← முகப்பு செய்திகள்

சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி

🕐 09 Jun 2026 📂 செய்திகள் 2 பார்வைகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி

எங்க வீட்டுக் குலதெய்வம் பகுதிக்காக அவரை அணுகி, எப்போது வரலாம் என்று கேட்டதும், கடவுளைப்பற்றிப் பேச காலம் பார்க்கவேண்டாம், இப்பவே வாங்க என்று வரவேற்றார். சாதாரணக் கதையையே சரவெடியாகச் சொல்லி அதிரவைப்பவர், குலதெய்வத்தைப் பற்றிக் கேட்டதும், குலவை ஒலி அதிர்வதுபோல் மளமளவென கொட்டத் தொடங்கினார். திரைக்கதை மன்னர் தமது இறை அனுபவத்தை சிலாகித்துச் சொல்லச் சொல்ல, அந்த சிலிர்ப்பு அட்சரம் பிசகாமல் நம்மையும் தொற்றிக்கொண்டு, அவருடன் சேர்ந்து நாமும் ஒரு ஆன்மிக பயணம் சென்ற அனுபவமாகவே அது அமைந்தது.

இதோ அந்த பக்திப் பயணத்தில் நீங்களும் வாருங்கள்.

"எனக்கு ஆந்திராதான் பூர்வீகம். அந்தப் பகுதியில கம்மவார் நாயுடுன்னு எங்களச் சொல்வாங்க. முந்தைய காலகட்டத்துல எங்க முன்னோர்கள் வசித்த இடங்கள் மேல இஸ்லாமியர்கள் படை யெடுப்பு நடந்திருக்கு. அந்த நேரத்துல வீட்டில் உள்ள பெண்களை காப்பாற்ற, ஆண்கள் சண்டை போட வேண்டிய நிர்பந்தம் உருவாச்சு. ரெண்டு தரப்புக்கும் இடையே நடந்த அந்த சண்டையில நிறைய பேர் இறந்திருக்காங்க. அந்த சம்பவத்துல, தன்னைக் காப்பாற்ற உயிர்விட்ட கணவரை இழந்த துக்கம் தாங்க முடியாம மனைவியும் உடன்கட்டை ஏறுறது அங்கே வழக்கமாக இருந்திருக்கு.

அப்படிப் படையெடுத்து வந்த இஸ்லாமியர்களோட சண்டைபோட்டு தன் கணவர் வேங்கடசாமி நாயுடு உயிரிழந்த விஷயத்தைக் கேட்டு அவர் மனைவி லிங்கம்மாள் உடன் கட்டை ஏறி உயிர விட்டிருக்காங்க. புருஷனுக்காக உடன்கட்டை ஏறி உயிரை மாய்ச்சுக்கிட்ட அந்த லிங்கம்மாளைத்தான் நாங்க குலதெய்வமா கும்பிடறோம். தலைமுறை தலைமுறையாக அவரைத்தான் கோயில் கட்டி வணங்கி வருகிறோம். லிங்கம்மாளைக் கும்பிடறதால, மல்லினார் குலத்தைச் சேர்ந்தவங்க என்கிற அடையாளமும் எங்களுக்கு உண்டு!" குலதெய்வத்துக்கான அறிமுகத்தைக் கொடுத்தவர், தொடர்ந்து பேசினார்.

"ஆந்திராவைச் சேர்ந்த கம்மவார் நாயுடுகள் பொதுவா ரேணுகா தேவியைத்தான் குலதெய்வமாகக் கொண்டாடுவாங்க. அங்கே அதுக்கான காரணமும் உண்டு. ஆந்திராவுல இருந்த மக்கள் தெற்கு திசை நோக்கி இடம்பெயர்ந்து வந்தப்போ கடப்பா பக்கத்துல பாலாறைக் கடக்க முடியாம சிரமப்பட்டிருக்காங்க. அப்போ அவங்களுக்குத் துணையா வந்து அந்தத் தடையை நீக்கி அம்மக்கள் ஆற்றைக் கடந்து செல்ல உதவி செஞ்சு, அவங்களை நல்லபடியா வழி அனுப்பிவைச்ச தெய்வம், ரேணுகாதேவி. அதனால, அந்த அம்மனைத்தான் பெரும்பாலான கம்மவார் நாயுடு மக்கள் தங்களோட குலதெய்வமா கும்பிட்டு வர்றாங்க

அதேமாதிரி, கம்மவார் நாயுடு பிரிவுல மல்லினார், காளையர்னு நிறைய உட்பிரிவுகளும் இருக்கு. இதுல விவசாயத்தை குலத்தொழிலாகக் கொண்ட மக்கள் எல்லம்மாளைத் தங்களோட குலதெய்வமா வணங்கி வர்றாங்க!" என்றவர், தமிழ்நாட்டில் குலதெய்வக் கோயிலை கட்டியதற்கான காரணத்தைச் சொல்லத் தொடங்கினார்.

"பொதுவா, ஒரு குடும்பம் ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்குப் போகறாங்கன்னாலே அங்கே இருக்கற தங்களோட உணர்வுகள், நினைவுகளையும் சுமந்துகிட்டுதான் போவாங்க. அதுல இறைநம்பிக்கையும் அடங்கும். அதனாலதான் ஊரு விட்டு வேறொரு ஊருக்கு வந்தாலும் தங்களோட பாரம்பரியத்தை பூர்வீகத்தை யாருமே மறக்க மாட்டாங்க. இப்படி வேற ஊருக்குப் போன பலர்கிட்டே கேட்டீங்கன்னா, அவங்க குலதெய்வம் இன்னும் பூர்வீக ஊர்லதான் இருக்குனு சொல்வாங்க,

ஆனா, ஆந்திராவுல இருந்து ரெண்டு, மூணு தலைமுறைக்கு முன்பே வெளியேறிவங்க, இந்த விஷயத்துல கொஞ்சம் வேறமாதிரி யோசிச்சிருக்காங்க. அதாவது, நாம ஊருவிட்டு ஊரு போகற மாதிரி, குலதெய்வத்தையும் எங்கே போனாலும் கூடவே கூட்டிகிட்டுப் போவோம்னு தீர்மானிச்சிருக்காங்க. அதனால, அங்கே பூர்வீகத்துல குலதெய்வக் கோயில் இருந்தாலும் இவங்க எங்கேயெல்லாம் வந்து எந்தப் பகுதியில தங்கறாங்களோ அங்கேயும் தங்களோட குலதெய்வத்துக்குக் கோயில் எழுப்பினாங்க; கும்பிட்டாங்க, ஆராதிச்சாங்க.

அந்தமாதிரி இடம்பெயர்ந்த பலர், திருப்பதி வழியா வந்து கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை இப்படித் தென் தமிழகத்துல பல ஊர்கள்ல குடியேறினாங்க. எழுத்தாளர் கிராஜாநாராயணன் தனது 'கோபல்லபுரத்து மக்கள்', 'கரிசல் காட்டுக் கடுதாசி புஸ்தகங்கள்ல தெலுங்கு மக்கள் எப்படி இங்கே வந்து தங்களோட வசிப்பிடத்தை கிரியேட் பண்ணிக்கிட்டாங்க அப்படிங்கறதை தெளிவா எழுதியிருப்பார்.

அப்படி இங்கே வந்த மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழத் தொடங்கியிருக்காங்க. எப்படி நில அமைப்பை நிறுவினாங்க, காட்டு மாடுகளை எப்படி தங்கள் வீட்டு பசு மாடுகளாக பயிற்சி கொடுத்து வளர்த்தாங்க இப்படிப் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே இருக்கு.

இந்தமாதிரி ரெண்டு, மூணு தலை முறைக்கு முன்னால வந்த முன்னோர்கள்ல எங்க குடும்ப உறவுக்காரங்க அப்போ பொள்ளாச்சி பகுதியில தங்கினாங்க. அவர்களுக்கும் விவசாயம்தான் தொழில் அப்படி வசிக்கும்போதுதான் பொள்ளாச்சி போகற வழியில உள்ள நெகமம் பகுதியில உள்ள வீ.வேலூர் என்கிற ஊர்ல எங்களுக்கான லிங்கம்மாள் குலதெய்வக்கோயிலைக் கட்டியிருக்காங்க!” என்றவர், குலதெய்வத்துடனான தன் அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

"என்னோட அம்மா, தாத்தா, பாட்டி காலம் வரைக்கும் அந்த ஊர்லதான் இருந்தாங்க. ஒரு கட்டத்துல மழை இல்லாமப் போய் விவசாயத்தில் வருமானம் குறைஞ்சிடுச்சு. அதனால, பிழைப்புதேடி அந்த ஊர்ல இருந்து இடம்பெயர்ந்து மில் வேலைக்காகவும், வொர்க் ஷாப் வேலைக்காகவும் எங்க முன்னோர்கள் கோவைப் பகுதிக்கு வந்திருக்காங்க. அப்படி கோவைக்கு வந்தாலும் குலதெய்வ வழிபாட்டுக்காக நெகமம் பகுதிக்குத் தவறாமப் போய்டுவாங்க.

