌகரியமாக்குகின்றன.

இந்தியா-சீனாவின் வர்த்தகத்தில் பெரும் சமநிலையின்மை நிலவுகிறது. இந்தியா சீனாவிடமிருந்து ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்கிறது, ஆனால் வெகுசில பொருட்களையே சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

இந்த சமநிலையின்மை குறித்துப் பேசிய ஷ்ருதி பண்டாலே, “இதே விவகாரங்கள் குறித்து வெளியுறவு அமைச்சரும் குரல் எழுப்பியுள்ளார். நீங்கள் பேச்சுவார்த்தையை விரும்புகிறீர்கள், ஆனால் எங்கள் பிரச்னைகளையும் கேளுங்கள் என அவர் பேசியுள்ளார். உண்மையில் சீனாவுடன் எதுவுமே எளிது அல்ல. இந்தியா சீனாவுடன் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் உள்ளது.” என தெரிவித்தார்.

தலாய் லாமா இந்தியாவில் இருப்பது குறித்தும் திபெத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்தும் சீனா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், பிரமபுத்திரா ஆற்றின் மீதான சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா மிகவும் கவலைகொண்டுள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அப்படியான சூழலில், இருநாட்டு உறவை மேம்படுத்த இந்தியா எதில் கவனம் செலுத்த வேண்டும்?

இந்த கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் புஷ்ப் அதிகாரி, “சீனாவுடன் உறவை மேம்படுத்த பல்வேறு சர்வதேச விவகாரங்களில் இந்தியா தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இந்தியாவும் சீனாவும் இரு வெவ்வேறு நாகரிகங்கள், ஆனால் ஒன்றாக வளரும் நாடுகள். எதிர்காலத்தில் இரு நாடுகளும் தங்கள் உறவுகளை வலுப்படுத்தினால், இரு நாடுகளும் இணைந்து அமெரிக்காவின் அழுத்தத்தைக் குறைக்கலாம். பிராந்திய அளவில் சிறப்பான ஒத்துழைப்பு இருந்தால்தான் எந்த தவறான புரிதலும் ஏற்படாது என்பதுதான் மிக முக்கியமான விஷயம். இது நடந்தால், இரு நாடுகளும் நல்ல நண்பர்களாக முடியும்.” என கூறினார்.

பேராசிரியர் ராஜிவ் ரஞ்சன் கூறுகையில், இந்தியாவும் சீனாவும் முதலில் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தி உறவை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

அவர் கூறுகையில், “முதலாவதாக, ஒரு உறவில் நிலைத்தன்மை அவசியம். இரண்டாவதாக, நீண்ட காலமாக நிலவும் எல்லைப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். மூன்றாவதாக, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானையும் கவனிக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களுக்கும் இந்தியாவும் சீனாவும் கவனம் செலுத்தினால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சிறந்த திசையில் நகரும்.” என்றார்.

வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சீனா சென்றது, இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதற்கான அறிகுறியாக உள்ளது. எனினும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை இரண்டும் நிரந்தர தீர்வு ஏற்படுவதில் பெரிய சவால்களாக உள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு