அக்பர், ஔரங்கசீப், பாபர் பற்றி 8-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் என்சிஇஆர்டி செய்த மாற்றங்களால் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புத்தகங்கள் தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, என்சிஇஆர்டி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது (ஔரங்கசீப்பின் ஓவியம்)எழுதியவர், ரஜ்னீஷ் குமார் பதவி, பிபிசி நிருபர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) 8ஆம் வகுப்பு சமூக அறிவியலுக்கான புதிய புத்தகத்தில், பாபர் ஒரு காட்டுமிராண்டித்தனமான, வன்முறையான வெற்றியாளராகவும், மக்களை கொன்று குவிப்பவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அக்பரின் ஆட்சிக்காலத்தை கொடுங்கோல் மற்றும் சகிப்புத்தன்மையின் கலவையாக இந்த புத்தகம் காட்டுகிறது. இவற்றைத் தவிர, ஔரங்கசீப் ஆலயங்களையும் குருத்வாராக்களையும் அழித்தவராக விவரிக்கப்பட்டுள்ளார்.

சரித்திரத்தின் இருண்ட காலகட்டங்களில் சிலவற்றை விளக்குவது முக்கியம் என்று என்சிஇஆர்டி கூறுகிறது. மேலும், கடந்த கால நிகழ்வுகளுக்கு யாரும் பொறுப்பேற்க முடியாது என்று புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

8ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தின் பகுதி-1 ‘Exploring Society: Indian and Beyond’ இந்த வாரம் வெளியிடப்பட்டது. டெல்லி சுல்தானகம் மற்றும் முகலாயர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் புதிய என்சிஇஆர்டி புத்தகங்களில் இது முதல் புத்தகம்.

என்சிஇஆர்டி -யின் புதிய புத்தகம் 13ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாற்றை உள்ளடக்கியது. இந்தப் புத்தகத்தில், சுல்தான்களின் காலத்தை, இந்து ஆலயங்களைக் கொள்ளையடித்து அழித்த காலமாகக் காட்டப்பட்டுள்ளது. முந்தைய புத்தகத்தில் சுல்தான்களின் காலம் இப்படி சித்தரிக்கப்படவில்லை.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், @ncert

படக்குறிப்பு, சர்ச்சையை ஏற்படுத்தி வரும் என்சிஇஆர்டி-யின் 8 ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் புத்தகத்தின் அட்டைப் பக்கம்தி இந்து ஆங்கில செய்தித்தாளின் கூற்றுப்படி , தனது 25 வயதில் அக்பர் சித்தூர் கோட்டையைக் கைப்பற்றியபோது அவர் 30 ஆயிரம் குடிமக்களைப் படுகொலை செய்யவும், குழந்தைகள் மற்றும் பெண்களை அடிமைப்படுத்தவும் உத்தரவிட்டார் என்றும் என்சிஇஆர்டி-யின் புதிய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில், அக்பர், “நாம் காஃபிர்களின் பல கோட்டைகளையும் நகரங்களையும் கைப்பற்றி அங்கு இஸ்லாத்தை நிலைநாட்டியுள்ளோம். ரத்த தாகம் கொண்ட வாள்களின் உதவியுடன், அவர்களின் மனதில் இருந்து காஃபிர்களின் தடயங்களை அழித்துவிட்டோம். அங்குள்ள ஆலயங்களையும் அழித்துவிட்டோம்” என்று கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

தனது பிற்கால ஆட்சியில் தான், அமைதி மற்றும் நல்லெண்ணத்தைப் பற்றி அக்பர் பேசத் தொடங்கினார் என்றும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து நாளிதழின் படி, பள்ளிகள் மற்றும் ஆலயங்களை இடிக்க ஔரங்கசீப் உத்தரவிட்டதாகவும் கூறும் இந்த புத்தகம், பனாரஸ், மதுரா மற்றும் சோம்நாத் உள்ளிட்ட சமண கோயில்களும் சீக்கிய குருத்வாராக்களும் அழிக்கப்பட்டன என்றும் பதிவு செய்துள்ளது. முகலாயர்கள் பார்சிகள் மற்றும் சூஃபிகள் மீது அட்டூழியங்களை கட்டவிழ்த்துவிட்டதாகவும் அந்த புத்தகம் கூறுகிறது.

“வரலாற்றைத் திரிப்பதா?”

