← முகப்பு செய்திகள்

வங்கதேசம் திரும்ப இந்திய எல்லையில் காத்திருக்கும் மக்கள் – மேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது?

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 6 பார்வைகள்
வங்கதேசம் திரும்ப இந்திய எல்லையில் காத்திருக்கும் மக்கள் – மேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Uttarayan Chakraborty/BBC

சட்டவிரோத வழிகள் மூலம் இந்தியாவுக்கு வந்தவர்கள், 'தாங்களாகவே முன்வந்து' திரும்பிச் செல்ல விரும்பினால், அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, தினமும் ஏராளமானோர் எல்லையைக் கடந்து, வங்கதேசத்துக்குள் நுழைவதற்காக மேற்கு வங்கத்தின் சட்கிரா மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் எல்லைப் பகுதிகளை வந்தடைகின்றனர்.

இந்த எல்லையில்தான் நான் பச்சு முன்ஷியை சந்தித்தேன்.

அவர் கூறுகையில், "எனக்கு சுமார் பத்து வயதாக இருந்தபோது, ​​என் பெற்றோரின் கைகளைப் பிடித்துக்கொண்டு நான் இந்தியா வந்தேன். ஏறக்குறைய 38 ஆண்டுகள் கடந்துவிட்டன. நான் இங்கேயே திருமணம் செய்துகொண்டேன், குழந்தைகளைப் பெற்றெடுத்தேன். அவர்களுக்கும் இங்கேயே திருமணம் செய்துவைத்தேன்." என்கிறார்.

கொல்கத்தாவின் டம் டம் விமான நிலையத்துக்கு அருகே வசிப்பதாக பச்சு முன்ஷி தெரிவித்தார். வங்கதேசத்தின் சட்கிரா மாவட்டத்தை ஒட்டியுள்ள, வடக்கு 24 பர்கானாஸில் அமைந்துள்ள ஹக்கிம்பூர் எல்லையைக் கடக்கும் பகுதிக்கு அவர் தனது குடும்பத்தினருடன் வந்தடைந்தார்.

தான் வங்கதேசத்தின் குல்னா மாவட்டத்தைச் சேர்ந்த நபர் என்று அவர் கூறினார்.

தினந்தோறும், அவரைப் போன்ற எண்ணற்ற பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஹக்கிம்பூர் எல்லைக்கு வந்து சேர்கின்றனர். இவர்களில் சிலர் ஜெசோரிலிருந்தும், சிலர் குல்னாவிலிருந்தும், சிலர் சட்கிராவிலிருந்தும் இந்தியா வந்ததாகக் கூறுகின்றனர்; சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும், சிலர் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்பும் வந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்று, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே, "வங்கதேச ஊடுருவல்காரர்கள்" இனி தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்தார். அதிலிருந்து, கடந்த ஒரு வார காலமாக, மக்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புவதற்காக ஒவ்வொரு காலையும் எல்லையில் கூடி வருகின்றனர்.

ஹக்கிம்பூரைச் சேர்ந்த உள்ளூர்வாசியான ஹசனுர் காஸி, "ஆரம்பத்தில் தினமும் 10 முதல் 12 பேர் வருவது வழக்கம்; பின்னர் இந்த எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக, இந்த எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் எட்டியுள்ளது," என்று கூறினார்.

எல்லையில் திரண்டிருந்த பலர், தாங்கள் இந்தியாவுக்கு 'ரகசியமாக' வந்ததாகவும், மேற்கு வங்கத்தில் 'சட்டவிரோதமாக' வசித்து வந்ததாகவும், பணிபுரிந்து வந்ததாகவும் கூறினர்.

எல்லையில் ஒருநாள்

இந்தியா - வங்கதேசம், மேற்கு வங்கம், வங்கதேச சட்டவிரோத குடியேறிகள்

பட மூலாதாரம், Uttarayan Chakraborty/BBC

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஸ்வரூப்நகர் காவல் நிலைய எல்லைக்குள் ஹக்கிம்பூர் பகுதி வருகிறது. எல்லை பாதுகாப்பு படையினரின் (BSF) சோதனைச் சாவடியைக் கடந்த பிறகு, தாராலி கிராமத்தையும், அதைத் தொடர்ந்து சோனாய் நதியையும் நீங்கள் காணலாம்.

ஆற்றின் மறுபுறம் வங்கதேசத்தின் சட்கிரா மாவட்டம் உள்ளது.

ஹக்கிம்பூரைச் சேர்ந்த உள்ளூர்வாசியான முஸ்தஃபா ஷாஜி, "வங்கதேச ஊடுருவல்காரர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்ததிலிருந்து, வங்கதேசத்துக்குத் திரும்பிச் செல்வதற்காக மக்கள் இங்கு கூடத் தொடங்கியுள்ளனர்," என்று கூறினார்.

எல்லைச் சோதனைச் சாவடியில், அவர்கள் முதலில் ஒரு ஆள் அரவமற்ற வீட்டில் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அங்கிருந்து, காவல்துறையினர் ஒவ்வொரு குடும்பத்தையும் அழைத்து, அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்தனர். அவர்களிடம் வங்கதேச அடையாள அட்டைகள் உள்ளனவா என்பதை அவர்கள் சோதித்தனர்; அவர்களின் பெயர்கள், அடையாளங்கள் மற்றும் வங்கதேசத்தில் அவர்களின் பூர்வீகம் ஆகியவை பதிவு செய்யப்பட்டன. புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.

அதன்பின், அவர்கள் எல்லைச் சாவடிக்கு அருகில் காத்திருக்க வேண்டும்.

இந்தியா - வங்கதேசம், மேற்கு வங்கம், வங்கதேச சட்டவிரோத குடியேறிகள்

பட மூலாதாரம், Uttarayan Chakraborty/BBC

அவர்கள் எவ்வாறு வங்கதேசத்துக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பது குறித்து, உள்ளூர் நிர்வாகமோ அல்லது எல்லைப் பாதுகாப்புப் படையோ (BSF) அதிகாரப்பூர்வமாக எவ்விதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்தியாவின் ஹக்கிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தாங்கள் இதைக் கவனித்து வருவதாகக் கூறுகின்றனர்.

ஹக்கிம்பூரைச் சேர்ந்தவரும் உள்ளூர் வணிகருமான ஹசனுர் காஸி கூறுகையில், "சோதனைச் சாவடியில், அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பயோமெட்ரிக் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பின்னர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) அவர்களை எல்லையை நோக்கி அழைத்துச் செல்கின்றனர். அங்கிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில், அமோடியா எனப்படும் பாதசாரிகளுக்கான எல்லையைக் கடக்கும் பாதை ஒன்று உள்ளது; அதன் வழியாகவே அவர்கள் எல்லையைக் கடக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இது பகல் நேரங்களில் நடைபெறுகிறது; சில சமயங்களில் இரவு வரையிலும் தொடர்கிறது. ஏனெனில், ஏராளமான ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டியுள்ளது" என்றார்.

கடந்த ஏப்ரல் 27 அன்று பிபிசி வங்கசேவை ஹக்கிம்பூரில் எல்லையைக் கடக்கும் பாதைக்குச் சென்றபோது, ​​அதே நடைமுறையே பின்பற்றப்பட்டது. ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, வங்கதேசத்துக்குத் திரும்ப விரும்பியவர்கள் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஆனால், மாலை வரை அவர்கள் அங்கேயே வைக்கப்பட்டிருந்தனர்.

இதன்பிறகு, அவர்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு, ஸ்வரூப்நகர் காவல் நிலையப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 'தடுப்பு மையங்களுக்கோ' (holding centres) அல்லது தற்காலிக முகாம்களுக்கோ அழைத்துச் செல்லப்பட்டனர்.

"என்னிடம் இந்திய வாக்காளர் அடையாள அட்டையும் உள்ளது"

இந்தியா - வங்கதேசம், மேற்கு வங்கம், வங்கதேச சட்டவிரோத குடியேறிகள்

பட மூலாதாரம், Uttarayan Chakraborty/BBC

எல்லை கடந்து வங்கதேசத்துக்குத் திரும்பக் கூடியிருந்தவர்களுள் பலர், வெவ்வேறு இந்திய அடையாள அட்டைகளைக் கொண்டிருந்ததாக அப்பகுதிவாசியான முஸ்தஃபா ஷாஜி தெரிவித்தார்.

"பலரிடம் இந்திய அடையாள அட்டைகள் உள்ளன; சிலரிடம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் கூட உள்ளன — நாங்கள் அவற்றைப் பார்த்திருக்கிறோம். ஒருவேளை அனைவரும் எங்களிடம் சொல்லாமல் இருக்கலாம். ஆனால், சிலர் அவற்றை எங்களிடம் காட்டினார்கள்," என்றார் அவர்.

எல்லையில் காத்திருந்த சிலரும், தங்களிடம் இந்திய வாக்காளர் அட்டைகள் இருப்பதை ஒப்புக்கொண்டனர். அவர்களில் ஒருவர் பச்சு முன்ஷி. இவர் சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்திலிருந்து கொல்கத்தாவுக்கு வந்தவர்.

இந்தியா - வங்கதேசம், மேற்கு வங்கம், வங்கதேச சட்டவிரோத குடியேறிகள்

பட மூலாதாரம், Uttarayan Chakraborty/BBC

அவர் கூறுகையில், "வாக்காளர் அட்டையைப் பெறுவதற்கு நான் மிகவும் கடுமையாக முயற்சி செய்தேன். எனது ஆதார் அட்டை மற்றும் பான் அட்டையையும் நான் பெற்றுக்கொண்டேன். 2024-ஆம் ஆண்டில், இங்கு நான் முதன்முறையாக வாக்களித்தேன்." என்றார்.

ஆனால், 2026-ஆம் ஆண்டில் வாக்காளர் பட்டியலைத் தீவிரமாகத் திருத்தியமைத்தபோது (எஸ்ஐஆர்), அவரது குடும்பத்தின் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

இதற்கிடையில், தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்த பிறகு, வங்கதேசத்திலிருந்து வந்து மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக வசித்துவரும் மக்கள் இனி அங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

எல்லையில் இருந்த நஸ்மா, "பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நாங்கள் இங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டோம் என்று எங்களிடம் கூறப்பட்டு வந்தது. எனவே, நான் எனது சொந்த நாட்டுக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளேன். நாங்கள் பிடிபட்ட உடனேயே எங்களைச் சிறையில் அடைத்துவிடுகிறார்கள். இப்போது எனக்குத் திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதால், நான் செல்கிறேன்." என்று கூறினார்.

தான் வங்கதேசத்தின் ஜெசோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று அவர் கூறினார்.

"சட்ட விரோதமாக இந்தியாவுக்குத் திரும்பி வரமாட்டேன்"

இந்தியா - வங்கதேசம், மேற்கு வங்கம், வங்கதேச சட்டவிரோத குடியேறிகள்

பட மூலாதாரம், Uttarayan Chakraborty/BBC

ஹக்கிம்பூர் எல்லையை அடைந்த மற்றவர்களும், மேற்கு வங்கத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் தொடர்ந்து வாழ்வது இனி சாத்தியமில்லை என்பதைத் தாங்கள் 'உணர்ந்ததாகத்' தெரிவித்தனர்.

சட்கிரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ரைசா பர்வீன், "தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து, வங்கதேசத்தவர்களை இங்கு தங்க அனுமதிக்கப் போவதில்லை என்று பாஜக கூறி வருகிறது. அதனால்தான், நானும் என் கணவரும் குழந்தைகளும் வங்கதேசத்துக்கே திரும்பிச் செல்ல விரும்புகிறோம். எஸ்ஐஆர் நடைமுறையின்போது, ​​பலர் வங்கதேசத்துக்குத் திரும்பிய சமயத்திலேயே, என் பெற்றோரும் இங்கிருந்து சென்றுவிட்டனர்," என்று கூறினார்.

ஷேக் மசூத் ராணா என்பர் கூறுகையில், அரசாங்க அறிவிப்பைத் தாண்டி, தான் வசிக்கும் பகுதியில் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்; தான் வசிக்கும் வீட்டின் உரிமையாளரும் தன்னை இனி அங்கு வசிக்க அனுமதிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

அக்தருல் மோரல் கூறுகையில், "காவல்துறையினர் இங்கு வந்து, வங்கதேசத்தவர்களை ஓடிவிடுமாறு எச்சரிக்கத் தொடங்கினர். எஸ்ஐஆர் நடைமுறையின்போதே, நாங்கள் இங்கிருந்து வெளியேறியிருக்க வேண்டும்; அதுவே சிறந்ததாக இருந்திருக்கும்" என்றார்.

ஷாஹீன் ஆலம் மொல்லா கூறுகையில், இனிமேல் 'சட்டவிரோத வழிகள்' மூலம் இந்தியாவுக்குத் திரும்பப் போவதில்லை என்று கூறினார்.

"என் சொந்த நாட்டில் என்னால் என்ன வேலை செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். ஆனால், நான் இப்போது இந்தியாவுக்குத் திரும்பி வரமாட்டேன். ஒருவேளை நான் வந்தாலும், சட்டபூர்வமான முறையில் பாஸ்போர்ட் பெற்ற பிறகே வருவேன்" என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
செய்திகள்
Ban vs Aus 1st odi- Bangladesh Clinches Historic ODI Win Against Australia
09 Jun 2026
செய்திகள்
Ind a vs SL A- Ruturaj century Powers India A Edge Sri
09 Jun 2026
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
09 Jun 2026
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
09 Jun 2026
செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா
09 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
09 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net