சென்னையில இருந்தாலும் இப்பவும் வருஷா வருஷம் தவறாம குலதெய்வக் கோயிலுக்குப் போயிடுவேன். கோவை போனாலே குலதெய்வம் கோயிலுக்குப் போகணும்கிற எண்ணம் வந்துடும். இப்போதான்னு இல்லை, சினிமாவுல நுழையறதுக்கு முன்னால் இருந்து, உதவி இயக்குநர், இயக்குநர், நடிகர்னு பிஸியான காலகட்டத்துலயும் தொடர்ந்து குலதெய்வக் கோயிலுக்குப் போய்கிட்டுதான் இருந்தேன். இப்பவும் போய்கிட்டு இருக்கேன்.

எங்க குலதெய்வக் கோயில்ல பொங்கல் வைச்சு சிறப்பு பூஜை செய்றது ரொம்ப விசேஷம். இப்பவும் அங்கேதான் என் அண்ணன்மார்கள் எல்லாரும் இருக்காங்க குடும்பத்தோட சேர்ந்து கோயிலில் எல்லா விசேஷத்தையும் நல்லபடியா நடத்திடுவாங்க!" என்றவர், தனக்கு கடவுள் மீதான நம்பிக்கை பிறந்தது எப்படி என்கிற விஷயத்தையும் நம்மோடு பகிர்ந்தார்.

“சாமி பக்தி எனக்கு எங்கேர்ந்து வந்துச்சுனு யோசிச்சா, அது அம்மாகிட்ட இருந்துதான் வந்துச்சுன்னுதான் சொல்வேன். பொதுவா நாம எல்லாருமே சின்ன வயசுலேயே சாமி, பக்தி, குலதெய்வம் இப்படியெல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்க்கப்படுறோம்னுதான் நினைக்கிறேன். பெரியவங்க சொல்றது சரியா இருக்கும்னு நமக்குள்ள இயல்பாவே ஒரு உணர்வு வந்துடும். இன்னைக்கு பிரபஞ்சத்துல நடக்கற சில விஷயங்கள் பற்றி யோசிக்கும்போது எதோ ஒரு சக்தி இருக்கு என்கிற ஃபீலிங்ஸ் வந்துடுது. 'கண்டவர். விண்டிலர்; விண்டவர் கண்டிலர்'னு சொல்ற மாதிரி, இங்கே சாமியைப்பற்றி தத்ரூபமாக அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க, புரிஞ்ச வங்க யாருமே இல்லைன்னுதான் தோணுது.

நமக்கு முன்னும், அவங்களுக்கு முன்பும்வாழ்ந்தவங்கதான் காலப்போக்குல கடவுளாகப் பார்க்கப்படுறாங்க. அவங்கதான் நாளாக.. நாளாக; நாலு அல்லது அஞ்சு தலைமுறைக்கு பிறகு தெய்வமா கும்பிடப்படறாங்க. எல்லையம்மன், காத்து, கருப்பு, அய்யனார், எல்லைச் சாமி இவங்களெல்லாம் அப்படி வந்தவங்கதான்!" என்றவர்,

"எங்க அம்மா எனக்குச் சொல்லிக் கொடுத்ததை, என் பிள்ளைகளுக்கு நான் சொல்றேன். பிறந்தநாள் தொடங்கி முக்கியமான ஒவ்வொரு விசேஷத்தின்போதும் அவங்க குலதெய்வத்தைக் கும்பிடறாங்க. என் அம்மா எப்படி எனக்கு நம்பிக்கையை விதைச்சாங்களோ, அதேமாதிரி நானும் என் சந்ததிகளுக்கு அந்த நம்பிக்கையைக் கடத்தியிருக்கேன்! முன்னோர்கள் பாதையில போறதுதான் நமக்கு என்றென்றைக்கும் நல்லது. அதுதான்

நமக்கான வாழ்க்கையில சிக்கல் இல்லாத சீரான பாதை! குலதெய்வ வழிபாடும் அப்படித்தான். நம்மை எந்தக் குறையும் இல்லாத பாதையில வழிநடத்திச் செல்லும்!" அடுத்ததலைமுறைக்கும் தெய்வநம்பிக்கையை விதைத்துவிட்டதைச் சொல்லி முடித்தபோது, அவரது வார்த்தைகளில் தொனித்த பெருமிதம் நம்மையும் தொற்றிக்கொண்டது. நாமும் நம் தலைமுறையிடம் பக்தியை விதைக்க வேண்டும் என்ற உணர்வும் எழுந்தது.

படங்கள்: தாமு ஜெயான்

எழுத்து: மோகன் மகராஜன்

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் இன்ற
தமிழ் · 09 Jun 2026
2
உயிரிழந்தவர், கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் ச
3
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு
4
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels
5
ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெ
தமிழ் · 09 Jun 2026
6
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர
7
மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இ
தமிழ் · 09 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net