வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஒருவனின் கூட்டாளிகள் 8 பேர் உட்பட 10 சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று (09) அதிகாலை கல்கிஸை, தெஹிவளை மற்றும் அங்குலானை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் வேட்டையின் போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கைக்குண்டு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் பல கூர்மையான ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 56 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் அங்குலானை, மொரட்டுவை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளைப் பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கடுமையான காயங்களை ஏற்படுத்திய குற்றச்செயல் உட்பட, பல்வேறு குற்றங்களுடன் இவர்களுக்குத் தொடர்பிருப்பது தற்போதைய முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.