கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த ஆர். வைத்திலிங்கம் மீதான பல கோடி ரூபாய் ஊழல் வழக்கில், முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மற்றும் தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆகிய இரண்டுமே தில்லுமுல்லு செய்து ஊழல்வாதிகளைக் காப்பாற்ற முயல்வதாக ‘அறப்போர் இயக்கம்’ அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கட்டுமான அனுமதி வழங்குவதற்காகச் சுமார் 27.9 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) மெத்தனமாகச் செயல்பட்டு வருவதாகப் பகிரங்கப் புகார் எழுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் நிறுவனத்திற்கு 24 பிளாக்குகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளாகம் கட்ட அனுமதி வழங்கியதில், அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகனுக்குச் சொந்தமான ‘முத்தம்மாள் எஸ்டேட்ஸ்’ நிறுவனத்திற்குப் பிணையில்லா கடனாக இந்த லஞ்சப் பணம் கைமாறியதை அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கில் எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்த சூழலில், தற்போது புதிய அரசு அமைந்துள்ள நிலையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதே மௌனத்தைத் தொடர்வது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் இதுகுறித்து கூறுகையில், “முந்தைய ஸ்டாலின் அரசு இந்த ஊழல் வழக்கை நீர்த்துப்போகச் செய்யப் பார்த்தது. இப்போதுள்ள விஜய் அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையும் அதற்குத் துணையாகச் செயல்பட்டு, வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தாமல் காலத்தாமதம் செய்து வருகிறது” என்று கடுமையாகச் சாடியுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையின் இத்தகைய அலட்சியப்போக்கு, தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றத்தையே அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தகுந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட இந்த மெகா ஊழல் வழக்கில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்வதிலும், அடுத்தகட்ட கைது நடவடிக்கைகளிலும் புதிய அரசு மெத்தனமாக இருப்பது ஏன் என்று எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன. ஆளுங்கட்சியின் இந்தச் செயல்பாடானது, திரைக்குப் பின்னால் நடக்கும் அரசியல் சமரசங்களின் ஒரு பகுதியோ என்ற விவாதம் தற்போது தமிழக அரசியல் களத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.