அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ட்ரக்டர் சந்திப்பு அருகில், நேற்று (26) இரவு டிப்பர் லொறியொன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
புத்தங்கலயிலிருந்து ஹொல்மங்கள நோக்கி சென்ற டிப்பர் லொறியானது, பாலிகா சந்தியிலிருந்து அம்பாறை வைத்தியசாலை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் பயணித்த மூன்று பயணிகள் அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுள் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தடயந்தலாவ மற்றும் நவகம்புர பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதான இளைஞர்கள் ஆவர்.
டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.