என்சிஇஆர்டி-யின் இந்த மாற்றம் குறித்து கேள்விகளை எழுப்பி வரும் பலரும், அரசாங்கம் வேண்டுமென்றே வரலாற்றை தவறான வழியில் முன்வைக்கிறது என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிறுவனர் உறுப்பினரான பேராசிரியர் முகமது சுலைமான், செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்ஸிடம் கூறுகையில் , “தற்போது ஆட்சியில் இருக்கும் அமைப்புகளும் சித்தாந்தங்களும் வரலாற்றைத் திரித்து சொல்கின்றன. வரலாற்றை யதார்த்தத்தின் சூழலில் எடுத்துக் கொள்ளும்போது மட்டுமே எந்தவொரு வளர்ந்த சமூகமும் முன்னேற முடியும். ஆனால் நமது அரசாங்கம் வரலாற்றைத் திரித்துக் கூறிவருகிறது. இது நாட்டிற்கு நன்மை பயக்காது. அவர்கள், கண்மூடித்தனமாக நம்பும் பக்தர்களை தவறாக வழிநடத்த முடியும், ஆனால் உலக வரலாறு படிக்கப்படும் போது, மக்கள் உண்மையையே விரும்புவார்கள்.”

இந்த விவகாரம் தொடர்பாக என்சிஇஆர்டி விரிவாக பதிலளித்துள்ளது. “எட்டாம் வகுப்புக்கான ‘Exploring Society: Indian and Beyond’என்ற புதிய சமூக அறிவியல் புத்தகம் தற்போது கிடைக்கிறது. இந்தப் புத்தகம் தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023 இன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று என்சிஇஆர்டி கூறுகிறது.

“இந்தப் புத்தகம் 13ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்திலான இந்திய சரித்திரத்தை உள்ளடக்கியது. இந்தப் புத்தகத்தில், மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒரு விஷயத்தை கூறுவதற்குப் பதிலாக விமர்சன சிந்தனையை முன்வைத்துள்ளோம். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் சமநிலையான விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வரலாற்றின் இருண்ட காலம் குறித்த ஒரு கருத்து என்ற சிறப்பு அத்தியாயத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். இந்தப் புத்தகத்தின் மூலம், இளம் அறிஞர்கள் கடந்த காலத்தைப் பற்றிய புரிதலையும் நவீன இந்தியாவின் உருவாக்கத்தையும் வளர்த்துக் கொள்வார்கள்” என்று என்சிஇஆர்டி விளக்கம் அளிக்கிறது.

“பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து உண்மைகளும் நம்பகமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை. நமது தலைமுறையினரை எந்தவிதமான தப்பெண்ணங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்தும் காப்பாற்ற, பக்கம் எண் இருபதில் வரலாற்றின் இருண்ட காலம் என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது” என்று என்சிஇஆர்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இந்திய வரலாற்றை ஒரு சாதாரணமான விஷயமாக மாற்ற முடியாது. எல்லாம் நன்றாக இருந்தது என்றும் காட்ட முடியாது. பல நல்ல விஷயங்கள் இருந்தன, அதேபோல பல கெட்ட விஷயங்களும் இருந்தன, மக்கள் ஒடுக்கப்பட்டனர். எனவே வரலாற்றின் அந்த அத்தியாயத்தையும் நாங்கள் சேர்த்துள்ளோம்,” என்று என்சிஇஆர்டி-யின் சமூக அறிவியல் பாடத்திட்டத்திற்கான பகுதி குழுத் தலைவர் மைக்கேல் டானினோ தி இந்துவிடம் தெரிவித்தார்.

”கடந்த காலத்தில் நடந்த எதற்கும், இன்று யாரும் பொறுப்பேற்க முடியாது என்ற பொறுப்புத்துறப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம். முகலாய ஆட்சியாளர்களின் சிக்கலான ஆளுமைக்குள் செல்லாவிட்டால் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாது. தனது இளமைப் பருவத்தில் தான் கொடூரமானவராக இருந்ததாக அக்பரே ஒப்புக்கொண்டுள்ளார். நாங்கள் அக்பரையோ அல்லது ஔரங்கசீப்பையோ இழிவுபடுத்தவில்லை, மாறாக இந்த ஆட்சியாளர்கள், தங்களுக்கான வரம்புகளை வைத்திருந்தனர், அவர்கள் அட்டூழியங்களைச் செய்தார்கள் என்பதை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாஜக அரசாங்கத்தின் கீழ், டெல்லியில் முகலாய ஆட்சியாளர்களின் பெயரிடப்பட்ட சாலைகளின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளனசரித்திரத்தை எப்படிப் பார்ப்பது?

வரலாற்றாசிரியர் சையத் இர்ஃபான் ஹபீப் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புத்தகத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறார் என்று பிபிசி கேட்டது.

“வரலாறு என்பது, உண்மைகளின் அடிப்படையில் எழுதப்படுவது, நமது கற்பனைகளின் அடிப்படையில் வரலாற்றை எழுத முயற்சித்தால் அது வரலாறாக இருக்காது. முன்பு கற்பிக்கப்பட்டவற்றுடன் நீங்கள் உடன்படாமல் இருக்கலாம், ஆனால் அது உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. உண்மைகளின் விளக்கத்துடன் நீங்கள் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக நம்பிக்கைகளின் அடிப்படையில் வரலாற்றை எழுதினால், அது வரலாறு அல்ல” என சையத் இர்ஃபான் ஹபீப் கூறுகிறார்.

இந்திய அரசியலில், வரலாற்றின் இடைக்காலம் குறித்த சர்ச்சைகள் எழுவது இது முதல்முறையோ அல்லது புதிதோ அல்ல. இதற்கு முன்பும் மகாராணா பிரதாப் மற்றும் அக்பர் குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன.

2019ஆம் ஆண்டில், பாஜக எம்எல்ஏ ஒருவரின் முன்மொழிவை ராஜஸ்தான் பல்கலைக் கழகம் ஏற்றுக்கொண்டது, அதில் மகாராணா பிரதாப் ஹல்திகாட்டி போரில் அக்பரிடம் தோற்கவில்லை என்று பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் எழுதப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

“ஹல்திகாட்டி போரில் ராஜா மகாராணா பிரதாப் வென்றதாகவும், அக்பர் தோற்றதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதற்கான எந்தவித உண்மை ஆதாரங்களும் இல்லை. உண்மை என்னவென்றால், மகாராணா பிரதாப்பும் மான் சிங்கும் ஹல்திகாட்டியில் சண்டையிட்டனர். அது ராஜபுத்திரர்களுக்கு இடையேயான போர். ஒருவர் அக்பருக்காகவும், மற்றவர் அக்பருக்கு எதிராகவும் சண்டையிட்டார்கள். இது மத அடிப்படையிலான போர் அல்ல, மகாராணா பிரதாப்பின் படைத் தளபதி ஹக்கீம் கான் சூரி ஒரு இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நாம் இடைக்கால இந்தியாவை மதத்தின் கண்ணாடி கொண்டு பார்க்கிறோம். நவீன காலத்தில் நீங்கள் மதத்தைப் பயன்படுத்துகிறீர்கள்.”

பட மூலாதாரம், San Diego Museum of Art

இடைக்கால வரலாற்றை சரித்திரத்தின் இருண்ட அத்தியாயமாகக் கருத வேண்டுமா?

“நீங்கள் வரலாற்றின் இருண்ட அத்தியாயம் என்று அழைக்கும் காலத்தில் ராமசரித மனாஸ் எழுதப்பட்டது. துளசி தாஸ், கபீர், அப்துல் ரஹீம் கான்-இ-கானா மற்றும் மாலிக் முகமது ஜெயசி போன்ற ஆளுமைகள் இந்தக் காலகட்டத்தில் தங்கள் சிறந்த படைப்புகளை எழுதினர். இது வரலாற்றின் இருண்ட அத்தியாயமா?” என்று சையத் இர்ஃபான் ஹபீப் கேள்வி எழுப்புகிறார்.

“பாபரின் வரலாறு வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே. அவர் இடைக்கால ஆட்சியாளர் தான்.’அவர் இடைக்கால ஆட்சியாளர். அந்த நேரத்தில் ஆட்சி வாளால் நடத்தப்பட்டது, அரசியலமைப்பால் அல்ல. மதம் அதில் எங்குமே வரவில்லை. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் இதேதான் நடந்தது. அந்த காலகட்டத்தில், முடிவுகள் வாளால் எடுக்கப்பட்டன. 400 ஆண்டுகள் பழமையான ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் எதையும் சொல்லலாம்” என்று சையத் இர்ஃபான் ஹபீப் கூறுகிறார்.

