← முகப்பு செய்திகள்

புதிய தாக்குதல்களால் மாறும் நிலவரம்: அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் இரான் கை ஓங்குமா?

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 4 பார்வைகள்
புதிய தாக்குதல்களால் மாறும் நிலவரம்: அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் இரான் கை ஓங்குமா?

பட மூலாதாரம், Anadolu via Getty Images

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்ட போதிலும், வார இறுதியில் இரான் மீது இஸ்ரேல் நடத்திய பழிக்குப்பழி தாக்குதல்கள், மத்திய கிழக்கை இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மற்றொரு நேரடி மோதலுக்குள் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு முதல் முறையாக இஸ்ரேல் இரானில் உள்ள இடங்கள் மீது குண்டுவீசித் தாக்கியுள்ளது. லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைகளை வீசியது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது போரைத் தொடங்கி மூன்று மாதங்களுக்கும் மேலாகியும், இந்த பிராந்தியம் எவ்வளவு ஆபத்தான முறையில் ஸ்திரத்தன்மையற்று உள்ளது என்பதை இது காட்டுகிறது. இது, போரின் தற்போதைய போக்கைப் பற்றிய மூன்று புள்ளிகளையும் எடுத்துக்காட்டுகிறது:

டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்குத் தனது இஸ்ரேலிய கூட்டாளியைக் கட்டுப்படுத்த முடியாது அல்லது கட்டுப்படுத்த விரும்பவில்லை, இந்த விஷயம் டெஹ்ரானுக்கு நன்றாகவே தெரியும், இது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எந்தவொரு கருத்து வேறுபாடுகளையும் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது

இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா போருடன், அமெரிக்கா-இரான் போரின் விதியை இணைப்பதற்காக, தனது சொந்த நாட்டின் மீது பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்ள டெஹ்ரான் தயாராக உள்ளது

அணுசக்தி விவகாரத்தில் டிரம்ப் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒப்பந்தம் இன்னும் நெருங்கவில்லை. ஏனெனில் டிரம்ப் தற்போது ஆபத்துகளை எதிர்கொள்ள விரும்பவில்லை என்பதை இரான் உணர்ந்துள்ளதுடன், பேச்சுவார்த்தையில் வாஷிங்டனிடமிருந்து அதிக பலன்களைப் பெற அது முயல்கிறது

இரானும் இஸ்ரேலும் தாக்குதல்களை நிறுத்துவதாகக் கூறுகின்றன. ஆனால் போர் நிறுத்தம் மீண்டும் மீறப்பட்டால் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கின்றன

ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய பிறகு, டொனால்ட் டிரம்ப் பல செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒருவரை "இப்போதே [நெதன்யாகுவை] அழைத்து பழிவாங்க வேண்டாம் என்று சொல்லப் போகிறேன்" என்று கூறினார்.

இதன் அர்த்தம், இஸ்ரேலின் எதிர் தாக்குதல் டெஹ்ரானுடன் அவர் மேற்கொண்டு வரும் மிகவும் பலவீனமான ராஜதந்திர முயற்சிகளை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதாகும்.

சில மணிநேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் இரானைத் தாக்கியது. திங்கள்கிழமை மதியம் பிபிசியிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், தான் நெதன்யாகுவிடம் பேசியபோது இஸ்ரேலிய விமானங்கள் "ஏற்கனவே கிளம்பிவிட்டன" என்று கூறியதாக தெரிவித்தார்.

பிபிசியுடனான ஒரு சிறிய தொலைபேசி உரையாடலில், இஸ்ரேல் பிரதமர் தனக்குக் கட்டுப்படாமல் நடக்கவில்லை என்று கூறிய அமெரிக்க அதிபர்: "நான் அவரிடம் ஏதாவது செய்யச் சொன்னால், அவர் அதைச் செய்வார்," என்றார்.

வெளிப்படையாகப் பார்க்கும்போது, நெதன்யாகுவைத் தடுப்பதில் டிரம்ப் தோல்வியடைந்தார். இது இரு தலைவர்களுக்கும் இடையிலான பதற்றமான தொடர் விவாதங்களில் மற்றொரு தீவிரமடைதலாகும்.

கடந்த வாரம், டொனால்ட் டிரம்ப் நெதன்யாகு மீது கடுமையான வார்த்தைகளால் வசைபாடியதாகத் தெரிகிறது. பெய்ரூட்டைத் தாக்க விரும்புவதற்காக இஸ்ரேலிய தலைவர் "பைத்தியக்காரர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு இஸ்ரேலுக்கு எதிரான ஹெஸ்பொலா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பெய்ரூட் மீதான தாக்குதல்கள் அவசியம் என்று நெதன்யாகு கூறினார்.

அவரது இந்த நடத்தை, ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், இரானின் அணுசக்தித் திட்டம் குறித்த உத்தரவாதங்களைப் பெறவும் டெஹ்ரானுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான தனது சொந்த முயற்சியையும் அச்சுறுத்துவதாக டிரம்ப் கருதினார்.

கடந்த வாரம் நியூயார்க் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில், நெதன்யாகு "லெபனானுடன் தொடர்ந்து சண்டையிடுவது" தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக டிரம்ப் கூறினார்.

அப்படியென்றால், இரான் மீதான தற்போதைய தாக்குதல்கள் மூலம் நெதன்யாகு டொனால்ட் டிரம்ப்பை மீறிவிட்டாரா?

இது பரவலாகப் பேசப்படும் ஒரு கருத்தாக இருந்தாலும், இதற்கான பதில் நிச்சயமாக இல்லை என்பதுதான்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, டிரம்ப், நெதன்யாகு

பட மூலாதாரம், Anadolu via Getty Images

இஸ்ரேலின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், அமெரிக்கா குறைந்தபட்சம் இதற்கு வரம்புக்குட்பட்ட அனுமதியை வழங்கியதை உணர்த்துகின்றன, ஆனால் டிரம்ப் ஒரு எச்சரிக்கையுடன் தொடர வேண்டும் மற்றும் ஒரே ஒரு சுற்றுடன் நிறுத்த வேண்டும் என்று விரும்புவார்.

அமெரிக்காவின் மூத்த பேச்சுவார்த்தையாளர் ஆரோன் டேவிட் மில்லர் திங்கள்கிழமை காலை பிபிசியிடம் கூறியது போல – டிரம்ப் நெதன்யாகுவுக்கு ஒரு "மஞ்சள் விளக்கு எச்சரிக்கையை" மட்டுமே கொடுத்தார்.

நடைமுறையில் பார்த்தால், அமெரிக்காவின் மறைமுக அனுமதியாவது இல்லாமல் இஸ்ரேலால் இரான் மீது தாக்குதல் நடத்தியிருக்க முடியாது.

இராக் மீதான படையெடுப்பிற்குப் பிறகு இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தற்போது தனது மிகப்பெரிய இராணுவப் படைக் குவிப்பைக் கொண்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்துடன் (IDF) தொடர்புகொள்வதற்காக இஸ்ரேலில் நூற்றுக்கணக்கான அமெரிக்க இராணுவப் பணியாளர்கள் உள்ளனர்.

இந்தச் சூழலில், இப்பகுதியில் உள்ள அமெரிக்கப் படைகளுடன் வான்வழிப் பாதைகள் குறித்து இஸ்ரேல் ஒருங்கிணைக்க வேண்டியிருந்திருக்கும்.

தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் ராணுவம், அமெரிக்க மத்திய கட்டளையகத்துடன் "முழுமையான ஒருங்கிணைப்பு" இருந்ததாகத் தெரிவித்தது.

இஸ்ரேல் மீது இரான் வீசிய ஏவுகணைகளை இடைமறிக்கவும் அமெரிக்க இராணுவம் உதவியதாக அது கூறியது.

வாஷிங்டன் நேரப்படி திங்கள்கிழமை மதியம், இஸ்ரேல் மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளுமே தங்களுக்கு இடையேயான தாக்குதல்கள் முடிந்துவிட்டதாக சமிக்ஞை செய்தன.

இங்குதான் டொனால்ட் டிரம்ப், விஷயங்கள் நிற்க வேண்டும் என்று விரும்புவார்.

நெதன்யாகுவை தான் தடுத்து நிறுத்துவேன் என்று ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் வெளியிட்ட செய்திகள், இஸ்ரேலின் தாக்குதல்களில் இருந்து வாஷிங்டனைத் தூர விலக்கிக் காட்டுவதற்காக இரானுக்கு சொல்லப்பட்டதாக இருக்கலாம் அல்லது அவர் உண்மையிலேயே அவரைத் தடுக்க நினைத்திருக்கலாம், ஆனால் நெதன்யாகுவால் அவர் சமாதானப்படுத்தப்பட்டிருக்கலாம்.

இரானின் ஏவுகணைத் தாக்குதல்களைப் பழிவாங்காமல் விட முடியாது என்று இஸ்ரேலியர்கள் கணக்கு போட்டிருந்தாலும், இந்தத் தாக்குதல்களைத் தொடுப்பதற்கான இரானின் கணக்கு மிகவும் முக்கியமானது.

லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைகளை வீசி தாக்கியது இதுவே முதல் முறையாகும் (இரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதலுக்கு நேரடிப் பழிவாங்கலாக இல்லாமல்).

அமெரிக்காவுடனான தனது சொந்த போர்நிறுத்தம் மற்றும் இஸ்ரேல் – ஹெஸ்பொலா இடையே பெயரளவில் மட்டுமே இருக்கும் போர் நிறுத்தம் ஆகிய இரு போர்நிறுத்தங்களையும் இணைப்பது குறித்த தனது நிலைப்பாட்டை இரான் இதன் மூலம்வலியுறுத்த முயன்றது.

இது டிரம்பின் பதிலையும் சோதித்துப் பார்த்தது.

இரான் மீதான இஸ்ரேலின் பதில் தாக்குதலை அமெரிக்கர்கள் எந்த அளவிற்கு ஆதரிப்பார்கள்?

அமெரிக்கர்களும் இதில் தங்களை இணைத்துக் கொள்வார்களா?

போரின் எதிர்காலப் போக்கு குறித்து அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே எவ்வளவு அதிகமாக சர்ச்சையை உருவாக்க முடியுமோ, அவ்வளவு நல்லது என்று டெஹ்ரான் கருதுகிறது.

இறுதியில், டிரம்ப் தூர விலகி இருக்கவே தேர்வு செய்தார், குறைந்தபட்சம் பகிரங்கமா. அத்துடன், அவர் டெஹ்ரானுடனான ராஜதந்திரத்தை தொடர்ந்து முன்னெடுத்தார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, டிரம்ப், நெதன்யாகு

பட மூலாதாரம், Alex Wong/Getty Images

இந்த மோதல் வெடிப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, ஞாயிற்றுக்கிழமை என்பிசிக்கு (NBC) அளித்த பேட்டியில், இரானுடனான ஒப்பந்தம் "மிக நெருக்கத்தில்" உள்ளது என்ற தனது கருத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அதற்குப் பிறகு, அவர் இஸ்ரேலையும் இரானையும் ஒரு அலட்சியமான பார்வையில் சித்தரித்தார். இருவரும் தங்களது "வேடிக்கையை" முடித்துவிட்டார்கள் என்றும், இப்போது பேச்சுவார்த்தைக்கான நேரம் வந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.

இந்த மோதலின் முடிவால் இரான் தலைவர்கள் ஊக்கம் பெற்றதாகத் தெரிகிறது.

இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், இஸ்ரேல் மீதான இரானின் இராணுவத் தாக்குதல்கள் அமெரிக்காவுடனான அதன் பேச்சுவார்த்தை நிலையை வலுப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அவர் "ராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு" ஆகியவற்றை "தேசிய அதிகாரத்தின் இரு இறக்கைகள்" என்று அழைத்தார்.

"நாங்கள் களத்தையும் கைவிடவில்லை, பேச்சுவார்த்தை மேஜையையும் கைவிடவில்லை," என்று அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையால் மோசமடைந்துள்ள அதன் பொருளாதாரம் பெரும் அழுத்தத்தில் உள்ளது.

அதன் தலைமை வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தையில் இருந்து முன்னுரிமையாக குறைந்தது இரண்டு விஷயங்களை விரும்புகிறது.

ஹோர்மூஸ் நீரிணையை இரான் மூடியதால் ஏற்பட்ட அதிக எண்ணெய் விலையினால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவில் முக்கியமான தேர்தல் நடக்கும் ஆண்டில், டிரம்ப் தற்போது ஆபத்துகளை எதிர்கொள்ள விரும்பவில்லை என்பதை இரான் உணர்ந்திருக்கலாம். (இருப்பினும் நிலைமையை மோசமாக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அவரது பொறுமையைச் சோதிக்கலாம்).

அதாவது, அமெரிக்காவுடன் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தில் பொருளாதாரத் தடை நிவாரணம் மற்றும் சொத்து முடக்கத்தில் இருந்து விடுபடுதல் ஆகியவற்றை முன்கூட்டியே சேர்க்க இரான் தொடர்ந்து முயலும். ஏனெனில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒரு போருக்குச் செல்வதை விட ஓர் ஒப்பந்தத்தைப் பெறவே அதிக ஆர்வமாக உள்ளார் என்பதை இரான் உணர்கிறது.

டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தனது பேட்டியில், ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஏதேனும் இரானிய சொத்துகளை முடக்குவதிலிருந்து விடுவிப்பாரா அல்லது ஏதேனும் பொருளாதாரத் தடைகளை முன்கூட்டியே நீக்குவாரா என்று கேட்கப்பட்டது.

அவரது பதில்: "இல்லை."

இன்னும் ஒப்பந்தம் ஏற்படாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் நிலையற்ற தன்மை அமெரிக்காவையும் இரானையும் மற்றொரு நேரடிச் சண்டைக்குள் தள்ளக்கூடிய வாய்ப்பு கணிசமாகவே உள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net