← முகப்பு செய்திகள்

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் தடுப்புக் காவல்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 14 பார்வைகள்
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் தடுப்புக் காவல்
சுரேஷ் சாலேவின் தடுப்புக்காவல் உத்தரவு நீடிக்கப்படுகிறது..!

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் தடுப்புக் காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுரேஷ் சாலேவின் தடுப்புக்காவல் உத்தரவை மேலும் 90 நாட்களுக்கு நீடிக்கும் உத்தரவில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையெழுத்திட்டுள்ளார்.

27 மே 2026 திகதியிடப்பட்ட MOD/LEG/PTA/21/2026 என்ற தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்துள்ள ஜனாதிபதி, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கத்திலான பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 9(1) பிரிவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் ‘பிரதான சூத்திரதாரி’ என சட்டமா அதிபரால் பெயரிடப்பட்டவரும், அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சாலே, கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

ஏற்கனவே கிட்டத்தட்ட 80 நாட்களாக காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது தடுப்புக்காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் அவரைத் தடுத்து வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் என்ற தகுதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த நிலையில், இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க சதி செய்தல் மற்றும் பொது ஒழுங்கு மற்றும் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுரேஷ் சாலே மீது சுமத்தப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிரத்யேக வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக அவரை சட்டமா அதிபர் பெயரிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net