”நமது சந்ததியினருக்கு தொடர்பற்ற வரலாற்றைக் கொண்ட புத்தகங்களை வழங்குகிறீர்கள். அதில் பல வகையான இடைவெளிகள் இருக்கும். கடந்த காலத்திற்கு யாரும் பொறுப்பேற்க முடியாது என்று அவர்கள் இன்று பொறுப்புத்துறப்பு வெளியிடலாம், ஆனால் களத்தில் இதுதான் நடக்கிறது. உண்மையில், இந்த அரசாங்கம் குடிமக்களை அல்ல, தன்னை பின்தொடர்பவர்களைத் தயார்படுத்த விரும்புகிறது.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா 1200 ஆண்டுகளாக அடிமையாக இருந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்இடைக்காலத்திலும் இந்தியா அடிமையாக இருந்ததா?

இந்தியாவின் வலதுசாரிகள் 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியை அடிமைத்தனத்தின் காலமாக மட்டும் கருதவில்லை, மாறாக முழு இடைக்காலத்திலும் இந்தியா அடிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவே பார்க்கிறார்கள்.

2014 ஜூன் 11ம் நாளன்று பிரதமரான பிறகு நரேந்திர மோதி முதல் முறையாக மக்களவையில் பேசும்போது அவர் தனது முதல் உரையிலேயே, “1200 ஆண்டுகால அடிமைத்தனத்தின் மனநிலை நம்மைத் தொந்தரவு செய்கிறது. பல சமயங்களில், நம்மை விட சற்று உயரமான ஒருவரை நாம் சந்தித்தால், தலையை நிமிர்ந்து பேச நமக்கு வலிமை இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரதமரின் இந்தக் கூற்று ஒரே நேரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்தியா 1200 ஆண்டுகளாக அடிமையாக இருந்ததா? பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே இந்தியா அடிமையாக இருந்ததா?

பிரதமர் மோடி 1200 ஆண்டுகால அடிமைத்தனத்தைப் பற்றிப் பேசும்போது, எட்டாம் நூற்றாண்டில் (712) சிந்துவின் இந்து மன்னர் மீர் காசிம் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து 1947 வரை இந்தியா அடிமைத்தளையில் சிக்கியிருந்ததாக விவரித்தார்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி தோராயமாக 1757 முதல் 1947 வரை, அதாவது 190 ஆண்டுகள் என்று கருதப்படுகிறது. இதன்படி, மீதமுள்ள 1000 ஆண்டுகளை இந்தியா முஸ்லிம் ஆட்சியாளர்களின் கீழ் அடிமைத்தனத்தில் கழித்தது என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தியாவில் உள்ள பள்ளிப் புத்தகங்களின்படி, 1757 ஆம் ஆண்டு பிளாசி போரில் வங்காள நவாப்பை ஆங்கிலேயர்கள் வென்ற காலத்தில் இருந்து இந்தியா அடிமையானதாகக் கருதப்படுகிறது, ஆனால் தற்போது இந்தியாவில் வரலாற்றை மாற்றுவது பற்றிய பேச்சு எழுந்துள்ளது. இடைக்காலத்தில், முஸ்லிம் ஆட்சியாளர்கள் படையெடுத்து வந்து இந்தியாவை அடிமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இடைக்கால முஸ்லிம் ஆட்சியாளர்களை படையெடுப்பாளர்கள் என்று வலதுசாரி அழைக்கின்றனர். வரலாற்று அறிஞரும், ஜஹாங்கிர் பற்றிய ‘Intimate Portrait of a Great Mughal’ என்ற புத்தகத்தின் ஆசிரியருமான பார்வதி சர்மா, அதிகாரத்திற்காக ஒரு நாட்டை மற்றொன்று தாக்குவது புதிய விஷயமல்ல என்று கூறுகிறார்.

“மௌரியர்களின் ஆட்சி ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது, எனவே அவர்களும் படையெடுப்பாளர்களாக இருந்தனர். அதிகாரத்தை விரிவுபடுத்தி எந்த வடிவத்திலும் அதிகாரத்தைப் பெறுவதற்கான விருப்பத்தை நாம் பார்க்க முடுகிறது. இந்த ஆசைக்கு எந்த குறிப்பிட்ட மதத்துடனும் எந்த தொடர்பும் இல்லை” என்று பார்வதி கூறுகிறார்.

பாபரும் ஹுமாயூனும் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள். அக்பர் இந்தியாவை விட்டு வெளியே சென்றதே இல்லை. அக்பருக்குப் பிறகு வந்த அனைத்து முகலாய ஆட்சியாளர்களும் இந்தியாவில் பிறந்தவர்கள் தான் என்பதும் சரித்திரம் சொல்லும் வரலாறு.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு