நரம்பியல் சிகிச்சை சேவைகளைப் பரந்தளவிலும் வினைத்திறனுடனும் முன்னெடுக்கும் நோக்கில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 99 மில்லியன் ரூபா செலவில் முழுமையாகப் புனரமைக்கப்பட்ட “நரம்பியல் நிறுவனம்” (Institute of Neurology) இன்று (1) திங்கட்கிழமை மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்படவுள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்ஸக விஜேமுனியின் பங்கேற்புடன் இந்தத் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
நவீன வசதிகளுடன் புதிய வார்டுகள்
இத்திட்டத்தின் கீழ் 52 மில்லியன் ரூபா செலவில் நவீனமயமாக்கப்பட்ட 62, 63 ஆகிய வார்டு வளாகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. இவ்வளாகம் தலா 22 படுக்கைகளைக் கொண்ட வார்டுகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம், நூற்றாண்டுப் பழமையான 16ஆம் இலக்க வார்டில் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கிவந்த 3 மற்றும் 4ஆம் நரம்பியல் பிரிவுகள் இனிமேல் புதிய வசதிகளுடன் தடையின்றி இயங்கவுள்ளன.
மேலும், இதன் தரைத்தளத்தில் 22 மில்லியன் ரூபா செலவில் உடற்பயிற்சி சிகிச்சை பிரிவும், மூன்றாவது மாடியில் 25 மில்லியன் ரூபா செலவில் பேச்சு மற்றும் தொழில்சார் சிகிச்சை (Speech & Occupational Therapy) பிரிவுகளும், மண்டபமும் புனரமைக்கப்பட்டுள்ளன.