கொழும்பு, ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த வைகாசி விசாகத் திருவிழா கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் மிக விமர்சையாக ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து தினசரி விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் உள்வீதி உலாக்கள் இடம்பெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று சனிக்கிழமை (30) வெகு சிறப்பாக நடைபெற்றது.
நேற்று காலை 6.00 மணிக்கு வசந்த மண்டப பூஜைகள் பக்திபூர்வமாக ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து காலை 8.00 மணிக்கு சுவாமி உள்வீதி உலா எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் கோவில் முன்றலில் விசேட பூஜைகள் நல்முறையில் நடத்தப்பட்டன.
பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, முருகப்பெருமான் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் எழுந்தருளினார். ஜிந்துப்பிட்டி வீதி, வுல்பண்டல் வீதி மற்றும் கதிரேசன் வீதி வழியாக வீதியுலா வந்த தேர்பவனியில், ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து, தங்களின் வேண்டுதல்களையும் காணிக்கைகளையும் செலுத்தி சுவாமியின் அருளைப் பெற்றுக்கொண்டனர். வெளிவீதி உலா வந்த சித்திரத்தேர் பின்னர் ஜிந்துப்பிட்டி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
இந்தத் தேர்த்திருவிழா நிகழ்வில் இலங்கை பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் அவரது பாரியார் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டனர். அவர்களைக் கோவில் தர்மகர்த்தாக்கள் முறைப்படி வரவேற்று, பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து கௌரவித்தனர்.
அத்தோடு, ஆலயக் குருக்களினால் பொலிஸ் மா அதிபருக்கு ‘காளாஞ்சி’ வழங்கி ஆசிர்வதிக்கப்பட்டது.
இந்த வைகாசி விசாகத் திருவிழாவின் பூஜை வழிபாடுகள் அனைத்தும், சிவசுப்பிரமணிய கோவில் குரு சிவஸ்ரீ சோம ரகுராம குருக்கள் தலைமையில், ஏனைய சிவாச்சாரியார்களின் பங்களிப்புடன் மிகச் சிறப்பாகக் கொண்டு நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் ஆலய தர்மகர்த்தாக்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள், பக்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
திருவிழாவின் இறுதி நாளான இன்று (31) காலை தீர்த்தோற்சவமும், பகல் மகேஸ்வர பூஜையும் நடைபெறவுள்ளன. இன்று நடைபெறும் கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது