← முகப்பு செய்திகள்

சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 12 பார்வைகள்
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?

பட மூலாதாரம், R. SATISH BABU/AFP via Getty Images

இந்த ஆண்டு மே 14-ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு மிகவும் முக்கியமான வழக்கு ஒன்றில் தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

இந்த முடிவு இந்தியாவில் மக்கள் எவ்வாறு தங்களின் மதங்களைப் பின்பற்றலாம் என்பதில் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகிறது.

2018-ஆம் ஆண்டு கேரளத்தில் உள்ள சபரிமலை கோவில் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது.

அந்த தீர்ப்பின்படி 10 முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது. தற்போதைய வழக்கும் இந்த தீர்ப்புடன் தொடர்புடையது தான்.

சபரிமலை தலைமை அர்ச்சகர், பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் உள்பட 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களின் மீதான விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் நிறைய கேள்விகள் உள்ளன, பெரிய அமர்வு தான் அதனை முடிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி, 9 நீதிபதிகள் அமர்வுக்கு இந்த விவகாரம் பரிந்துரைக்கப்பட்டது.

இந்தியாவின் மதச்சார்பற்ற அரசமைப்பில் மதம் என்பது சிக்கலான விவகாரமாகவே இருந்துவந்துள்ளது. ஒவ்வொரு இந்தியரும் தங்களின் மதத்தைப் பின்பற்றும் அடிப்படை உரிமையை அரசமைப்பு வழங்குகிறது. அதே போல், சில நேரங்களில் இந்த உரிமைகள் கட்டுப்படுத்தப்படலாம் என்பதற்கான வழிகளையும் அரசமைப்பு வழங்குகிறது.

மதச் சுதந்திரம் மற்றும் அதன் கட்டுப்பாடுகள் தொடர்புடைய பல கேள்விகளை உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு தீர்மானிக்கும். இதன் தாக்கம் பல ஆண்டுகளுக்கும் உணரப்படும்.

வழக்கின் பின்னணி

சபரிமலை, உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு

பட மூலாதாரம், Getty Images

இந்த விவகாரத்தைப் புரிந்துகொள்ள ஒருவர் அரசமைப்பின் கட்டமைப்பை புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக பிரிவுகள் 25 மற்றும் 26 பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

அரசமைப்பின் பிரிவு 25 அனைத்து நபர்களும் மதத்தை ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதற்கும், பரப்புவதற்குமான சம உரிமையை வழங்குகிறது.

எனினும் இந்த உரிமை பொது ஒழுங்கு, நெறி, சுகாதாரம் மற்றும் அரசமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள இதர அடிப்படை உரிமைகளால் கட்டுப்படுத்தப்பட்டலாம் என்றும் அந்தப் பிரிவு தெரிவிக்கிறது.

அதே போல் மத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய எந்தப் பொருளாதார, நிதி, அரசியல் மற்றும் இதர மத சார்பற்ற செயல்பாடுகளையும் அரசாங்கம் விதிகளின் மூலம் ஒழுங்குபடுத்தலாம் என்றும் அந்தப் பிரிவு குறிப்பிடுகிறது.

அனைத்து பின்னணியில் இருந்து வரும் இந்துக்களும் சமூக நலன் அல்லது இந்து மத நிறுவனங்களில் பங்கேற்பதற்கான உரிமையை வழங்க அரசாங்கம் சட்டம் இயற்றலாம்.

சபரிமலை, உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு

பட மூலாதாரம், R. SATISH BABU/AFP via Getty Images

அதே வேளையில், பொது ஒழுங்கு, நெறி மற்றும் சுகாதாரத்திற்கு உள்பட்டு ஒவ்வொரு மதப் பிரிவும் தங்களின் மதத்துடன் தொடர்புடைய விவகாரங்களை நிர்வகித்துக் கொள்வதற்கான முழு சுதந்திரம் உள்ளது என பிரிவு 26 தெரிவிக்கிறது.

இந்த இரண்டு பிரிவுகளும் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டுள்ளன. அவை

கடந்த காலங்களில் இது தொடர்பாக பல முக்கிய விவகாரங்களில் நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

கோவில்களில் அர்ச்சகர்களை அரசாங்கம் நியமிக்கலாமா? பக்ரீத் சமயத்தில் மாடுகளைப் பலியிடுவது இஸ்லாத்தில் கட்டாயமானதா? மதத்தில் இருந்து ஒருவரை வெளியேற்றும் அதிகாரம் தாவூதி போரா சமூகத்தின் தலைவருக்கு உள்ளதா? சமணர்கள் சாகும் வரை நோன்பு இருக்க அனுமதிக்கப்படலாமா? முத்தலாக் கூறுவது அரசமைப்புக்கு உள்பட்டதா? ஆகியவை இதற்கு சில உதாரணங்கள்.

மதத்துடன் தொடர்புடைய நடைமுறைகள் எவை?

சபரிமலை, உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP via Getty Images

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, 1950-கள் தொடங்கி உச்ச நீதிமன்றம் "அடிப்படை மத நடைமுறைகள் சோதனை (Essential Religious Practices Test) என்கிற ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தச் சோதனை ஒரு குறிப்பிட்ட நடைமுறை அந்த மதத்திற்கு அத்தியாவசியமானதா என்பதை ஆராய்கிறது.

எனினும் இந்தச் சோதனை கடந்த காலங்களில் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தது. நீதிபதிகளுக்கு அரசமைப்பு மற்றும் சட்ட விவகாரங்களில் புரிதல் இருக்கிறது, ஆனால் மத விவகாரங்களில் அவர்கள் நிபுணர்கள் அல்ல என்பது தான் முக்கியமான விமர்சனமாக உள்ளது.

இந்த விவகாரங்கள் சபரிமலை கோவில் வழக்கில் எழுந்தன. கேரளாவில் உள்ள சுவாமி ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு மாதவிடாய் ஒரு காரணமாக இருந்தது.

2018-ஆம் ஆண்டு அவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன.

2018 தீர்ப்பு என்ன சொல்கிறது?

சபரிமலை, உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு

பட மூலாதாரம், MANJUNATH KIRAN/AFP via Getty Images

2018-ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பில் நான்கு நீதிபதிகள், அனைத்து பெண்களையும் சபரிமலை கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கலாம் என தங்களின் தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.

இதில் மூன்று நீதிபதிகள், பெண்கள் கோவிலுக்குள் நுழைவதை தடுக்கும் நடைமுறை இந்து மதத்திற்கு தேவையில்லை எனத் தெரிவித்திருந்தனர்.

எனினும் ஐந்து நீதிபதிகளில் ஒருவர் மற்ற நால்வரின் தீர்ப்பில் முரண்பட்டார். இது ஒரு மதச்சார்பற்ற சமூகம், எந்த மத நடைமுறைகள் பின்பற்றப்படலாம், பின்பற்றப்படக் கூடாது என்பதை நீதிமன்றங்கள் தெரிவிக்கக்கூடாது என அவர் வாதிட்டிருந்தார்.

சபரிமலை தீர்ப்புக்கு பலத்த எதிர்ப்பு எழுந்திருந்தது. அதன்பிறகு அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. 2019-இல் ஐந்து நீதிபதிகள் அமர்வு 3:2 என்கிற பெரும்பான்மையில் வழங்கிய தீர்ப்பில் மேல்முறையீட்டு மனுக்களை நிலுவையில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது.

இதில் பெரிய அமர்வு முடிவு செய்ய வேண்டிய பல கேள்விகள் இருந்ததாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனால் இந்த வழக்கு 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டு 2026-இல் விசாரணைக்கு வந்தது.

2018-இல் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியா, இல்லையா என்பதை 9 நீதிபதிகள் அமர்வு தங்களுடைய தீர்ப்பில் நேரடியாக முடிவு செய்யாது என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

மதத்திற்கான அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய சில கொள்கைகளின் மீது மட்டுமே நீதிமன்றம் முடிவு செய்யும். அதன் அடிப்படையில், இரண்டாவது அமர்வு சபரிமலை வழக்கில் தங்களுடைய தீர்ப்பை வழங்கும்.

இந்த தீர்ப்பு சபரிமலை விவகாரம் மட்டும் அல்ல, இதர மதங்களுடன் தொடர்புடைய விவகாரங்களையும் பாதிக்கும்.

நீதிமன்றத்தின் முன் உள்ள கேள்விகள்

சபரிமலை, உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு

பட மூலாதாரம், Santosh Kumar/Hindustan Times via Getty Image

தற்போது நீதிமன்றத்தின் முன் உள்ள கேள்விகளைப் புரிந்து கொள்வோம். அதன் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. நீதிமன்றம் எதிர்கொண்டிருக்கும் அந்த 7 கேள்விகள் என்னென்ன?

வெவ்வேறு தரப்பினர் கூறுவது என்ன?

வழக்கு விசாரணையின்போது வெவ்வேறு தரப்புகள் தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்தன. 9 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டதை வரவேற்ற வழக்கறிஞர்களுடம் கூட பல புள்ளிகளில் ஒருவருக்கொருவர் முரண்பட்டனர். எனவே இந்த வழக்கின் வாதங்களை வகைப்படுத்துவது கடினம். எனினும் சில முக்கியமான விஷயங்களை புரிந்துகொள்வோம்.

அரசாங்கத்தின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அடிப்படை மத நடைமுறைகள் சோதனையை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் மத விவகாரங்களுக்கு என அர்ப்பணிக்கப்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். எனினும் இந்தியாவில் நீதிபதிகள் அரசமைப்பு மற்றும் சட்ட விவகாரங்கள் நிபுணர்களே தவிர மத விவகாரங்களில் அல்ல என்று வாதிட்டார்.

சதி நடைமுறை போல, ஒரு மத நடைமுறை தவறானது என்றால் அதனை சீர்திருத்த அரசாங்கம் சட்டம் இயற்றலாம் என்று அவர் வாதிட்டார். எது மூடநம்பிக்கை என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது என்று தெரிவித்த அவர் 2018-இல் வழங்கப்பட்ட சபரிமலை தீர்ப்பு தவறானது என்று வாதிட்டார்.

பிரிவு 25 மற்றும் 26-இல் வழங்கப்பட்டுள்ள நெறி என்பது அரசமைப்பு நெறியைக் குறிக்காது, மாறாக சமூக நெறியைக் குறிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசமைப்பு நெறி என்றால் எந்த மத நடைமுறையும் அரசமைப்பு கொள்கைகளின் அடிப்படையில் சோதிக்கப்பட வேண்டும். ஆனால் சமூக நெறி என்பது எந்த மத நடைமுறையும், அந்த நேரத்தில் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

சபரிமலை, உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு

பட மூலாதாரம், Biplov Bhuyan/Hindustan Times via Getty Images

சபரிமலை கோவில் அர்ச்சகர்கள், அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் தாவூதி போரா சமூகத்தின் மத்திய வாரியம் உள்பட பல மத அமைப்புகளின் சார்பாகவும் வழக்கறிஞர்கள் தங்களின் வாதங்களை முன்வைத்தனர்.

தங்களின் மதத்தை எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சுதந்திரத்தை மத நபர்களிடம் வழங்கிவிட வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.

மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், 2018 சபரிமலை தீர்ப்புக்கு ஆதரவாக 9 நீதிபதிகள் அமர்வு முன்பு வாதிட்டார். தீர்ப்புக்குப் பிறகு சபரிமலை கோவிலுக்குச் சென்றதோடு தொடர்ந்து செல்ல விரும்புபவர்களை அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மதச் சுதந்திரத்திற்கு வரம்புகள் வேண்டும் என்று அவர் தெரிவித்தார். "இல்லையென்றால், சமத்துவம், சுரண்டலுக்கு எதிரான உரிமை, வாழ்வதற்கான உரிமை உள்ளிட்ட இதர அனைத்து அடிப்படை உரிமைகளும் தீவிர சவாலுக்கு உள்ளாகும்," என்று தனது எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார். எந்த மத நடைமுறையும் யாரையேனும் வெளியேற்றுகிறதா என்பதை ஆராய வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நெறி என்பது அரசமைப்பு நெறியை தான் குறிப்பிட வேண்டுமே தவிர, சமூக நெறியை அல்ல என்று அவர் வாதிட்டார். அவரைப் பொருத்தவரை பெரும்பான்மைவாத மதிப்புகளுக்கு எதிரான ஒரே பாதுகாப்பு அரசமைப்பு நெறிகள் தான்.

இந்த தீர்ப்பு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

சபரிமலை, உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு

பட மூலாதாரம், Creative Touch Imaging Ltd./NurPhoto via Getty Images

இந்த 9 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை பொருத்து பின்னர் பல வழக்குகளில் நீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது.

சபரிமலை வழக்கு அப்படிப்பட்ட முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஆனால் இதர பிரச்னைகளும் உள்ளன. தாவூதி போரா சமூகத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் உரிமை, பெண் பிறப்புறுப்பு சிதைப்பின் அரசமைப்புச் செல்லுபடித்தன்மை, பார்சி வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முஸ்லிம் மசூதிகளுக்குள் பெண்கள் நுழைவது மீதான தடை போன்ற பல உதாரணங்கள் இருக்கின்றன.

இந்த தீர்ப்பு மத விவகாரங்கள் கணிசமான தாக்கம் செலுத்தும். இது மற்ற வழக்குகளையும் பாதிக்கக்கூடும். எந்த விவகாரத்திலும் தீர்ப்பு வழங்குவது 9 நீதிபதிகள் அமர்வுக்கு அரிதானது தான்.

சபரிமலை, உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு

பட மூலாதாரம், Faisal Khan/Anadolu via Getty Images

இந்த விசாரணை அரசமைப்பு நெறி மீது கணிசமான விவாதங்களை எழுப்பியிருந்தது. பல முக்கியமான விவகாரங்களின் மீதான முடிவுகள் அரசமைப்பு நெறி அடிப்படையில் இருந்தன. தன்பால் ஈர்ப்பை குற்றமாக்கும் விதி அரசமைப்புக்கு விரோதமானது என்று அறிவித்தபோது உச்ச நீதிமன்றம் அரசமைப்பு நெறியை வலியுறுத்தி இருந்தது.

மேலும் இந்த வழக்கு பொது நல வாதிடுதல் தொடர்பாகவும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியாவில் சிறையில் உள்ள தண்டிக்கப்பட்ட கைதிகளின் நிலை, மாசுபாட்டைக் கட்டுப்படுவது தொடர்பாக மனுக்கள் என பல முக்கியமான விவகாரங்களில் பொது நல வழக்குவழக்குகள் மூலம் தீர்வு கிடைத்துள்ளன. எனவே பொது நல வழக்கு மீது நீதிமன்றம் ஏதேனும் முடிவெடுத்தால் அது பல எதிர்கால வழக்குகள் மீதும் கணிசமான தாக்கம் செலுத்தும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net