அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதிக்குள் சட்டவிரோதமாக 75 மில்லியனுக்கும் அதிகமான தொகையைச் சம்பாதித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் ஜூன் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை (09) இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முஹம்மத் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்குத் தொடருநரான இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்காகச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி ஆஜராகி சாட்சியங்களை நெறிப்படுத்தினார்.
திங்கட்கிழமை (09) இரு சாட்சியாளர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் விமல் வீரவன்ச அமைச்சராகப் பதவி வகித்த போது, சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்தினைச் சேர்த்ததாக இந்த வழக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.