Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே ரணில் – ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளைப் பதவியில் இருந்து நீக்கியது. ஆனால், எமக்கு எந்தத் தனிப்பட்ட தேவையும் கிடையாது எனவே, நாம் விசாரணைகளுக்காகத் திறமையான அதிகாரிகளை ஈடுபடுத்துவோம். கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்போம். அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கூறுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு கர்தினால் உட்பட கத்தோலிக்க திருச்சபை தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றது. எம்மிடம் மாத்திரமல்ல இதற்கு முன்னர் பதவியில் இருந்த அரசிடமும் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், என்ன நடந்தது? குற்றத்தை மறைப்பதற்குச் செய்யக்கூடிய ஒரு வழிமுறையே அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்குவதாகும். இதற்கமைய கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்ததன் பின்னர் சி.ஐ.டியில் இருந்த 600 இற்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கினார். அதேபோன்று அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்தனர். விளக்கமறியில் வைத்தனர். சாட்சியங்களைத் திரட்டும் திறமையான அதிகாரிகளுக்குப் பதிலாகத் திறமையற்ற அதிகாரிகளைப் பதவிகளுக்கு அமர்த்தினார்கள்.
ரணில் – ராஜபக்ஷ தரப்பு ஊழல் மோசடியில் ஈடுபட்டது ஒருபுறம் இருக்கப் பொலிஸ் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகிவற்றைக் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காகவே பயன்படுத்தினார்கள்.
எனவே, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளத் திறமையான அதிகாரிகளை நியமிக்குமாறு கர்தினால் மாத்திரம் அல்ல முழு கத்தோலிக்க சமூகமும் எம்மிடம் கோரிக்கை விடுத்தது.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது சி.ஐ.டியின் பணிப்பாளர் ஷானி அபேசேகர முக்கிய சாட்சியாளராகப் பெயரிடப்பட்டுள்ளார். இதற்கு அவரது மனைவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் என மேலும் தெரிவித்தார்.