திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட பாலம் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. ரூ.700 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவான்மியூர் – உத்தண்டி இடையே 4 வழி உயர்மட்ட பாலத்தை ரூ.1,400 கோடியில் கட்டித் தருவதாக மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த திலிப் பில்ட்காப் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்தது.
அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்காமல், ரூ.2,100 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கியிருந்த ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர்.கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த டிசம்பர் 24-ம் தேதி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து தற்போதைய அரசு ஆய்வு செய்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மகிழ்ச்சியளிக்கின்றன. மக்களின் வரிப்பணம் ரூ.700 கோடியை ஊழல் மூலம் சுரண்டும் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவது வரவேற்கத்தக்கதாகும்.
கடந்த ஆட்சியில் இதன் பின்னணியில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். எனவே எந்தத் தயக்கமும் இல்லாமல் திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட பாலம் திட்டத்தை செயல்படுத்த வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.