தாவரங்களின் ரகசிய ஒலிக்கு பதில் தரும் விலங்குகள் – ஆய்வில் புதிய தகவல்

பட மூலாதாரம், TAU

படக்குறிப்பு, தங்கள் ஆரோக்கியத்தை காட்டும் விதமாக செடிகள் எழுப்பிய ஒலிகள் அடிப்படையில் அந்துப்பூச்சிகள் அவற்றின் மீது முட்டையிட்டனஎழுதியவர், பல்லவ் கோஷ்பதவி, அறிவியல் செய்தியாளர்54 நிமிடங்களுக்கு முன்னர்

தாவரங்கள் எழுப்பும் ஒலிகளுக்கு விலங்குகள் எதிர்வினையாற்றுகின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது. அவற்றுக்கிடையில் கண்ணுக்கு புலப்படாத சூழல் மண்டலம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

தக்காளி செடிகள் தாங்கள் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கலாம் என்பதை உணர்த்தும் மனஅழுத்தத்துடன் தொடர்புடைய ஒலிகளை எழுப்பினால், பெண் அந்துப்பூச்சிகள் அந்த செடிகள் மீது முட்டையிடுவதைத் தவிர்த்தன என்பதற்கான ஆதாரத்தை முதல்முறையாக டெல் அவிவ் பல்கலைக் கழக ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது.

செடிகள் அழுத்தத்தில் இருந்தாலோ, ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தாலோ “கூச்சலிடுகின்றன” என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதலில் காட்டியது இந்தக் குழுதான்.

இந்த ஒலிகள் மனிதன் கேட்கும் வரம்புக்கு அப்பால் இருக்கின்றன, ஆனால் பல பூச்சிகள், வெளவால்கள் மற்றும் சில பாலூட்டிகளால் உணரமுடியும்.

“செடிகள் வெளிப்படுத்தும் ஒலிகளுக்கு ஒரு விலங்கு எதிர்வினையாற்றுவதை காட்டும் முதல் செயல்விளக்கம் இதுதான்,” என்கிறார் டெல் அவிவ் பல்கலைக்கழக பேராசிரியர் யோஸி யோவெல்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“இது இப்போதைக்கு ஊகம்தான். ஆனால், அனைத்து விதமான விலங்குகளும் செடிகளிடமிருந்து கேட்கும் ஒலிகளின் அடிப்படையில் மகரந்த சேர்க்கை செய்யவா, அதற்குள் ஒளிந்துகொள்ளவா அல்லது செடியை முழுமையாக உண்பதா போன்ற முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கக் கூடும்,

அந்துப்பூச்சிகள் செடிகளின் தோற்றத்திற்கு எதிர்வினையாற்றாமல் அவற்றின் ஒலிக்கு எதிர்வினையாற்றுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஆய்வாளர்கள் கவனமாக பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இப்போது அவர்கள் பல்வேறு செடிகள் ஏற்படுத்தும் ஒலிகளையும் பிற இனங்கள் அந்த ஒலிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கின்றனவா என்பதையும் ஆய்வு செய்வார்கள்.

“பல சிக்கலான செயல் – எதிர்செயல்கள் இருக்கக்கூடும் என நீங்கள் கருதக்கூடும், அதுவே முதல் படி.” என்கிறார் பேராசிரியர் யோவெல்.

டெல் அவிவ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மற்றொரு பேராசிரியர் லிலாக் ஹாடனியின் கூற்றுப்படி, வறட்சியான காலகட்டத்தில் தங்களது நீரை சேமித்து வைப்பது போன்ற தகவல்களை தாவரங்கள் ஒன்றுக்கொன்று ஒலி மூலம் பரிமாறிக் கொள்ள முடியுமா, அதற்கு பதிலளிக்க முடியுமா என்பதும் ஆய்வின் மற்றொரு அம்சமாக இருக்கும்.

“இது ஒரு உற்சாகமூட்டும் கேள்வி,” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

“ஒரு தாவரம் மன அழுத்தத்தில் இருக்கும் போது, அதைப் பற்றி மிகவும் அக்கறை கொள்ளும் உயிரினம் மற்ற தாவரங்கள்தான், அவை பல வழிகளில் பதிலளிக்கலாம்.”

செடிகள் புலன் உணர்வு கொண்டவை அல்ல என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்திச் சொல்கிறார்கள். சுற்றுச்சூழல் மாறுபாட்டால் தாவரங்களில் ஏற்படும் இயற்பியல் விளைவுகளே ஒலியை உண்டாக்குகின்றன. இந்த ஒலியை கேட்கக்கூடிய ஆற்றல் படைத்த விலங்குகளுக்கும், பிற தாவரங்களுக்கும் இந்த சத்தங்கள் பயனுள்ளவையாக இருக்கலாம் என்பதைத்தான் தற்போதைய கண்டுபிடிப்பு காட்டுகிறது.

பேராசிரியர் ஹடானியின் கூற்றுப்படி அதுதான் உண்மையென்றால், செடிகளும் விலங்குகளும் தங்களது பரஸ்பர பயன்களுக்காக ஒருங்கிணைந்த பரிணாம வளர்ச்சியின் மூலம் இந்த ஒலிகளை உருவாக்கவும் கவனிக்கவும் தேவையான ஆற்றலை பெற்றுள்ளன.

“தங்களுக்கு பயனளிக்கக் கூடும் என்றால் அதிக கூடுதல் ஒலிகள் அல்லது உரத்த ஒலிகளை ஏற்படுத்தக்கூடிய பரிணாம வளர்ச்சியை தாவரங்கள் அடையக் கூடும், இந்த பெரும் தகவல்களை உள்வாங்கிக்கொள்ள வசதியாக விலங்குகளின் கேட்கும் திறனும் வளர்ச்சியடையலாம்.

“இது பரந்த, ஆய்வு செய்யப்படாத துறை- ஒரு உலகமே கண்டறியப்பட காத்திருக்கிறது.”

இந்த பரிசோதனையில், பொதுவாக குஞ்சுகள் பொரித்தவுடன் உண்ண வசதியாக தக்காளி செடிகளில் முட்டையிடும் பெண் அந்துப்பூச்சிகள் மீது ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தினர்.

அந்துப்பூச்சிகள், குஞ்சுகளுக்கு சரியாக ஊட்டமளிக்கக் கூடிய ஆரோக்கியமான தாவரத்தைத் தேடிப் பிடித்து முட்டியிடும் என்பது ஆய்வின் அனுமானம். எனவே, நீரிழப்பு மற்றும் அழுத்தத்தில் இருப்பதாக தாவரம் சமிக்ஞை செய்யும் போது, அந்துப்பூச்சிகள் இந்த எச்சரிக்கையை கவனித்து, அதில் முட்டையிடுவதைத் தவிர்க்கிறதா என்பதே கேள்வியாக இருந்தது.

செடிகள் உருவாக்கிய ஒலிகள் காரணமாக அந்துப்பூச்சிகள் முட்டையிடவில்லை என்பதுதான் பதிலாக கிடைத்தது.

இந்த ஆய்வு eLife இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு