பட மூலாதாரம், Anna Moneymaker/Getty

படக்குறிப்பு, வெள்ளை மாளிகையில் குடியரசுக் கட்சி எம்.பி.க்களுடனான இரவு விருந்தின் போது டிரம்ப் பேசினார். 38 நிமிடங்களுக்கு முன்னர்

மே மாதம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் போது ‘ஐந்து போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமையன்று கூறினார்.

ஆனால், அந்த போர் விமானங்கள் எந்த நாட்டைச் சார்ந்தவை என்றும், எத்தனை போர் விமானங்கள் சேதமடைந்தன என்பதையும் டிரம்ப் குறிப்பிடவில்லை.

வெள்ளிக்கிழமையன்று இரவு வெள்ளை மாளிகையில் குடியரசுக் கட்சி எம்.பி.க்களுடனான இரவு விருந்தின் போது டிரம்ப் இவ்வாறு கூறியிருந்தார்.

முன்னதாக, இந்தியாவின் ‘ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக’ பாகிஸ்தான் கூறியிருந்தது.

டிரம்பின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு, எதிர்க்கட்சியான காங்கிரஸ் பிரதமர் நரேந்திர மோதியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறினார். இதனுடன், வர்த்தகத்தை அச்சுறுத்துவதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன்” என்று 24வது முறையாக டிரம்ப் கூறியிருந்தார் என காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது.

“டிரம்ப் இதனை தொடர்ந்து கூறி வருகிறார், ஆனால் நரேந்திர மோதி அமைதியாக இருக்கிறார். வணிகத்திற்காக நரேந்திர மோதி ஏன் நாட்டின் கௌரவத்தை சமரசம் செய்தார்?” என்றும் அந்தப் பதிவு கேள்வி எழுப்புகிறது.

மே மாத இறுதியில், பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா என்பது குறித்த கேள்விகளுக்கு இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் பதிலளித்தார்.

விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் கூறியதை அவர் முற்றிலுமாக நிராகரித்தார்.

இது தவிர, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் குறித்தும் டிரம்ப் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை நிறுத்துவதாக மிரட்டியதாகவும், அதன் பிறகே இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் முன்னர் கூறியிருந்தார்.

மே மாத தொடக்கத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலின் போது, அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் பிரதமர் நரேந்திர மோதியுடன் பேசியிருந்தார்.

இந்த உரையாடலை அமெரிக்கா ஒரு சண்டை நிறுத்தமாக முன்வைத்தது. அதேபோல் அதிபர் டிரம்ப் தான் சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியலில் சண்டை நிறுத்தத்தை அறிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில், ஒரு நேர்காணலில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் , சண்டை நிறுத்தம் முற்றிலும் இருதரப்பு சார்ந்தது என்று கூறியிருந்தார்.

டிரம்ப் என்ன கூறினார்?

பட மூலாதாரம், Francis Chung/Politico/Bloomberg via Getty

படக்குறிப்பு, வர்த்தகம் மூலம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை அமெரிக்கா தடுத்ததாக டிரம்ப் கூறினார்.வெள்ளிக்கிழமை இரவு வெள்ளை மாளிகையில் குடியரசுக் கட்சி எம்பிக்களிடையே பேசிய டிரம்ப், அமெரிக்கா பல போர்களை நிறுத்தியுள்ளதாகவும், அவை அனைத்தும் கடுமையானவை என்றும் கூறினார் .

“இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இதேதான் நடந்து கொண்டிருந்தது. அங்கு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உண்மையில் ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என நான் நினைக்கிறேன். இரண்டும் அணு ஆயுத நாடுகள், அவை ஒன்றையொன்று தாக்கிக் கொண்டிருந்தன” என்று தெரிவித்த டிரம்ப், “இது ஒரு புதிய போர் முறை போல் தெரிகிறது. சமீபத்தில் இரானுக்கு நாங்கள் என்ன செய்தோம் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். அவர்களின் அணுசக்தி திறனை நாங்கள் முற்றிலுமாக அழித்தோம்”என்றும் கூறியிருந்தார்.

மீண்டும் ஒருமுறை வர்த்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, இதன் மூலம் மோதலை நிறுத்தினோம் என்று கூறினார் டிரம்ப்.

“இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தன, ஆனால் அது பெரிதாகிக் கொண்டிருந்தது, நாங்கள் அதை வர்த்தகம் பற்றிய மிரட்டல் மூலம் தீர்த்தோம்” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

“நீங்கள் (அமெரிக்காவுடன்) ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டால், ஒருவேளை அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், நாங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்று நாங்கள் சொன்னோம்”

போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுவதற்கு இந்தியா பதில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் கூற்றை சிடிஎஸ் ஜெனரல் அனில் சவுகான் முற்றிலுமாக நிராகரித்தார்.பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது குறித்த கேள்விகளுக்கு மே 31-ஆம் தேதி இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் பதிலளித்தார்.

விமானங்களுக்கு சேதம் விளைவித்ததாக பாகிஸ்தான் கூறியதையும் சவுகான் முற்றிலுமாக நிராகரித்தார்.

ப்ளூம்பெர்க் டிவிக்கு அளித்த பேட்டியில், இந்திய விமானப்படையின் ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது, நீங்கள் அதுபற்றி என்ன கூறுகிறீர்கள் என்று ஜெனரல் அனில் சவுகானிடம் பத்திரிகையாளர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஜெனரல் அனில் சவுகான், “ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது முக்கியமல்ல, இது ஏன் நடந்தது என்பதுதான் முக்கியம்” என்றார்.

“குறைந்தபட்சம் ஒரு ஜெட் விமானமாவது சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது சரியா?” என்று பத்திரிகையாளர் மீண்டும் ஒருமுறை அவரிடம் கேட்டார்.

“நாங்கள் உத்தி சார்ந்த தவறுகளை செய்திருந்தோம். அவற்றை விரைவில் கண்டுபிடித்து, சரிசெய்தோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த மாற்றங்களை செயல்படுத்தினோம். பின்னர் எங்கள் அனைத்து ஜெட் விமானங்களையும் பறக்கவிட்டு, நீண்ட தூர இலக்குகளை குறிவைத்து தாக்கினோம்,” என்று ஜெனரல் அனில் சவுகான் கூறினார்.

“பாகிஸ்தான் ஆறு இந்திய போர் விமானங்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாகக் கூறுகிறது. அந்த எண்ணிக்கை சரியா?” என்று பத்திரிகையாளர் மீண்டும் ஒருமுறை கேட்டார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, “இது முற்றிலும் தவறு. ஆனால் நான் சொன்னது போல், இந்த தகவல் முக்கியமில்லை. ஜெட் விமானங்கள் ஏன் விழுந்தன, அதன் பிறகு நாங்கள் என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம். இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்றார் ஜெனரல் அனில் சவுகான்.

சண்டை நிறுத்த கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்சமீபத்தில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருந்தார்.

அங்கு அவர் அமெரிக்க பத்திரிகையான ‘நியூஸ் வீக்’-க்கு அளித்த பேட்டியில் , சண்டை நிறுத்தம் முற்றிலும் இருதரப்பு சார்ந்தது என்று கூறினார்.

“அதிபர் டிரம்புக்கும், பிரதமர் மோதிக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்தவொரு மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தமும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் மோதலை நிறுத்த வர்த்தகம் ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தப்பட்டது என்று அதிபர் டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். இது வர்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தைகளில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?” என்று நேர்காணலின் போது, ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய எஸ். ஜெய்சங்கர், “மே 9 ஆம் தேதி இரவு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்திய பிரதமர் மோதியுடன் பேசியபோது நான் அறையில் இருந்தேன் என்று உங்களிடம் கூற முடியும். சில விஷயங்களில் நாம் உடன்படவில்லை என்றால், பாகிஸ்தான் இந்தியா மீது பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்கள் பிரதமரை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மாறாக, இந்தியாவிடமிருந்து நிச்சயமாக பதில் கிடைக்கும் என்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டார்” எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தானுடனான எங்கள் அனைத்து பிரச்னைகளும் பரஸ்பரம் அதாவது இருதரப்பு சார்ந்தவை என்று பல ஆண்டுகளாக தேசிய அளவில் ஒருமித்த கருத்து உள்ளது என்றும் எஸ் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “இது அந்த இரவைப் பற்றியது. அந்த இரவு பாகிஸ்தான் எங்களை கடுமையாகத் தாக்கியது என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் உடனடியாக பதிலடி தந்தோம். மறுநாள் காலை மார்கோ ரூபியோ எனக்கு போன் செய்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறினார். நான் உணர்ந்ததை மட்டுமே உங்களுக்குச் சொல்ல முடியும். மீதமுள்ளவற்றை உங்களால் புரிந்து கொள்ள முடியும்” என்று கூறினார்.

ஜூன் மாதத்தில், பிரதமர் மோதி ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கனடா சென்றார், அங்கிருந்து அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் பேசினார்.

இந்த உரையாடலின் விவரங்களை அளித்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தம் இருதரப்பு ஒப்பந்தம் என்றும், எந்த மூன்றாவது நாட்டின் தலையீட்டாலும் ஏற்படவில்லை என்றும் பிரதமர் மோதி டிரம்பிடம் தெளிவாகக் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

சண்டை நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வது பற்றி எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று பிரதமர் மோதி டிரம்பிடம் கூறியதாகவும் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார்.

இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து இதுவரை எத்தகைய கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன?

பட மூலாதாரம், EPA/PTV

படக்குறிப்பு, மோதலின் போது, ஐந்து இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது.இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்தியதாகவும், இரு நாடுகளும் அணு ஆயுதப் போரை நோக்கிச் செல்வதைத் தடுத்ததாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல முறை கூறியுள்ளார்.

அவரது கூற்றை பாகிஸ்தான் ஆதரித்தது.

சண்டை நிறுத்தத்திற்குப் பிறகு, இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், “அதிபர் டிரம்பிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்துள்ளது” என்று கூறினார்.

இதைத் தவிர, மோதலின் போது, இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது.

“இதுவரை, மூன்று ரஃபேல் விமானங்கள், ஒரு சுகோய் -30, ஒரு மிக்-29 ஆகிய 5 இந்திய போர் விமானங்கள் மற்றும் ஒரு இரானிய ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்பதை நான் உறுதிப்படுத்த முடியும்” என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி கூறியிருந்தார் .

அந்த சமயத்தில், இந்தக் கூற்றுகளுக்கு எந்த எதிர்வினையும் காட்டாத இந்தியா, பின்னர் இந்தக் கூற்றுகளை நிராகரித்தது.

இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து ஜகார்த்தாவில் பேசிய இந்திய தூதரக ராணுவ அதிகாரியின் கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட கடற்படை அதிகாரியான கேப்டன் ஷிவ் குமார், ஜூன் 10-ஆம் தேதி ஜகார்த்தாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார்.

“அரசியல் தலைமையால்” விதிக்கப்பட்ட சில “கட்டுப்பாடுகளின்” காரணமாக, நடவடிக்கையின் தொடக்க கட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளங்களை இந்திய விமானப்படை தாக்க முடியவில்லை என்று கருத்தரங்கில் தனது விளக்கக்காட்சியின் போது, இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ராணுவ அதிகாரி கூறியதாகக் கூறப்படுகிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”நாங்கள் சில விமானங்களை இழந்தோம், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் அல்லது வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்காத வகையில் அரசியல் தலைமையால் தடைகள் உருவாக்கப்பட்டதால் தான் இது நடந்தது” என்று அவர் கூறியதாக பிடிஐ செய்தி முகமை கூறியது.

“ஆனால் அதன் பின்னர் நாங்கள் எங்கள் உத்தியை மாற்றி, ராணுவ நிலைகளை நோக்கிச் சென்றோம். முதலில் எதிரியின் வான் பாதுகாப்பை முடக்கி அழித்தோம். அதனால் தான் தரையிலிருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்க முடிந்தது” என்று அவர் கூறியிருந்தார்.

இந்திய தூதரக ராணுவ அதிகாரியின் இந்த கூற்றுக்குப் பிறகு, இந்திய தூதரகம் இதற்கு பதிலளித்தது.

அதில், “ஒரு கருத்தரங்கில் பாதுகாப்பு ஆலோசகரின் விளக்கக் காட்சி தொடர்பான சில செய்திகளை ஊடகங்களில் பார்த்தோம். அவரது கூற்று உண்மைச் சூழலுக்கு அப்பாற்பட்டு காட்டப்பட்டுள்ளது மற்றும் ஊடக அறிக்கைகளில் அவரது வார்த்தைகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன” என்று கூறியது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு