Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அரியலூர் அருகே கோவிலில் பட்டியல் சாதியினருக்கு முட்டுக்கட்டை போடும் ‘ஏழு வகையறா’ யார்?
படக்குறிப்பு, அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவில் அமைந்துள்ளது புதுக்குடி அய்யனார் கோவில்.எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்57 நிமிடங்களுக்கு முன்னர்
‘சாதி, சமூகம் ஆகியவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால், கடவுள் எப்போதும் அனைவருக்குமானவராக பார்க்கப்படுகிறார். பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்பதால் பிரார்த்தனை செய்வதைத் தடுப்பது, அவர்களின் கண்ணியத்தை அவமதிப்பதாகும்’
– ஜூலை 17-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அரியலூர், புதுக்குடி அய்யனார் கோவிலில் தங்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகக் கூறி பட்டியல் சாதியினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
‘எங்கள் குல தெய்வம் என்பதால் பட்டியல் சாதியினர் சடங்கு நடத்துவதை அனுமதிக்க முடியாது’ என மற்றொரு சாதியினர் கூறினர். அய்யனார் கோவிலில் பட்டியல் பிரிவு மக்கள் வழிபாடு நடத்துவதில் என்ன பிரச்னை?
வழக்கின் பின்னணி என்ன?
படக்குறிப்பு, கடந்த ஜூலை 16 ஆம் தேதி அய்யனார் கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது.அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவில் அமைந்துள்ளது புதுக்குடி அய்யனார் கோவில். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் நிறைந்துள்ள இந்தப் பகுதியில் பட்டியல் சாதி மக்களும் பிற சாதி மக்களும் வசித்து வருகின்றனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
கடந்த ஜூலை 16 ஆம் தேதி அய்யனார் கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது. வரும் 31ஆம் தேதி வரை விழா நடைபெற உள்ள நிலையில், தாங்களும் வழிபாடு நடத்துவதற்கு வழிவகுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டியல் பிரிவை சேர்ந்த வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார்.
“அரியலூர், கடலூர், திருச்சி, சென்னை எனப் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் பட்டியல் சமூக மக்களின் குலதெய்வமாக புதுக்குடி அய்யனார் இருக்கிறார். தொழில் காரணமாக வேறு மாவட்டங்களில் வசித்தாலும் விழா காலங்களில் அய்யனாரை வழிபட வருவோம்” எனக் கூறுகிறார் வெங்கடேசன்.
விவசாய வேலை பார்த்து வரும் வெங்கடேசன், புதுக்குடி அய்யனார் கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள இளையபெருமாநல்லூரில் வசித்து வருகிறார்.
‘ஏழு வகையறா’ யார்?
படக்குறிப்பு, ‘கோவிலுக்கு நாங்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய கருப்பசாமி சிலை, குதிரை சிலைகள் ஆகியவற்றை உடைத்துவிட்டனர்’ என்கிறார் வெங்கடேசன்.பிபிசி தமிழிடம் பேசிய வெங்கடேசன், “கோவிலில் மொட்டையடிப்பது, காது குத்துவது ஆகியவற்றுடன் ஒரு மண்டகப்படி பூஜையும் நடத்தி வந்தோம். ஆனால், 2023 ஆம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு பட்டியல் சாதியினருக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன” எனக் கூறுகிறார்.
“கோவிலில் ‘ஏழு வகையறா’ என்ற பெயரில் கமிட்டி ஒன்றை உருவாக்கி, ஏழு பிரிவை சேர்ந்தவர்கள் மட்டுமே சடங்குகளை நடத்த முடியும் என்ற சூழலை உருவாக்கியுள்ளனர். கோவிலுக்கு நாங்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய கருப்பசாமி சிலை, குதிரை சிலைகள் ஆகியவற்றையும் உடைத்துவிட்டனர்” என்கிறார், வெங்கடேசன்.
ஆனால், 2019 ஆம் ஆண்டு முதலே கோவிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பட்டியல் பிரிவு மக்களை அதே ஊரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சாமிக்கண்ணு உள்பட சிலர் தடுத்ததாகக் கூறுகிறார், வழக்கறிஞர் தீபிகா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பட்டியல் பிரிவு மக்கள் வழிபாடு நடத்த வரக் கூடாது என்பதற்காக இரும்பு வேலி அமைத்துள்ளனர். இதுதொடர்பான முதல் புகார் ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் தரப்பட்டுள்ளது” என்கிறார்.
சடங்குகளை அனுமதிக்க மறுப்பு
படக்குறிப்பு, பட்டியல் பிரிவு மக்கள் வழிபாடு நடத்த வரக் கூடாது என்பதற்காக இரும்பு வேலி அமைத்துள்ளனர் என்கிறார் வழக்கறிஞர் தீபிகா.”திருச்சியில் இருந்து வழிபாடு நடத்தச் சென்ற பட்டியல் பிரிவு பெண்ணை, ‘உள்ளே அனுமதிக்க முடியாது’ எனக் கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். ஆண்டிமடத்தைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் சென்றபோதும் அனுமதி மறுக்கப்பட்டது” எனக் கூறுகிறார், தீபிகா.
இதுதொடர்பாக 2023 ஆம் ஆண்டில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பட்டியல் பிரிவு மக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.
“இரு பிரிவினரையும் அழைத்து அதிகாரிகள் அமைதிக் கூட்டத்தை நடத்தினர். அப்போது, ‘சாமி கும்பிடலாம். ஆனால், மொட்டை அடிப்பதோ கிடா வெட்டுவதோ கூடாது. அதற்கான பாத்தியம் பட்டியல் சாதிக்குக் கிடையாது’ என எதிர்த் தரப்பில் கூறினர்” என்கிறார் வெங்கடேசன்.
தற்போது கோவில் திருவிழா தொடங்கிவிட்டதால் பட்டியல் சமூக மக்களால் நேர்த்திக்கடன் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
‘அறநிலையத் துறை கோவில் அல்ல’
ஜூன் 17-ஆம் தேதி இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், “குறிப்பிட்ட கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை” எனக் கூறினார்.
இதற்குப் பதில் அளித்த வெங்கடேசனின் வழக்கறிஞர் தீபிகா, “கோவில் அறநிலையத் துறைக்குச் சொந்தமானது அல்ல. ஆனால், கோவில் அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 40 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம்” என வாதிட்டார்.
தீர்ப்பில் நீதிபதி கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, “பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் பிரார்த்தனை செய்வதைத் தடுப்பது என்பது அவர்களின் கண்ணியத்தை அவமதிப்பதாகும்” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கோவிலுக்கு பொதுமக்கள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படும் போது அது பொது கோவில் என்ற அடையாளத்துக்குள் வருகிறது. அந்தவகையில், சாதி அல்லது சமூகத்தைப் பொருட்படுத்தாமல் தங்களின் பிரார்த்தனைகளைச் செய்வதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும்” எனத் தீர்ப்பில் குறிப்பிட்டார்.
“சாதி மற்றும் சமூகம் ஆகியவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால், கடவுள் எப்போதும் அனைவருக்குமானவராக பார்க்கப்படுகிறார். பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்பதால் பிரார்த்தனை செய்வதைத் தடுப்பது என்பது அவர்களின் கண்ணியத்தை அவமதிப்பதாகும்” என, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
“சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” எனத் தீர்ப்பில் தெரிவித்துள்ள நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், “தமிழ்நாடு ஆலய நுழைவுச் சட்டம் 1947 (TamilNadu Temple Entry Authorisation Act), பிரிவு 3ன்படி, எந்தவொரு இந்துவும் எந்த சாதி அல்லது பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்து கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவததற்கு உரிமை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
“குற்றமாக பார்க்கப்படும்” – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
கோவில்களுக்குள் சாதி அடிப்படையில் யாரும் நுழைவதைத் தடுக்கக் கூடாது என விரும்பிய தலைவர்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகே இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
“கோவில்களில் நுழைவதற்கு சில பிரிவினர் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக கொள்கை முடிவாக இந்தச் சட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியது” எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார்.
“அவ்வாறு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டால் அது நடவடிக்கை எடுக்கக் கூடிய குற்றமாக பார்க்கப்படும். இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்” எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அய்யனார் கோவில் திருவிழாவில் அனைத்து பிரிவினரும் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
“அதையும் மீறி யாராவது தடுக்க முற்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கையை எடுக்கலாம். அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைத் தடுப்பதையும் காவல்துறை உறுதி செய்ய வேண்டும்” எனவும் தீர்ப்பில் ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
‘ஒரு சாதிக்கான கடவுளாக மாற்ற முயற்சி’
இதனை மேற்கோள் காட்டிப் பேசிய வழக்கறிஞர் தீபிகா, “இந்துவாக பிறந்த யாரும் கோவிலுக்குச் செல்லலாம், சட்டத்துக்குப் புறம்பில்லாத சடங்குகளையும் மேற்கொள்ளலாம் என ஆலய நுழைவுச் சட்டம் கூறுகிறது” என்கிறார்.
“அய்யனார் சாமிக்கு வேலி அமைப்பது நடைமுறையில் இல்லை” எனக் கூறும் தீபிகா, “முன்னர் காட்டுப்பகுதியாக இருந்தபோது அனைவரும் அய்யனாரை வழிபட்டு வந்தனர். தற்போது ஒரு சாதியினருக்கான கடவுளாக மாற்ற முயற்சிக்கின்றனர்” எனக் கூறினார்.
“அவர்களுக்கு மட்டுமே கோவில் சொந்தமானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆடி மாதம் திருவிழாவுக்கு வந்து கிடா வெட்டி சமைத்து சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவது வழக்கமான ஒன்று. இதற்கு ஆதாரமாக ஏராளமான புகைப்படங்கள் உள்ளன” என்கிறார், வழக்கு தொடர்ந்த வெங்கடேசன்.
‘சாமி கும்பிடலாம், ஆனால்?’
படக்குறிப்பு, இது எங்களின் குலதெய்வக் கோவில். ஏழு வகையறாக்களுக்கு மட்டும் உரிமையுள்ள கோவில் என்கிறார் சாமிக்கண்ணு.ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார் கோவில் நிர்வாகியும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான சாமிக்கண்ணு.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இது எங்களின் குலதெய்வக் கோவில். ஏழு வகையறாக்களுக்கு மட்டும் உரிமையுள்ள கோவில். நாங்கள் தான் காலம்காலமாக விழாக்களை நடத்தி வருகிறோம்” என்கிறார்.
பட்டியல் சாதியினர் சில வருடங்களாக மட்டுமே கோவிலுக்கு வந்து செல்வதாகக் கூறும் சாமிக்கண்ணு, “அதையே தங்களுக்கான உரிமையாக முன்வைக்கின்றனர்.” என்றார்.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நபர் தங்கள் ஊரைச் சேர்ந்தவர் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
“கோவில் சேதமடைந்திருந்த காலத்தில் வேலி இல்லாததால் யார் வேண்டுமானாலும் சாமி கும்பிட்டுவிட்டுச் சென்றிருக்கலாம்” எனக் கூறிய சாமிக்கண்ணு, அதைப் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு, தங்களின் குலதெய்வக் கோவில் என சிலர் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பட்டியல் சாதியினர் வைத்த சிலைகளை உடைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, “அப்படியெல்லாம் நடக்கவில்லை. கோவிலை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். அவர்களுக்கு (பட்டியல் சாதி) குலதெய்வமாக அய்யனார் இல்லை” என்கிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தங்களின் முன்னோர்கள் பின்பற்றிய நடைமுறைகளையே தாங்களும் கடைபிடிப்பதாகக் கூறும் சாமிக்கண்ணு, ” 64 ஊர்களில் உள்ள குடும்பங்களுக்கு குலதெய்வமாக அய்யனார் இருக்கிறார். கோவில் திருவிழா முடிந்த பிறகு நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பேசி முடிவெடுப்போம்” எனத் தெரிவித்தார்.
ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவி சக்ரவர்த்தியிடம் பிபிசி தமிழ் பேசியது. “ஜூலை 14 ஆம் தேதி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஜூலை 17 ஆம் தேதி தீர்ப்பு வெளிவந்துள்ளது. எங்களுக்கு தீர்ப்பின் நகல் இன்னும் வரவில்லை. அது கைகளுக்குக் கிடைத்த பிறகு நடவடிக்கை எடுப்போம்” என்று மட்டும் பதில் அளித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு