சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று முற்பகல் 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இன்றைய தினம் முத்திரை தீர்வை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழுள்ள கட்டளை, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்திச் சட்டத்தின் கீழுள்ள கட்டளை ஆகியவற்றுக்கு அங்கீகாரம் பெறப்படவுள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக, உற்பத்தி தீர்வை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழுள்ள கட்டளை, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழுள்ள தீர்மானம் ஆகியன இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், பொதுச் சேவை பாதுகாப்புச் சட்டத்தின் கீழான தீர்மான விவாதத்தின் பின்னர் அங்கீகரிக்கப்படவும் உள்ளது.
நாளை தொலைத்தொடர்பு அறவீடு திருத்த சட்டமூலம் மற்றும் நிதி திருத்த சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அதற்கு அடுத்த நாள் மத்தியஸ்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு, குற்றவியல் கருமங்களில் பரஸ்பரம் உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளை என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
வெள்ளிக்கிழமை, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் 20 பில்லியன் ரூபா மேலதிக மதிப்பீடு ஆகியன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், அவற்றுக்கு அங்கீகாரம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.